முஸ்லிம்கள் மீது கடும் நெருக்குதல்
நாட்டின் சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் பாரிய அச்சுறுத்தல் என்கிறது சர்வதேச நெருக்கடிகள் குழு
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட கடுமையானதும் ஆபத்தானதுமான நடவடிக்கைகள் நாட்டின் சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் பாரிய அச்சுறுத்தல்களை தோற்றுவித்துள்ளதாக ‘சர்வதேச நெருக்கடிகள் குழு’ வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புத்திஜீவிகள், சிந்தனையாளர்களை அங்கத்தவர்களாக கொண்ட மேற்படி ‘சர்வதேச நெருக்கடிகள் குழு’ இலங்கையில் ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் கடந்த வாரம் வெளியிட்டுள்ள ‘இலங்கையின் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் எதிர்கால வன்முறைகளின் ஆபத்தைக் குறைத்தல்’ எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் இருந்த குழுவினர் தெளிவாக இனங்காணப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் அரசியல்வாதிகளும் சிங்கள தேசியவாதிகளும் ஏப்ரல் குண்டுத் தாக்குதலை முஸ்லிம் சமூகத்தை துன்புறுத்துவதையும் அவமானப்படுத்துவதையும் நியாயப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக கையாண்டனர்.
குண்டுத் தாக்குதல்களில் 250 பேர் கொல்லப்பட்டனர். இத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியிருந்தது. எனினும் இலங்கையின் உள்ளூர் அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாஅத்தே இத் தாக்குதலை மேற்கொண்டதாக பொலிசார் கூறியிருந்தனர்.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்பு ஒரே நாளில் நிகழ்ந்த மிக மோசமான வன்முறை இதுவாகும். எனினும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சம்பந்தப்பட்ட மிகப் பாரிய வன்முறை இடம்பெற்றது இதுவே முதன் முறையாகும்.
இதனையடுத்து சுமார் 1800 முஸ்லிம்கள் அவரசகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இன்று வரை இவர்களில் 300 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் தாக்குதல்களுடன் எந்த வகையிலும் சம்பந்தப்பட்டவர்களல்ல என அவர்களது குடும்பத்தினர் நெருக்கடிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
இதேவேளை சிங்கள பௌத்த தேசியவாதிகள் இச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய வன்முறைகள், வெறுப்பு பிரசாரங்கள், வர்த்தக பகிஷ்கரிப்புகள் மற்றும் ஹிஜாப் அணிந்த பெண்கள் மீதான தாக்குதல்கள், சேறு பூசும் ஊடக பிரசாரங்களை முன்னெடுத்தனர்.
மே மாதம் இரு தினங்களாக முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து பாரிய இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதில் ஒரு முஸ்லிம் நபர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக் கணக்கான முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், வீடுகள் அழிக்கப்பட்டன.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து மாத்திரம் நிகழவில்லை. மாறாக ஆண்டு முழுவதும் இவ்வாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த வருடம் கண்டியிலும் இதே போன்ற தாக்குதல் சிங்கள தேசியவாதிகளால் முன்னெடுக்கப்பட்டன. சில இடங்களில் பாதுகாப்பு படையினர் சட்டத்தை நிலை நாட்டத் தவறியதுடன் வன்முறையாளர்களுக்கு உதவியதாகவும் சம்பவங்கள் பதிவாகின.
சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்தை கருவறுக்கும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கு புத்துணர்ச்சி வழங்கி வருகின்றனர்.
ஆண்டின் இறுதியில் நாட்டில் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவின் சகோதரர் கோத்தாபய ராஜபக் ஷ பாதுகாப்பு அச்சுறுத்தலை பிரதான கருப்பொருளாகக் கொண்டு பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்.
சில சிரேஷ்ட பிக்குகளும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுவதில் பங்காற்றியுள்ளனர். ஜூன் மாதம் இலங்கையின் பிரதான பௌத்த மத தலைவர்களுள் ஒருவரான வரகாகொட சிறீ ஞானரதன தேரர் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கிரிக்குமாறும் சிங்கள பெண்களுக்கு கருத்தடை செய்ததாக முஸ்லிம் வைத்தியர் ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பொய்ப் பிரசாரத்தை ஆதரிக்கும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டார்.
இதேவேளை இலங்கையின் பலவீனமானதும் பிளவுபட்டதுமான தலைமைத்துவம் காத்திரமான பணிகளை முன்னெடுக்காது வேடிக்கை பார்த்தனர்.
இலங்கையின் தலைவர்கள் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டுமானால் சட்டத்தை மதித்து நடக்கும் முஸ்லிம் பிரஜைகளை அந்நியப்படுத்துவதை நிறுத்துவதுடன் சீர்குலைந்துள்ள நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. – Vidivelli