5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: ரவீந்திரவுக்கு விளக்கமறியல்
கோட்டை பிரதான நீதிவான் உத்தரவு
- எப்.எம்.எப்.பஸீர்
வெள்ளை வேனில் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு பேரைக் கடத்திய விவகாரத்தில் பிரதான சந்தேகநபர் நேவி சம்பத்துக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்னவை எதிர்வரும் டிசெம்பர் மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை பிரதான நீதிவான் ரங்க திசாநாயக்க நேற்று உத்தரவிட்டார்.
இந்த விவகாரத்தில் சி.ஐ.டி. அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்னவை கைதுசெய்ய முயற்சித்து வந்த நிலையில் நேற்று முற்பகல் கோட்டை நீதிமன்றில் அவர் சரணடைந்தார். இதனையடுத்து இடம்பெற்ற நீண்ட விசாரணைகளின் பின்னரே அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்னவை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபரான நேவி சம்பத்துக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று கோட்டை நீதிவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது, இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைதாகி பிணையில் உள்ள சந்தேகநபரான லக்சிறி அமரசிங்க எனும் சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது குற்றப்புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.திசேரா பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, சேனக பெரேரா உள்ளிட்டோர் ஆஜராகினர். இந்நிலையில், வழக்கு விசாரணைகளில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.திசேரா மேலதிக விசாரணை அறிக்கையை கையளித்து விசாரணை நிலைமையை தெளிவுபடுத்தும் போது, அங்கு ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இந்த விவகாரத்தில் அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்ன சார்பில் விடயங்களை தெளிவுபடுத்த நீதிமன்றில் அனுமதி கோரினார்.
இதன் போது அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்ன கடற்படை சீருடையில் மன்றினுள் இருந்தார். எனினும் நீதிவான் ரங்க திசாநாயக்க இந்த விவகாரத்தில் ரவீந்திரவை கைதுசெய்ய உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் மன்றில் சரணடைந்தால் மட்டுமே அவர் தரப்பில் விடயங்களை தெளிவுபடுத்த அனுமதிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேம ரத்னவிடம் கூறினார்.
இதனையடுத்தே குற்றப் புலனாய்வு பிரிவினர் மன்றில் மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து கொண்டிருந்த போது, அட்மிரல் ரவீந்திர, மன்றில் சரணடைந்ததுடன் பிரதிவாதி கூண்டில் சீருடையுடன் ஏற்றப்பட்டார். இதன்போது ரவீந்திர சீருடையுடன் பிரதிவாதி கூண்டில் ஏற்றப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேம ரத்ன கருத்துக்களை முன்வைக்க முற்பட்ட போது, நபர், பதவி, அந்தஸ்த்து, சீருடை என எதுவும் சட்டத்தின் முன் விசேட வரப்பிரசாதமாக அமையாது எனவும் எந்த உடையில் சந்தேகநபர் வருகிறார் என்பது தனக்கு தேவையற்றது எனவும் நீதிவான் ரங்க திசாநாயக்க அந்த கருத்துக்களை நிறுத்தினார்.
இந்நிலையில், நீதிமன்றுக்கு நேற்று விசேட மேலதிக அறிக்கையை முன்வைத்த சீ.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.திசேரா தெரிவித்ததாவது,
அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்ன பி.732 எனும் வழக்கின் சந்தேகநபரான ஹெட்டியாராச்சிக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பில் சாட்சிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அது தொடர்பில் அவரை விசாரணைக்குட்படுத்த சீ.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடாக முதலில் கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி கடிதம் அனுப்பப்பட்டது.
எனினும் அவ்விசாரணைகளுக்கு ஆஜராகாது அவர் மெக்சிகோவுக்கு விஜயம் செய்தார். அங்கு சென்ற பின்னரே தாம் மெக்சிக்கோவுக்கு செல்வதாகவும் அதனால் வேறு ஒரு திகதியை தனக்கு ஒதுக்கி தருமாறும் அவர் கோரியிருந்தார். அதன் பின்னரும் அவர் விசாரணைகளுக்கு சமூகமளிக்காத நிலையில் அவரை கைதுசெய்ய போதுமான சாட்சியங்கள் இருப்பதாக நாம் நீதிமன்றுக்கு தெரிவித்தோம். அதன்படி இந்த நீதின்றின் முன்னாள் நீதிவானாலும் உங்களாலும் மூன்று சந்தர்ப்பங்களில் அவரை கைதுசெய்து மன்றில் ஆஜர்செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரமே கடந்த 27 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு விசாரணைகளுக்காக அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்னவை நாம் அழைத்தோம். அது தொடர்பில் அழைப்புக் கடிதம் கடந்த 23 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள முப்படைகளின் அலுவலக பிரதானியின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. குற்றவியல் சட்டத்தின் 109 (6) ஆம் சரத்தின் பிரகாரம் சீ.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணை அறையின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா அந்த கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தார். பொலிஸ் பரிசோதகர் இலங்க சிங்க அதனை கையளித்தார்.
அட்மிரல் ரவீந்திரவின் செயலாளர் கெப்டன் சமரநாயக்க அதனை கையேற்றிருந்தார். எனினும் ரவீந்திர விசாரணைகளுக்கு வராததையடுத்து 27 ஆம் திகதி பிற்பகல் 12.15 மணியளவில் பிரதான விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வா கெப்டன் சமரநாயக்கவுக்கு அழைப்பையேற்படுத்தி அட்மிரல் ரவீந்திரவின் சமூகமின்மை தொடர்பில் வினவியுள்ளார். அந்த தொலைபேசி கலந்துரையாடல் வருமாறு,
நிஷாந்த : நான் ஐ.பி. நிஷாந்த பேசுகிறேன். பத்து மணிக்கு விசாரணைக்கு வருவதாக அட்மிரல் ரவீந்திர கூறியிருந்தார். எனினும் அவர் இன்னும் வரவில்லை.
கெப்டன் சமரநாயக்க: நிஷாந்த நான் நினைத்தேன், நீங்கள் இங்கு வந்து வாக்குமூலம் பெறுவீர்கள் என்று, அது தொடர்பில் யாரும் உங்களுக்கு ஆலோசனை வழங்கவில்லையா?
நிஷாந்த : எனக்கு யாரும் அப்படி ஆலோசனை தரவில்லை. எனது கடிதத்தில் விசாரணைக்கு இங்கு வருமாறு நான் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன்.
கெப்டன் சமரநாயக்க : அது தொடர்பில் ஆராய்ந்து நான் மீண்டும் அழைக்கின்றேன் என அந்த கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது.
மீளவும் விசாரணை அதிகாரியை அழைத்துள்ள கெப்டன் சமரநாயக்க “சீ.டி. எஸ். சேர் தொலைபேசியில் ஐ.ஜீ.பீ.யிடமும் செகரெட்ரி டிவென்ஸிடமும் சீ.ஐ.டி.க்கு இங்கு வருமாறு கூறியுள்ளாராம்” என தெரிவித்துள்ளார். எனினும் தனது உயரதிகாரிகள் தனக்கு அவ்வாறான எந்த அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை என நிஷாந்த சில்வா இதன்போது கூறியுள்ளார்.
அதன்படி, கடந்த 27 ஆம் திகதி விசாரணை அதிகாரி குற்றவியல் சட்டத்தை 109 ஆவது சரத்துக்கமைய விசாரணைக்கு அழைத்தும் விசாரணைக்கு வருகை தராமையானது தண்டனை சட்டக்கோவை 72 ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமாகும். ( இதன்போதே சந்தேகநபராக அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்ன நீதிமன்றினால் பெயரிடப்பட்டு அவரது சரணடைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரதிவாதி கூண்டிலும் ஏற்றப்பட்டார்.)
நீதிமன்ற உத்தரவுக்கமைவாக அட்மிரல் ரவீந்திரவை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்த போது, பிரதான விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா இடம் மாற்றப்பட்டார். பொலிஸ் மனிதவள பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் கையொப்பத்துடன் பொலிஸ்மா அதிபரின் உத்தரவு தொலைநகல் ஊடாக அனுப்பப்பட்டிருந்தது.
கடந்த 18 ஆம் திகதி மாலை 6.30 முதல் உடன் அமுலுக்கு வரும்படி சேவை அவசியம் கருதி நீர்கொழும்புக்கு இவ்வாறு இடமாற்றப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இடமாற்றம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பியிருந்தார்.
அதில் கடந்த 16 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் கடிதம் ஊடாக பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தொடர்பில் கூறியிருந்த மூன்று விடயங்களுக்கு அவர் விளக்கமளித்திருந்தார்.
கடந்த 13 ஆம் திகதி பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் அட்மிரல் ரவீந்திர, பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டவர் எனக் கூறியுள்ளார். அத்துடன் 16 ஆம் திகதி மீண்டும் கையடக்க தொலைபேசியில் பொலிஸ்மா அதிபரை அழைத்து புலிகளுடன் தொடர்புபட்ட ஒருவரை ஏன் இன்னும் சீ.ஐ.டி.யில் வைத்திருக்கிறீர்கள் எனக் கூறி நிஷாந்த சில்வாவின் இடமாற்றத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் நிஷாந்த சில்வா புலிகள் அமைப்புடன் எந்த தொடர்பும் அற்றவர் எனவும், வேறு குற்றச்செயல்களுடனும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் அவரது விசாரணை நடவடிக்கைகள் மிகத் திறமைவாய்ந்தது எனவும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவின் பதில் கடிதத்தில் அட்மிரல் ரவீந்திர தனக்கு எதிராக விசாரணை செய்யும் பிரதான விசாரணை அதிகாரிக்கு எதிராக பொய்யான இட்டுக்கட்டப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகவும், அவர் முப்படைகளின் அலுவலக பிரதானி எனும் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிஷாந்த சில்வாவை இடமாற்றுவதன் ஊடாக இந்த விசாரணைகளை தனக்கு ஏற்றவாறு, அமைத்துக் கொள்வதே அட்மிரல் ரவீந்திரவின் நோக்கமாக இருந்துள்ளது. இவ்வாறு நிஷாந்தவை இடமாற்றம் செய்து ஒரு நாளைக்குள் மீண்டும் அவர் சீ.ஐ.டி.க்கே மீளழைக்கப்பட்டார். அவர் தொடர்ந்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் கடமை செய்திருந்தால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாரிய உயிரச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும்.
அதனால் அட்மிரல் ரவீந்திரவின் நடவடிக்கை 2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் 8 (4) அ, ஆ பிரிவுகளின் கீழ் குற்றமாகும். அதே சட்டத்தின் 10 (1) அ, ஆ பிரிவில் இது தண்டனைக்குரிய குற்றமென தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட தரப்பினரும் நேற்று நடந்த ஊடகவியளாலர்கள் மீதான தாக்குதல், நீதிமன்ற நடவடிக்கைகளின் இடைநடுவே ரவீந்திர சிறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டை மீறி தாம் விரும்பிய இடத்துக்கு சென்றுவந்தமை ஆகியவற்றையும் நீதிவானுக்கு சுட்டிக்காட்டினர். இவற்றை கருத்திற்கொண்ட நீதிவான் ரவீந்திர விஜய குணரத்னவுக்கு பிணை அளித்தால் அவர் விசாரணைகளில் தலையீடு செய்யலாம் அல்லது அந்நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்பது தெளிவாவதால், பிணை கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்தார்.
அதன்படி, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்னவை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அங்கு சென்று விசாரணை நடத்த சீ.ஐ.டி.க்கு அனுமதியளித்து வழக்கை டிசம்பர் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.