வக்பு சொத்துகளின் பராமரிப்பில் நிலவும் ஊழல் மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ளன. அத்தோடு புதிய பள்ளிவாசல்கள் வக்பு சபையின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்பே நிர்மாணிக்கப்படும் வகையிலான திருத்தங்களும் வக்பு சட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளன.
வக்பு சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான வரைபொன்று தயாரிக்கப்பட்டு தற்போது அது தொடர்பான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும், முஸ்லிம் அமைச்சர்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளதென வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாசீன் தெரிவித்தார்.
இது தொடர்பில் வக்பு சபையின் தலைவர் எஸ்.எம்.எம்.யாசீன் விடிவெள்ளிக்குக் கருத்துத் தெரிவிக்கையில் ‘வக்பு சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வக்பு சபை மற்றும் சட்டவல்லுநர்கள், உலமாக்கள் அடங்கிய குழுவொன்று தேவையான திருத்தங்களை இனங்கண்டு வரைபொன்றினைத் தயாரித்துள்ளது. தற்போது அநேக வக்பு சொத்துகள் சட்டவிரோதமாக கையாளப்படுகின்றன. வக்பு சொத்துகளில் தனிநபர் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. சட்ட விரோதமான முறையில் கையாளப்படுகின்றது. நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. அதனால் இவற்றுக்குத் தீர்வு காணும் வகையிலும் வக்பு சொத்துகளைப் பாதுகாக்கும் வகையிலும் திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ளன.
புதிதாக பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படும்போது, நிர்மாணிக்கப்படுவதற்கு முன்பு வக்பு சபையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட பின்பே நிர்மாணிக்கப்பட வேண்டும்.
அத்தோடு பள்ளிவாசல்களில் இடம்பெறும் ஜும்ஆ பயான்கள் தரமானவையாக இருப்பதுடன் தகுதியானவர்களே பயான்களை நிகழ்த்தும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ளன. பயான்களுக்கான வழிமுறைகள் (Guide Lines) உள்ளடக்கப்படவுள்ளன.
பள்ளிவாசல்களுக்கான நிர்வாகிகள் தெரிவில் தகுதியானவர்களுக்கே இடமளிக்கப்பட வேண்டும். பள்ளிவாசல் பரிபாலன சபைக்கும் நிர்வாகத்திற்கான வழிமுறைகள் வகுக்கப்படவுள்ளன.
நாட்டில் பெரும்பாலான வக்பு சொத்துகள் சமூகத்துக்கு பயன்படாதவைகளாகவும் தனிநபர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் பயன்படும் வகையில் மாறியுள்ளன. இவற்றை சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இந்த திருத்தங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
இந்த வக்பு சட்டத்திருத்த வரைபு கடந்த செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த போதும் ஏப்ரலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌஸி என்போர் வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக தங்களது கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்