கைதுக்கு முன் ஒரு ‘தமிழ் முஸ்லிமாக’ வாழ்ந்த நான் கைதுக்குப் பின் ஒரு ‘சிங்கள முஸ்லிமாக’ வாழ ஆசைப்படுகிறேன்

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் 'விடி­வெள்ளி'க்கு வழங்­கிய செவ்வி

0 6,201

பயங்­க­ர­வா­தத்­துக்கு துணை போன­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு, அக்குற்­றச்­சாட்­டுக்கள் நிரூ­பிக்­கப்­ப­டாத நிலையில், 32 நாட்கள் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்ட பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள இலங்கை ஜமா­அதே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் ‘விடி­வெள்ளி’க்கு வழங்­கிய பிரத்­தி­யேக நேர்­கா­ணலை இங்கு தரு­கிறோம்.

நேர்­காணல்: எம்.பி.எம். பைறூஸ்

உங்கள் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் என்ன பதி­ல­ளித்­தீர்கள். அவர்கள் அதில் திருப்­திப்­பட்­டார்­களா?

விசா­ரணை என்று வந்த பிறகு நான் எடுத்­துக்­கொண்ட முத­லா­வது தீர்­மானம் அவர்­க­ளது விசா­ர­ணை­க­ளுக்கு முழு­மை­யாக ஒத்­து­ழைப்­பது என்­பதுதான். எனவே சளைக்­காமல் முகம் சுளிக்­காமல் ஒரு கேள்­வியை எத்­தனை முறை எத்­தனை பேர் கேட்­டாலும் அந்தக் கேள்­விக்­கு­ரிய பதிலை அமை­தி­யாகக் கூறினேன். சில பதில்­களை வழங்­கு­வ­தற்கு என்னை விடத் தகு­தி­யா­ன­வர்கள் எனது அமைப்பில் இருந்­தார்கள். அவர்­களை அழைக்­கு­மாறு கூறினேன். அவர்கள் அங்கு வர­வ­ழைக்­கப்­பட்­டார்கள். வாக்­கு­மூ­லமும் வழங்­கி­னார்கள். மேலும் சில கேள்­வி­க­ளுக்கு ஆவ­ணங்­களால் பதில் கூற வேண்­டி­யி­ருந்­தது. எனவே இந்த ஆவ­ணத்தை எடுத்­து­வா­ருங்கள் என்று கூற அவர்கள் தலை­மை­ய­கத்­திற்குச் சென்று குறித்த ஆவ­ணத்தைப் பெற்­று­வந்­தார்கள். இவ்­வாறு நான் சம்­பந்­தப்­பட்ட மற்றும் எனது அமைப்பு சம்­பந்­தப்­பட்ட சந்­தேகம் எது­வா­யினும் வாய் மொழி மூல­மா­கவோ ஆவ­ணங்கள் மூல­மா­கவோ அல்­லது தகு­தி­யான நபர்­களை வர­வ­ழைத்தோ பதில் கூறாமல் விட்­ட­தில்லை என்றே கூற வேண்டும்.

இந்தப் பதில்­களால் அவர்கள் அடைந்த திருப்­தியை என்னால் ஊகிக்க முடி­யு­மாக இருந்­தது. தயக்­க­மற்ற உட­ன­டி­யான பதில்கள் மற்றும் அவற்­றி­லி­ருந்த தெளிவு, ஆதா­ரங்­களை வழங்கி அவர்­க­ளது விசா­ர­ணை­க­ளுக்குக் கொடுத்த முழு­மை­யான ஒத்­து­ழைப்பு என்­பன என்னைப் பற்­றிய மற்றும் நான் சார்ந்­தி­ருக்கும் அமைப்பு பற்­றிய சந்­தே­கங்­களை நிவர்த்­திக்கும் வகை­யி­லேயே அமைந்­தி­ருந்­தன. என் மீதான குற்­றச்­சாட்­டுகள் போலி­யா­னவை என்­பதை அவர்கள் நிச்­சயம் உணர்ந்­தி­ருப்­பார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை.

உங்கள் மீதான குற்­றச்­சாட்­டுகள் உண்­மைக்குப் புறம்­பா­னவை எனக் கூறு­கின்ற நிலையில் உங்­க­ளது கைதின் பின்­ன­ணியில் சில வெளிச் சக்­தி­களின் தலை­யீ­டுகள் இருக்­கலாம் எனக் கரு­து­கின்­றீர்­களா?

இஸ்­லா­மோ­போ­பி­யாவின் சர்­வ­தேசத் தன்­மை­யோடு இணைத்துப் பார்க்கும் போது அந்த ஊகத்தை மறுக்க முடி­யாது. எனினும் எந்த வெளிச் சக்தி சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கலாம் என்­பதை சரி­யாகக் கூறு­வ­தற்­கான ஆதா­ரங்கள் என்­னி­ட­மில்லை.

இருப்­பினும் விசா­ர­ணை­களின் போது தெரிய வந்த விடயம் மற்­றொன்­றி­ருக்­கி­றது. உள்­ளூரில் எமது சமூ­கத்தின் உடன் பிறப்­புகள் சிலர் தான் காட்டிக் கொடுக்கும் வேலையை நன்கு செய்­தி­ருக்­கி­றார்கள். அவர்­களை அல்லாஹ் மன்­னிக்க வேண்டும். அத்­த­கை­ய­வர்­களின் பெயர்­களை நான் இங்கு குறிப்­பிட விரும்­ப­வில்லை. எனினும் அவர்­களைப் பற்றி ஒரு விட­யத்தை இங்கு குறிப்­பி­டு­வது அவ­சியம் என்று கரு­து­கின்றேன். காட்டிக் கொடுத்­த­வர்­களுள் எவரும் ஜமா­அத்தின் உள் விவ­கா­ரங்கள் எதிலும் நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்டு உண்மை நிலை­மை­களை அறிந்­தி­ருந்­த­வர்­க­ளல்லர். வீசிய புயல்­களில் அடி­பட்டு ஜமா­அத்தின் வெளிச்­சு­வர்­களில் முட்டிச் சென்­ற­வர்­க­ளாகத் தான் அவர்கள் காணப்­ப­டு­கி­றார்கள். கலந்­து­ரை­யா­டு­கின்ற, தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­கின்ற சபை­களில் அவர்கள் எங்கும் எப்­போதும் இருக்­க­வில்லை என்­பது ஈண்டு குறிப்­பி­டத்­தக்­கது.

விசா­ர­ணை­யா­ளர்கள் ஆரம்­பத்தில் உங்­க­ளோடு கடு­மை­யாக நடந்­து­கொண்­ட­தா­கவும் பின்னர் மிகுந்த மரி­யா­தை­யோடு உங்­களை நடத்­தி­ய­தா­கவும் அறிந்தோம். இது பற்றி…?

உண்மைதான். அவர்­க­ளது கடுமை நாவில் இருந்­தது. கைகளால் கடு­மையை அவர்கள் காட்­ட­வில்லை. நான் முதன் முறை­யாக எனது வாழ்வில் சந்­தித்த விசா­ரணை என்­பதால் விசா­ரணை எப்­ப­டி­யி­ருக்கும் என்­ப­தையும் அங்கு போன பின்பே அறிந்து கொண்டேன்.

சந்­தே­கங்­களைத் தேடிக் கண்­டு­பி­டிப்­ப­தற்­காக அமர்த்­தப்­பட்­ட­வர்கள் அவர்கள். அந்த வேலையை அவர்கள் செய்தே ஆக வேண்டும். அது அவர்­க­ளது அரச கருமம். அவர்கள் கடு­மை­யாக இருந்­தாலும் மென்­மை­யாக நடந்­தாலும் நான் அவர்­க­ளுக்­கு­ரிய மரி­யா­தையை வழங்கி ஒத்­து­ழைக்க வேண்டும் என்ற தீர்­மா­னத்­திற்கு ஏற்­க­னவே வந்­தி­ருந்தேன். சந்­தர்ப்­பங்கள் வரும் போது இஸ்லாம் பற்­றிய அவர்­க­ளது சந்­தே­கங்­க­ளுக்கும் உரிய பதில்­களை வழங்­கினேன். அவர்­க­ளது உணர்­வு­களை மதித்து நடப்­ப­திலும் கவனம் செலுத்­தினேன். அதி­கா­ரி­க­ளாக இருந்­தாலும் அவர்கள் இத­யங்­களை சுமந்த மனி­தர்கள் தானே. எனது முழு­மை­யான ஒத்­து­ழைப்பு அவர்கள் என்னை மரி­யா­தை­யாக நடத்­து­வ­தற்குக் கார­ண­மாக அமைந்­தது என்று கூறலாம்.

தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 32 நாட்­களில் பெற்­றுக்­கொண்ட அனு­ப­வங்கள் என்ன?

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் நடை­மு­றைகள் சில­வற்றைப் படித்துக் கொண்டேன். அத்­துடன் சில வாரங்கள் சிங்­களம் பேசும் மக்­க­ளோடு இரவு பக­லாக வாழக்­கி­டைத்த அனு­ப­வத்தைக் குறிப்­பி­டலாம். எனது 59 வருட வாழ்க்­கையில் அது முத­லா­வது அனு­பவம். அந்த அனு­பவம் சிங்­கள மொழிப் பரிச்­ச­யத்தை சிறிது விருத்தி செய்து கொள்ள உத­விய அதே வேளை சிங்­கள மக்­க­ளது பரிச்­ச­யத்­தையும் எனக்குத் தந்­தது எனலாம். ஏப்ரல் 21 தாக்­குதல் இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்கள் பற்றி மோச­மா­ன­தொரு பதிவை அவர்­க­ளுக்குள் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தாலும் என்னைப் பொறுத்­த­வரை அவர்கள் சகிப்புத் தன்­மை­யு­டை­ய­வர்­க­ளா­கவே தென்­பட்­டார்கள்.

ஒரு சம்­ப­வத்தைக் கண்டு எனது உள்ளம் நெகிழ்ந்­து­விட்­டது. TID இல் வேலை செய்­கின்ற சிலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அங்­கேயே இரவு தங்­கு­கி­றார்கள். ஒரு பெண் அதி­காரி (அதி­கா­ரி­யாக இருக்­கலாம்) ஒன்­றரை வயது ஆண் குழந்­தை­யொன்றைத் தூக்கிக் கொண்டு நான் தங்­கி­யி­ருந்த பகு­திக்கு வந்தார். அங்­கி­ருந்த ஒருவர் ‘அப்துல்’ என்று அந்தக் குழந்­தையை அழைக்க அந்தக் குழந்­தையும் உடனே அவ­ரிடம் தாவிச் சென்று சிரித்து விளை­யா­டி­யது. பின்னர் அந்தப் பெண் அங்­கி­ருந்து திரும்பிச் செல்லும் போது ”அப்­துல்லாஹ் என்ட யங்” என்று கூறி பிள்­ளையை எடுத்துக் கொண்டு சென்றார். பின்னர் தான் எனக்குத் தெரிய வந்­தது ஏப்ரல் 21 தாக்­கு­தலில் வெடித்துச் சித­றிய ஜமீல் என்­ப­வரின் மகன் தான் அந்தக் குழந்தை என்று. அக் குழந்தை தாயுடன் TID இல் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பயங்­க­ர­வா­தியின் அந்தப் பிள்­ளையை அவர்கள் மகிழ்ச்­சி­யோடு தூக்கி அணைத்து விளை­யா­டு­கின்­றார்கள்.

இந்த மனித உள்­ளங்­களைப் புரிந்து கொள்­ளாமல் பச்­சிளம் குழந்­தை­க­ளையும், பெண்­க­ளையும் குண்டு வைத்துக் கொலை செய்த பாத­கர்­களை எண்ணி எனது மனம் திடுக்­கிட்­டது. அது மட்­டு­மல்ல தடுத்து வைக்­கப்­பட்ட 32 நாட்­க­ளுக்குள் CCD மற்றும் TID தலை­மை­யகம், TI வெலி­சறை முகாம் ஆகிய மூன்று இடங்­க­ளுக்கு என்னை மாற்­றி­னார்கள். அதனால் அதி­க­மான முகங்­க­ளோடு அறி­மு­க­மா­வ­தற்கும் பழ­கு­வ­தற்கும் வாய்ப்புக் கிடைத்­தது.

TID வெலி­சறை முகாமில் ஒரு மேல­தி­கா­ரியை சந்­தித்தேன். அவர் மிகவும் நேர்­மை­யா­னவர், கட­மை­யு­ணர்வு மிக்­கவர் என்­பதை அறிந்து கொண்டு அவ­ருடன் சந்­திப்­புக்­கான ஒரு சந்­தர்ப்­பத்தைக் கேட்டேன். அவர் என்னை அழைத்து கதைத்து விட்டு பௌத்த மதத்தைப் பற்றி நீண்ட விளக்­கத்தைத் தந்தார். நன்றி கூறி­விட்டு எனது விளக்­கத்தைக் கேட்­ப­தற்­காக மற்­று­மொரு சந்­த­ர்ப்பம் தரு­வ­தாகக் கூறினார். அதற்­கி­டையில் நான் விடு­த­லை­யா­கி­விட்டேன். என்னைப் பொறுத்த வரை தடுப்பு முகாமின் நெருக்­க­டிகள் இர­வுகள் போலவும், அனு­ப­வங்கள் பகல்கள் போலவும் இருந்­தன என்றே கூறலாம்.

தடுப்பு முகாமில் நீங்கள் சந்­தித்த முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளுக்கு முஸ்­லிம்கள் குறித்தும் இஸ்லாம் குறித்தும் தெளி­வு­களை வழங்­கி­ய­தாகக் கூறி­யி­ருந்­தீர்கள். இஸ்லாம் தொடர்பில் அங்­குள்­ள­வர்­க­ளது மனோ­நிலை எவ்­வா­றி­ருந்­தது?

அவர்கள் குழப்­பங்­க­ளற்ற அமை­தி­யா­ன­தொரு நாட்டை விரும்­பு­கி­றார்கள். அந்த அமை­திக்கு வழி­காட்டும் ஒன்­றா­கவே மதங்கள் இருக்க வேண்டும் என்று கரு­து­கி­றார்கள். இஸ்லாம் அவ்­வா­றில்லை என்ற பதிவும் அவர்­க­ளிடம் இருக்­கி­றது.

அவர்­க­ளது இந்த மனோ நிலையை விளங்கிக் கொள்­ளாமல் அவர்­க­ளோடு புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தென்­பது கடி­ன­மா­னது. அவர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்கள் குறித்து பல்­வேறு பயங்­க­ளோடு வாழ்­கி­றார்கள். இந்தப் பயங்­களை விடாமல் வளர்த்துக் கொண்­டி­ருப்­ப­தற்கும் சில தீயசக்­திகள் முற்­ப­டு­கின்­றன என்­பதை நாம் மறந்­து­வி­ட­லா­காது.
இந்த உண்­மையை மனதில் இருத்­திய நிலை­யி­லேயே இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்கள் பற்­றிய விளக்­கங்­களை நான் வழங்­கினேன்.

பிற மத சகோ­த­ரர்­க­ளோடு இஸ்லாம் பற்றி கலந்­து­ரை­யாடும் போது மற்­றொன்­றையும் நாம் மறந்­து­வி­ட­லா­காது. அது தான் சம­கால உல­க­மாகும். நாங்கள் நேற்­றைய உல­கத்தை மனதில் இருத்­திய வண்ணம் கலந்­து­ரை­யா­டினால் இன்­றைய உலகில் வாழ்­ப­வர்கள் அதனை சீர­ணிக்க மாட்­டார்கள்.

ரோம, பார­சீக சாம்­ராஜ்­யங்கள் இருந்த காலப் பகு­தியில் தான் உலக வர­லாற்றில் முஸ்­லிம்­களும் ஒரு சாம்­ராஜ்­யத்தை உரு­வாக்­கி­னார்கள். அன்­றைய உலக நடை­மு­றைக்கு அது ஏற்­பு­டை­ய­தாக இருந்­தது. இன்­றைய சூழலில் வாழ்­ப­வர்கள் இறை­மை­யுள்ள அர­சாங்­கங்­க­ளையும், ஜன­நா­யக வழி­மு­றை­க­ளையும், மனித உரி­மைகள் மற்றும் மத சுதந்­தி­ரங்­க­ளையும் அவற்­றிற்­கான சர்­வ­தேச சட்­டங்­க­ளையும் கொண்ட ஒரு உலகைக் காண்­கி­றார்கள். இன்­றைய இந்த உல­கிற்கு ஏற்­பு­டை­ய­தாக இஸ்­லாத்தை நாம் முன்­வைக்கத் தவ­றினால் இஸ்லாம் கால­வெள்­ளத்தால் அடித்துச் செல்­லப்­பட்டுக் காலா­வ­தி­யா­கி­விட்ட மார்க்­க­மா­கவே பார்க்­கப்­படும் என்­ப­தையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இந்த உண்­மை­களைப் புரிந்து கொள்ளும் சந்­தர்ப்­பமும் விசா­ர­ணை­க­ளோடு வாழ்ந்த 32 நாட்­களில் எனக்குக் கிடைத்­தது என்றே கூற­வேண்டும்.

இஸ்லாம் பற்­றியோ முஸ்­லிம்கள் பற்­றியோ இன்று நாம் அவர்­க­ளுடன் பேசும் போது சம­காலம் பற்­றிய அவர்­க­ளது பார்­வை­களை அலட்­சியம் செய்த நிலையில் கருத்­துக்­களை முன்­வைத்தால் அவை செல்லாக் காசு­க­ளா­கவே மாறும் என்­பது அங்­கி­ருந்த போது எனக்குள் ஏற்­பட்ட அச்­ச­மாகும் என்­ப­தையும் இவ்­வி­டத்தில் குறிப்­பிட வேண்டும்.

பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­பட்ட மற்றும் தொடர்­பு­பட்­டி­ராத நிலையில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் உங்­க­ளோடு சிறை வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர்­க­ளது நிலை­மைகள் அங்கு எவ்­வா­றுள்­ளன?

அவர்­க­ளது கூற்­றுப்­படி விசா­ர­ணைகள் முற்றுப் பெற்­றி­ருக்­கின்­றன. அடுத்த கட்­டத்­துக்கு நாம் நகர்த்­தப்­பட வேண்டும். எனினும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கிறோம் என்­பதே அவர்­க­ளது பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது.

அவர்கள் கூறிய சுவா­ரஷ்­ய­மான விடயம் யாதெனில் விசா­ர­ணை­யா­ளர்கள் ஆச்­ச­ரி­யப்­படும் அள­வுக்கு நடந்­த­வை­களை ஒளிவு மறை­வின்றி நாங்கள் ஒப்­பு­வித்து விட்டோம். எல்.ரி.ரி.ஈ கைதி­யொ­ரு­வ­ரிடம் ஒரு வாக்கு மூலத்தைப் பெறு­வ­தற்கு ஆறு மாத காலங்கள் செல்லும் என்றும் நீங்கள் கேட்­ப­தற்கு முன்பே நடந்­த­வை­களைச் சொல்லி முடிக்­கின்­றீர்கள் என்றும் விசா­ர­ணை­யா­ளர்­களில் சிலர் சொல்லி ஆச்­ச­ரி­யப்­பட்­ட­தாகக் கூறி­னார்கள்.

எந்தத் தவ­றையும் செய்­யா­த­வர்கள் சொல்­வ­தற்கு ஒன்­று­மில்­லா­த­தனால் சில அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு ஆரம்­பத்தில் முகம்­கொ­டுத்­தாலும் பின்னர் அவர்­களைப் பற்­றிய உண்­மை­களை விசா­ர­ணை­யா­ளர்கள் புரிந்­தி­ருப்­ப­தா­கவும் அறியக் கிடைத்­தது. அத்­த­கை­ய­வர்கள் ஒவ்­வொ­ரு­வ­ராகத் தற்­போது விடு­விக்­கப்­பட்டு வரு­கி­றார்கள். ஏனை­யோ­ருக்­கெ­தி­ராக வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்டும் வரு­கின்­றன. அதனை அவ­ச­ர­மாக செய்தால் நல்­லது என்­பதே அவர்­க­ளது விருப்­ப­மா­கவும் இருக்­கி­றது.

என்னைப் பொறுத்­த­வரை வெடித்துச் சித­றிய தற்­கொலைக் குண்­டு­தா­ரி­களை சபிக்­காத எவ­ரையும் நான் காண­வில்லை. குண்­டு­தா­ரி­களின் நெருங்­கிய சொந்­தங்­களும் அவர்­களைச் சபிக்­கி­றார்கள். அங்கு சென்ற பிறகு தான் நான் அவர்­க­ளோடு அறி­மு­க­மா­கினேன். எனது தூரத்து உற­வி­னர்கள் மூன்று பேர்­களைத் தவிர.

அவர்கள் அனை­வரும் ஒரு புதிய வாழ்க்­கையை விரும்­பு­கி­றார்கள் என்று தான் அவர்­க­ளது அனு­பவம் எனக்கு எடுத்துக் கூறு­கி­றது. அங்கு வந்த பின்னர் நிறையப் பாடங்­களைக் கற்­றி­ருப்­ப­தா­கவும் அவர்கள் கூறி­னார்கள்.

இந்தக் கைது உங்கள் குடும்­பத்­தினர், ஜமா­அத்தே இஸ்­லாமி அமைப்­பினர் உட்­பட இலங்கை முஸ்­லிம்­களைக் கவ­லையில் ஆழ்த்­தி­யி­ருந்­தது. இதற்­கப்­பாலும் உங்­க­ளது கைதைப் பலரும் கண்­டித்­த­துடன் பல உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் உங்­களை விடு­விக்கக் கோரி பிரே­ர­ணை­களும் நிறை­வேற்­றப்­பட்­டன. முஸ்லிம் சமூ­கத்தின் இந்த பிர­தி­ப­லிப்பு பற்றி என்ன நினைக்­கின்­றீர்கள்?

நீங்கள் குறிப்­பிட்­டது போல் எனது கைது தொடர்பில் இலங்கை முஸ்லிம் சமூகம் உட்­பட பிற­மத சகோ­த­ரர்கள் பலரும் வெளிப்­ப­டுத்­திய கவ­லையும் விடு­தலை குறித்து அவர்கள் செலுத்­திய கரி­ச­னையும் வார்த்­தை­க­ளுக்குள் அடக்க முடி­யாத நன்றிப் பிர­வா­கத்தை என­துள்­ளத்தில் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. குறித்த அனை­வ­ரதும் உலக மறுமை ஈடேற்­றங்­க­ளுக்­காக மன­மு­ருகிப் பிராத்­திக்­கின்றேன்.

என் விட­யத்தில் செலுத்­தப்­பட்ட இந்தக் கரி­சனை குறித்து ஒரு கருத்தைப் பதிவு செய்­வது பொருத்தம் என்று கரு­து­கின்றேன்.

விரல்­விட்டு எண்­ணத்­தக்க சிலர் என்னைப் பற்­றிய பிழை­யான தக­வல்­களைக் கொடுத்­ததன் விளை­வா­கவே உண்­மையில் நான் கைது செய்­யப்­பட்டேன். அவர்­களை அல்லாஹ் மன்­னிக்க வேண்டும். அதே நேரம் வேறு­பா­டு­களை மறந்து ஆயி­ரக்­க­ணக்­கான உள்­ளங்கள் அழுது தொழுது பிரார்த்­தனை புரிந்­த­தற்கும் எனது விடு­த­லைக்­காக ஒன்­றி­ணைந்து உழைத்­த­தற்கும் இந்தக் கைது தான் கார­ண­மாக அமைந்­தது.

ஒரு சிர­மத்­துக்குள் ஒரு சுகத்தைக் காண முடியும் என்ற குர்­ஆனின் கூற்றை இதன் மூலம் அனு­ப­விக்க முடிந்­தது என்று கூறு­வது மிகை­யா­காது என்று நினைக்­கிறேன்.

அதே வேளை நான் ஒரு இயக்கம் சார்ந்­த­வ­னாக இருந்­தாலும் சமூ­கத்­த­ளத்தில் நின்று பேசிய, எழு­திய இஸ்­லாத்தின் நடு­நிலை சிந்­த­னை­க­ளுக்கு மக்கள் வழங்­கிய நேர் சாட்­சி­ய­மா­கவே இதனை நான் பார்க்­கின்றேன். எனவே பெரு­மைகள் அனைத்தும் நடு­நிலை மார்க்­கத்­திற்கே சேரும். நாட்­டுக்கோ, சமூ­கத்­திற்கோ, மார்க்­கத்­திற்கோ அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தும் தீவி­ர­வாத சிந்­த­னை­களை மார்க்­கத்தின் பெயரால் விதைத்த ஸஹ்­ரா­னுக்கும் சமூகம் சாட்­சியம் வழங்­கி­யி­ருந்­தது. அது எதிர் சாட்­சி­ய­மாகும். இத்­த­கைய சாட்­சி­யங்கள் மனி­தர்­க­ளுக்குக் கிடைப்­ப­வைகள் அல்ல. மாறாக அவர்கள் சுமந்த சிந்­த­னை­க­ளுக்குக் கிடைப்­ப­தே­யாகும். “மனி­தர்கள் அறி­யப்­ப­டு­வது அவர்­க­ளது சிந்­த­னை­களால் அன்றி சிந்­த­னைகள் அறி­யப்­ப­டு­வது மனி­தர்­களால் அல்ல” என்ற எமது முன்­னோர்­களின் கூற்றும் இங்கு ஈண்டு குறிப்­பி­டத்­தக்­கது.

உங்­க­ளது விடு­தலை தொடர்பில் சட்­டத்­த­ர­ணி­களின் முயற்­சிகள் ஒரு புற­மி­ருக்க முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் மற்றும் சமூ­கத்தின் அழுத்­தங்கள் பங்களிப்புச் செய்திருக்கின்றன. இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

ஏப்ரல் 21 போன்ற பாரிய அனர்த்தமொன்றின் பின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவருக்காக குரல் எழுப்புவதற்கு எவரும் துணியமாட்டார்கள். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் உட்பட சிவில் சமூகம் ஒன்றிணைந்து எழுப்பிய குரலானது ஒரு மனிதனுக்காக எழுப்பப்பட்ட குரல் என்பதை விட வெட்ட வெளிச்சமானதொரு உண்மைக்காக எழுப்பப்பட்ட குரல் என்பதே உண்மை. அந்தக் குரலுக்குக் காது கொடுப்பதானது சட்டத்தின் குரலுக்குக் காது கொடுப்பதனை விடக் கனதியானது என்றே கூற வேண்டும். அந்த வகையில் இந்தக் குரலுக்கு “அழுத்தம் கொடுத்தல்” என்ற கற்பிதம் பொருத்தமற்றது என்பதே எனது கருத்தாகும். “உண்மையின் குரலுக்கு உலகம் தலை சாய்க்கும்” என்பதே இங்கு நடைபெற்றிருக்கின்றது. அதனால் சட்டத்தரணிகளின் பங்களிப்புக்கான நேரம் வருவதற்கு முன்பே விடுதலை நிச்சயமாகிவிட்டது. இது உண்மையில் ஓர் அழுத்தமல்ல.

உங்களது வாழ்வை கைது செய்யப்பட முன்னர், கைது செய்யப்பட்ட பின்னர் என்று பிரித்து நோக்கினால் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள்?

உண்மையில் அது ஒரு பிரிகோடு தான். கைதுக்கு முன் ஒரு ‘தமிழ் முஸ்லிமாக’ வாழ்ந்த நான் கைதுக்குப் பின் ஒரு ‘சிங்கள முஸ்லிமாக’ வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை எந்தளவுக்கு நிறைவேறும் என்பதை என்னால் கூறமுடியாதிருக்கிறது. தடைகள் பலவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டியதொரு பயணம் அது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.