மத தீவிரவாதத்தை ஒழிக்க புதிய சட்டங்கள் அமுலாகும்
சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு
மதத்தீவிரவாத செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும், அச்செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் புதிய சட்டங்களையும் ஒழுங்கு முறைகளையும் உருவாக்குவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கண்டி குயின்ஸ் ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் மத தீவிரவாதம் மீதான போர் என்ற தலைப்பின் கீழ் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மதத் தீவிரவாதத்துக்கெதிரான இச்சட்டங்கள் பகைமையைத் தூண்டும் பேச்சு மற்றும் பொய்த்தகவல் பரிமாற்றத்திற்கெதிராக கடுமையான அபராதங்களை விதிக்கும். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்ட மூலம் முழுமையாகவும், நியாயபூர்வமாகவும் அமுல்படுத்தப்படும்.
அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அவர்களின் நம்பிக்கைகள் மதிக்கப்படும். ஜனநாயகமும், பன்மைத்துவமும் மிக்க சமூகத்தை உருவாக்குவோம். இதன் அடிப்படையில்தான் மதத் தீவிரவாதம் மீதான போர் தொடுக்கப்படும். மத மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான தியவன்னை பிரகடனம் நல்லிணக்க சட்டத்தின் மூலம் அமுல்படுத்தப்படுவதுடன், மக்கள் அங்கீகாரம் பெற்ற மதத் தலைவர்களை உள்ளடக்கிய நல்லிணக்க மன்றமும் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும்.
சமூகங்களுடன் ஒத்திசைவு மற்றும் ஒத்துழைப்புக் குறித்த தேசிய கொள்கையை உருவாக்கவென நாம் மகா சங்கம், இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூகம் என்பனவற்றோடு கலந்தாலோசிப்போம். பாடத்திட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், பொது மக்களை அறிவூட்டவும் இக்கொள்கை பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்