ஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு முல்லுகளும்
ஏற்பாடுகளை மேம்படுத்துவதற்கான சில ஆலோசனைகள்
- அஹமட்
முஸ்லிம்களின் கடமைகளில் ஹஜ் ஐந்தாவது கடமையாகும் என்பதை முஸ்லிம்கள் மாத்திரமல்ல பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்களும் அறிவார்கள். எனினும் ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் ஹஜ் முகவர்கள் தங்களது பொறுப்புகளை நேர்மையாக நிறைவேற்றத் தவறி விடுகின்றனர். அதனால் ஹஜ்ஜின் மூலம் எதிர்பார்க்கப்படும் அடைவுகளை அடைய முடியாதுள்ளது. இந் நிலையில் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி மேம்படுத்த வேண்டியுள்ளது.
இம்முறை ஹஜ் முகவர்களான என்.எம். டிரவல்ஸ் மற்றும் மௌலானா டிரவல்ஸ் என்பன நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் யாத்திரிகர்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தியுள்ளன. குறிப்பாக யாத்திரிகர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆறு ஹஜ் யாத்திரிகர்கள் ஒவ்வொருவரும் தலா 7 இலட்சம் ரூபா கட்டணம் செலுத்தியும், இறுதியில் அவர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாமற்போனது.
ஹஜ் ஏற்பாடுகளின் எந்தவொரு விதிமுறையென்றாலும் அதன் முன்னேற்றம் கருதி சமூகத்துடன் அல்லது பங்குதாரார்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடப்பட வேண்டும். தற்போதைய குழு உணர்வுபூர்வமாக தனது புதிய வழி முறைகளை முன்வைத்துள்ளது. ஆனால் பொது மக்களிடம் சென்று அவற்றை மீளாய்வு செய்வதற்கு பின் நிற்கிறது. இதற்காக பொது மக்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். மீளாய்வு செய்யப்பட்டு புதிய வழிமுறைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
2015 இற்கு முன்பு ஹஜ் ஏற்பாடுகள்
ஹஜ் முகவர்களால் உயர்நீதிமன்றில் சில வழக்குகள் தாக்கல் செய்யப்படும்வரை ஹஜ் ஏற்பாடுகள் முறையாக அமுலில் இருக்கவில்லை. ஹஜ் மீது முகவர்களும் அடுத்து அரசியல்வாதிகளுமே கவனம் செலுத்தினார்கள். பொதுவாக முஸ்லிம்கள், சிவில் சமூகம் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா போன்ற சமயத் தலைமைகள் ஹஜ்ஜில் எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை. முஸ்லிம் ஊடகவிலயாளர்கள் கூட இலவசமாக ஹஜ் கடமையைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்தார்களேயன்றி இது தொடர்பில் அக்கறை கொண்டிருக்கவில்லை.
அதனால் ஹஜ் ஏற்பாடுகளில் நிலவிய ஒழுங்காக திட்டமிடப்படாத அரசியல் ரீதியான நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக சரியான இலக்கை நோக்கி எறியப்பட்ட முதலாவது கல்லாக ஹஜ் முகவர்களின் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமையைக் குறிப்பிடலாம். (அது பௌஸியின் கால கட்டமாகும்) நீதிமன்றம் ஹஜ் வழிமுறைகளை (Guidelines) வழங்கியது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹஜ் முகவர்களுக்கு இடையில் இணக்கப்பாட்டினைக் கொண்டு வந்தது. ஆபத்தான நிலையிலிருந்த இஸ்லாத்தின் 5 ஆவது கடமைான ஹஜ்ஜுக்கான புதிய அத்தியாயமாக உயர் நீதிமன்றம் வழங்கிய ஹஜ் வழிமுறைகளைக் குறிப்பிடலாம்.
முன்னைய பழைய முறைமை
முன்னைய ஹஜ் ஏற்பாடுகளில் அமைச்சரே கோட்டாவை ஹஜ் முகவர்களுக்கு இடையில் பகிர்ந்தளிப்பார். ஹஜ் முகவர்கள் ஏனைய ஏற்பாடுகளை முன்னெடுப்பார்கள். ஹஜ் யாத்திரிகர்களைப் பொறுத்தமட்டில் இது மிகவும் இலகுவான முறையாகும். ஆனால் இந்த முறைமையின் கீழான பாதிப்பு என்ன வென்றால் ஒவ்வொரு முகவருக்கும் குறிப்பிட்ட அளவு கோட்டாவே வழங்கப்பட்டிருக்கும். அதனால் ஹஜ் யாத்திரிகர்களினால் ஹஜ் கட்டணம் தொடர்பில் பேரம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.
புதிய முறைமை
முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஒரு சிறந்த ஹஜ் குழுவை கலாநிதி எம்.ரி. ஸியாத் தலைமையில் நியமித்துள்ளார். அவர் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம். அவர் முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று ஹஜ் ஏற்பாடுகளுக்கென்று மிகவும் எளிதான வசதியான வழிமுறையொன்றினை அறிமுகப்படுத்தினார்.
புதிய ஹஜ் கமிட்டியினால் 2015 ஆம் ஆண்டில் ஹஜ் ஏற்பாடுகளில் அதிகமான மாற்றங்களைச் செய்ய முடியாமற்போனது. என்றாலும் 2016 ஆம் 2017 ஆம் ஆண்டுகளில் ஹஜ் குழு புதிய ஹஜ் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியது. ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியிலிருந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அக்கட்சி தோல்வியுற்றது. அமைச்சர் ஹலீமின் தொகுதியிலும் ஐக்கிய தேசியக்கட்சி உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது. தோல்வி அவருக்கு அவரது தொகுதியில் பெரும் சவால்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தனது அரசியல் பலத்தை ஹஜ் நிர்வாகத்தில் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் அவர் தனது தொகுதிக்கு 200 க்கும் அதிகமான ஹஜ் விசாக்களை வழங்குமாறு ஹஜ் குழுவை கட்டாயப்படுத்தினார். புதிதாக ஹஜ் வழிமுறையில் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவு விதிகளையும் மீறி இந்த ஹஜ் விசாக்கள் வழங்கப்பட்டன. இச் செயல் மூலம் அவர்கள் தங்களது ஹஜ் வழிமுறையின் ஒழுங்குகளை மீறியுள்ளார்கள்.
இச் சம்பவம் ஹஜ் முகவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சில முகவர்கள் மேலும் பல அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் பிரயோகித்ததால் ஜனாதிபதி இது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் அறிக்கை ஒருபோதும் வெளிவரவில்லை.
இந்நிலையில் ஹஜ் குழுவின் தலைவர் மொஹமட் சியாத் தனது பதவியை இராஜினாமா செய்யும் நிர்ப்பந்தத்துக்குள்ளானார். என்றாலும் அவரது இராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 51 நாட்கள் இடம்பெற்ற அரசியல் நாடகத்தின்பின்பு கலாநிதி சியாத் ஹஜ் ஏற்பாடுகளின் தலைமைத்துவத்தை தொடர்ந்தார். அரசியல் தலையீடுகளின்றி ஹஜ் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்ற உறுதிமொழியுடன் அவரது பணி ஆரம்பமானது. 2019 ஆம் ஆண்டு ஹஜ் ஏற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. என்றாலும் ஹஜ் யாத்திரிகர்களை அசௌகரியங்களுக்குள்ளாக்கிய இரு கவலைக்குரிய சம்பவங்கள் இடம்பெற்றன. 6 ஹஜ் யாத்திரிகர்கள் என்.எம். டிரவல்ஸ் நிலையத்துக்கு ஹஜ் கட்டணமாக தலா 7 இலட்சம் ரூபா வழங்கியும் இறுதி நேரத்தில் அவர்களுக்கு ஹஜ் கடமையை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இன்னொரு சம்பவத்தில் 100க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்திரிகர்களுக்கு இறுதி நேரத்தில் விமான டிக்கட் வழங்கப்படாது நிராகரிக்கப்பட்டமையால் அவர்கள் பெரும் அவலங்களுக்குள்ளானார்கள். மௌலானா டிரவல்ஸ் எனும் முகவர் நிலையம் ஹஜ் யாத்திரிகளிடமிருந்து முழுமையான கட்டணம் அறவிட்டிருந்தும் அவர்களது விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் விமான பயணச்சீட்டு முகவருக்கு செலுத்தப்பட்டிருக்கவில்லை. இதனால் இறுதி நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்திரிகர்கள் பலர் அசௌகரிங்களை எதிர்கொண்டனர். இந்நிலையில் குறிப்பிட்ட ஹஜ் யாத்திரிகர்கள் அரச ஹஜ் குழுவைத் தொடர்பு கொண்டனர். ஹஜ் குழுவின் தலையீட்டினையடுத்து இறுதி நேரத்தில் விமான பயணச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டனர்.
புதிய முறைமையின் நன்மைகள்
*ஹஜ் முகவர்களின் ஏகபோகத் தனியுரிமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
* ஹஜ் முறைப்பாடுகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
* ஹஜ் யாத்திரிகர்களின் பதிவுகள் சீரமைக்கப்பட்டதுடன் இணையத்தளம் ஊடான பதிவும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஹஜ் ஏற்பாடுகளின் குறைபாடுகள்
*ஹஜ் யாத்திரைக்காக பதிவு மேற்கொள்வது யாத்திரிகர்களை தொல்லைப்படுத்துவதாக உள்ளது.
* ஹஜ் யாத்திரிகர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவர்கள் திணைக்களத்திற்கு பல தடவைகள் விஜயம் செய்ய வேண்டியுள்ளது. இது சிக்கலான நடைமுறையாகும். இணையத்தளம் மூலம் பதிவு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் பெரும்பாலானோர் இணையத்தளம் மூலம் பதிவுகளை மேற்கொள்ள தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இந்நிலைமை ஹஜ் முகவர்கள் ஹஜ் யாத்திரிகர்கள் மீது செல்வாக்குச் செலுத்தும் நிலைமையை உருவாக்கியுள்ளது.
*சில சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள் இந்த விதிமுறைகளைத் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலைமை 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அமைச்சர் 200 ஹஜ் யாத்திரிகர்களை விதிமுறைகளை மீறி இணைத்துக் கொண்டார். இது உண்மையாகும். எதிர்காலத்தில் எந்த அமைச்சரும் இவ்வாறு செயற்படலாம்.
*மக்கள் ஹஜ் யாத்திரைக்காக பதிவு செய்து விட்டு தங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் வரை காத்திருக்கிறார்கள். திணைக்களம் யாத்திரைக்காக காத்திருப்போர் பட்டியலொன்றினை தயாரிப்பதாக இல்லை. அவ்வாறு காத்திருப்போர் பட்டியலொன்று நடைமுறையில் இருந்தால் யாத்திரிகர்கள் தங்கள் பயணம் குறித்து உரிமை கோர முடியும்.
*பதிவுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபா செலுத்தப்பட வேண்டும் என்பதை பலர் அறியாதிருக்கிறார்கள். இதனால் அவர்கள் பயணத்தை தவறவிட வேண்டியேற்படுகிறது.
*திணைக்களம் ஹஜ் யாத்திரிகர்களுடன் முறையான தொடர்பாடல்களை மேற்கொள்வதில்லை. இதன் காரணமாகவும் ஹஜ் முகவர்கள் ஹஜ் யாத்திரிகர்கள் மீது பல வகைகளில் செல்வாக்குச் செலுத்தும் நிலைமை ஏற்படுகிறது.
*முகவர்கள் தலா 25 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்தி பல பதிவுகளைச் செய்து பின்பு அந்த பதிவுகளில் திருத்தங்களைச் செய்கிறார்கள். இது வழமையாக நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில முகவர்கள் 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணமாக பெற்றுக் கொண்டு முழுமையான ஹஜ் கட்டணத்தையும் அறவிட்டுக் கொள்கிறார்கள். பதிவுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபா திணைக்களத்துக்குரியது என்று யாத்திரிகர்களை ஏமாற்றுகிறார்கள்.
காத்திருப்போர் பட்டியல் (Waiting List)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஹஜ் யாத்திரைக்காக காத்திருக்கும் யாத்திரிகர்கள் பட்டியல் ஒன்றினைத் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறான பட்டியலொன்றினைத் தயாரிப்பது கடினமான பணியாகும். இதற்கு இரு காரணங்களை முன் வைக்கலாம்.
ஹஜ் கடமைக்கான பதிவுகளைச் செய்து யாத்திரையை உறுதி செய்திருந்தும் யாத்திரையை இறுதி நேரத்தில் ரத்துச் செய்பவர்களின் விபரங்கள் முகவர்களுக்கு இறுதி நேரத்திலே கிடைக்கப்பெறுகிறது. தனது யாத்திரையை உறுதி செய்திருந்தும் இறுதி நேரத்தில் பயணத்தை நடப்பு வருடத்தில் மேற்கொள்ள முடியாது என முகவர் நிலையங்களுக்கு அறிவித்தாலும் முகவர் நிலையங்கள் அது தொடர்பில் திணைக்களத்திற்கு உடனடியாக அறிவிப்பதில்லை. அதனால் திணைக்களம் பல சிரமங்களை எதிர்கொள்கிறது.
திணைக்களம் காத்திருப்போர் பட்டியலொன்றைத் தயாரித்து அந்தப் பட்டியலிலிருந்து யாத்திரிகர்களைத் தெரிவு செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் அது அவர்களுக்கு சிரம சாத்தியமானது. அல்லது அதனை திறம்பட செய்வதற்கன தொழில் நுட்ப அறிவு இல்லை. எனவே இவ்விடயத்தில் திணக்களம் முகவர்களிலேயே தங்கி நிற்கிறது. இந்நிலைமை புதிய ஹஜ் வழிமுறைகளை அர்த்தமற்றதாக்கி விடுகிறது.
ஹஜ் முகவர்களே பிரதான குற்றவாளிகளாவர். திணைக்களம் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. அதனால் பிரச்சினைகளைத் தீர்க்க மாற்று வழிகள் கையாளப்பட வேண்டும்.
ஹஜ் ஏற்பாடுகளின் எந்த விதிமுறையென்றாலும் அதன் முன்னேற்றம் கருதி சமூகத்துடன் அல்லது பங்குதாரர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாட வேண்டும். தற்போதைய குழு உணர்வு பூர்வமாக தனது புதிய வழி முறைகளை முன்வைத்துள்ளது. பொது மக்களிடம் கருத்தறிந்து அவற்றை மீளாய்வு செய்தல் வேண்டும்.
திணைக்களமும் ஹஜ் குழுவும் ஹஜ் ஏற்பாடுகளில் தெளிவான வழிமுறைகளை கையாள வேண்டும். வழிமுறைகள் ஊழல்களற்றதாக இருக்க வேண்டும்.
அரசியல் நோக்கங்களுக்காக ஹஜ் பயன்படுத்தப்படக் கூடாது.
ஹஜ் கடமைக்காக திணைக்களத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் பதிவு செய்வது இலகுவானதாகவும், ஹஜ் முகவர்களால் ஏமாற்றப்படவோ மோசடி செய்யவோ முடியாதவாறு பாதுகாப்பானதாகவும் அமைய வேண்டும்.
புதிய ஹஜ் சட்டமூலம் நிறைவேற்றப் பட்டால் இந்தப் பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சர் ஹலீம் தனது காலத்தில் எட்டிய பெரும் சாதனைகளில் ஒன்றாக இந்தச் சட்டமூலம் அமையும் என்பதில் சந்தேமில்லை.
ஹஜ் பற்றிய வலுவான சட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதற்கான சாத்தியமும் இருக்கின்றது. என்றாலும் நடைமுறை ஒழுங்குகள் ( Rules and Regulations) வரையப்பட்டு இந்த புதிய சட்டமூலம் நடை முறைப்படுத்தப்படாவிட்டால் இந்த சட்டமூலம் வலுவற்ற ஒன்றாகவே இருக்க முடியும்.
ஆகவே, இந்த சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதற்கு அமைச்சர் ஹலீம் முயற்சிக்க வேண்டியுள்ளது. Rules and Regulations தயாராக வேண்டும், இதில் ஹஜ் கமிட்டி கூடிய கவனம் செலுத் த வேண்டும்.
அத்தோடு ஹஜ் யாத்திரிகர் பதிவு தொடர்பிலும் ஏனைய நடைமுறைகள் தொடர்பிலும் திறந்த மனதுடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். சமூகத் தலைமைகளுடனும் சிவில் அமைப்புக்களுடனும் 2015 இல் போன்று மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டும். அதனூடாக சிறந்த ஹத் நடைமுறைகளை அமுல்படுத்த ஆவன செய்ய வேண்டும். – Vidivelli