ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ளன. நேற்றும் இன்றும் தபால் மூல வாக்களிப்பு தினங்களாகும். இத் தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான தரப்புகளும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன. அபிவிருத்தி, பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், நல்லிணக்கம் உள்ளிட்ட சமகாலப் பிரச்சினைகளுக்கு அவற்றில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் கலாசாரம் இலங்கையில் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்ற போதிலும் வேட்பாளர்களின் தூரநோக்கு தொடர்பில் அறிந்து கொள்வதற்கும் வாக்காளர்கள் தாம் யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்னராக மேற்படி தரப்புகளின் விஞ்ஞாபனங்களை ஒருமுறை முழுமையாகப் படிப்பதும் அவசியமானதாகும்.
இது ஒருபுறமிருக்க, இம்முறை தேர்தலிலும் சிறுபான்மையினரின் வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கப் போகின்றன எனும் கருத்தை பலரும் முன்வைத்து வருகின்றனர். பேராதனை பல்கலைக்கழக அரசியல்துறைப் பேராசிரியர் ஏ.எம். நவரத்ன பண்டார கடந்த கால வாக்களிப்பு முறைகளை முன்னிறுத்து இதனை நிறுவியுள்ளார். இதே கருத்தையே சிறுபான்மையின அரசியல்வாதிகள் பலரும் முன்வைத்து பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இத் தேர்தலில் போட்டியிடும் ஒருசாரார் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரம் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்துச் செயற்படுவதையும் அவதானிக்க முடிகிறது. இதற்காக பல்வேறு நுட்பங்களைக் கையாண்டு பிரசாரங்களை முன்னெடுப்பதுடன் தமது எதிரணி வேட்பாளருக்குச் செல்லவிருக்கும் வாக்குகளை கலைப்பதற்கான உத்திகளையும் கையாண்டு வருகின்றனர். இந்த நோக்கில் சில வேட்பாளர்களையும் சிறுபான்மை சமூகத்தினுள் களமிறக்கியுள்ளனர். இதற்கப்பால் பல்வேறு அமைப்புகள், குழுக்கள், செல்வாக்குமிக்க தனிநபர்கள் மூலமாகவும் முஸ்லிம்களின் வாக்குகளை திசைதிருப்பும் மறைமுக பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இவர்களது போக்குகளை கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு இதனை இலகுவில் விளங்கிக் கொள்ளக் கூடியதாகவிருக்கும்.
தேர்தலில் தமக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களிப்பது அவரவரது உரிமையாகும். அவ்வாறானதொரு தீர்மானத்தை மக்கள் சுதந்திரமாகவே எடுக்க வேண்டும். மாறாக எவரும் தீர்மானங்களை வலிந்து திணிக்க முடியாது. போலியான காரணங்களைக் கூறி மக்களை தவறாக வழிநடத்த முடியாது. துரதிஷ்டவசமாக இன்று ஒருசாரார் மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தி அடிபணியச் செய்வதற்கான பிரசாரங்களை முன்னெடுக்க முனைவது கவலைக்குரியதாகும். ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்காவிட்டால் முஸ்லிம்கள் வன்முறைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் எனும் பொருள்பட முஸ்லிம் பிரமுகர் ஒருவர் முன்வைத்த கருத்து பலத்த சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களும் வழிவகுத்துள்ளது. இவ்வாறான கருத்துக்களை பகிரங்க தளங்களில் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வது அனைவருக்கும் சிறந்ததாகும்.
யார் எவ்வாறான உத்திகளை கையாண்டு பிரசாரங்களை முன்னெடுத்த போதிலும் முஸ்லிம் சமூகம் தனது வாக்குப்பலத்தை சிதறடிக்காது ஒற்றுமையை நிரூபிக்க வேண்டியது அவசியமாகும். யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்க முன்னர் களத்திலுள்ள வேட்பாளர்களின் கடந்த கால வரலாறு குறித்தும் எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்தும் நன்கு ஆராய வேண்டும். ஊழல் மோசடி, இனவாதம், சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு, நாட்டின் சுபீட்சமான எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு நாம் வாக்களிக்க வேண்டும். ஒரு வாக்கை மாத்திரம் அளிப்பதாயின் அதற்குப் பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்து அவருக்கு புள்ளடி இட முடியும். இன்றேல் மூன்று விருப்பு வாக்குகளைப் பயன்படுத்தி மூவருக்கு இலக்கங்கள் மூலம் வாக்களிக்கலாம்.
இம்முறை விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துமாறும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதால் மக்களை வாக்களிப்பு முறை குறித்து தெளிவூட்ட வேண்டியுள்ளது. இந்த விழிப்பூட்டலை அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி சிவில் அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும். மக்களின் வாக்குகள் அறியாமையினால் நிராகரிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இந்த விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறாம்.-Vidivelli