சர்வதேச சிறுவர் தினம் ஒக்டோபர் 1 ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந் நிலையில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால்களில் ஒன்றான துஷ்பிரயோகம் குறித்து நோக்குவது காலத்தின் தேவையாகும்.
சிறுவர்களை துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாத்து அவர்களுக்கு சிறந்த சூழல் ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதென்பது இன்றைய சமுதாயம் எதிர்நோக்கும் பாரிய சவால்களில் ஒன்றாகும். இந்த சவாலை வெற்றி கொள்ளும் கடினமான பாதையில் பயணிக்கவேண்டிய கட்டாயம் நிலவுகிறது. ஒவ்வொரு பிள்ளையும் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதை உறுதிப்படுத்துவது நம் அனைவர் மீதுள்ள பொறுப்பாகும்.
இன்று இலங்கை உட்பட பல நாடுகளில் சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற கவலைக்குரிய பிரச்சினைகளைப் பார்க்கும்போது சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பாரிய இடைவெளியொன்று ஏற்பட்டுள்ளதை உணர முடிகின்றது. தற்போது நிலவுகின்ற இந்த அச்சுறுத்தல் தொடருமாக இருந்தால் நாகரிகமற்ற ஒரு உலகமே நமக்கு மிஞ்சும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான பிரதான பாத்திரங்களாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் செயற்படுகின்றன. இவை தவிர அரச சார்பற்ற நிறுவனங்கள், சங்கங்கள் என்பனவும் செயற்படுகின்றன. சர்வதேச ரீதியாக யுனிசெப் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன சிறுவர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றன.
இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்ட அறிக்கைகளின்படி 2018 ஆம் ஆண்டு மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஏறத்தாழ 3000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவற்றுள் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கொழும்பை அடுத்து கம்பஹா மாவட்டத்திலும் அதனை அடுத்து குருநாகல் மாவட்டத்திலும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி 2413 சிறுவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுள் 555 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் 375 சிறுவர்கள் கடுமையான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளனர். பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுள் 374 பேர் இளம் குற்றவாளிகள் என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.
311 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளதுடன் 15 சிறுவர்கள் சட்டவிரோத முறையிலான ஆபாச வெளியீடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். 125 சிறுவர்கள் கடத்தப்பட்டதுடன் 265 சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர். சிறுவர்கள் மீது பாலியல் சுரண்டல் மேற்கொண்ட முறைப்பாடுகள் நான்கும் ஆசை வார்த்தைகள் கூறி மயக்கிய முறைப்பாடுகள் 15 உம் பதிவாகியுள்ள அதேவேளை சிறுவனொருவனை தகாத முறையில் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவமொன்றும் பதிவாகியுள்ளது.
இணையவழி துஷ்பிரயோகங்கள்
இன்றைய சிறுவர்களின் உலகத்தில் இணையம் என்ற விடயம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பிள்ளைகளின் கைகளில் தவழும் ஸ்மார்ட் போன்தான் இணையவழி துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு பாரிய சவாலாக மாறியுள்ளது. பெற்றோர்களும் பிள்ளைகளின் அறிவுடன் போட்டிபோட முடியாமல் அவர்களுடைய போக்கில் விட்டுவிடுவது துஷ்பிரயோகம் செய்யக்காத்திருப்பவர்களுக்கு இலகுவாக அமைந்து விடுகின்றது.
சமூக வலைத்தளங்களைப் பிள்ளைகள் பாவிக்கும்போது பெற்றோரின் மேற்பார்வையின்கீழ் அவற்றைப் பாவனைக்கு உட்படுத்துவதே சாலச்சிறந்தது. அதற்கு சாத்தியம் இல்லாத பட்சத்தில் சிறுவர்களை இணையத்தைப் பாவிக்க வழங்காமல் இருப்பது நல்லதொரு தெரிவாகவே அமையும்.
சிறுவர் தினக்கொண்டாட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, இலங்கையில் உள்ள சிறுவர்கள் பேஸ்புக் பாவிப்பதை தடை செய்யும் ஒரு சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
“தொழில்நுட்பம் வேகமாக உயர்ந்துள்ள இக்காலத்தில் மாணவர்கள் தமது வீட்டின் அறையினுள் என்ன செய்கிறார்கள் என்பது தொடர்பாக பெற்றோர்கள் கவனம் செலுத்தவேண்டும். சிறுவர்கள் அதிகமான நேரத்தை இணையத்தில் செலவிடுகிறார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் சிறுவர்களை இணையப் பாவனைக்கு அனுமதிப்பது சம்பந்தமாகவும் அவ்வாறு அனுமதிப்பதாக இருந்தாலும் கல்வித் தேவை சம்பந்தமான தகவல்களை திரட்டுவதற்கு மாத்திரம் எவ்வாறு நெறிப்படுத்தலாம் என்பது தொடர்பாகவும் எமது அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 2017 ஆம் ஆண்டு கிடைத்த இணைய குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய பகுப்பாய்வுக்கு அமைய, ஒட்டுமொத்த முறைப்பாடுகளில் இணைய கு ற்றங்கள் 1% ஆகும். அவற்றுள் 73% ஆனவை மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன.
அதில் 10 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் குறித்த முறைப்பாடுகள் 15.9% ஆகும். 11 – 15 வயதுக்கிடையிலான சிறுவர்களுக்கு இடம்பெற்றுள்ள துஷ்பிரயோகங்கள் குறித்த முறைப்பாடுகள் 36.5% ஆகும். 16 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு இடம்பெற்றுள்ள துஷ்பிரயோகங்கள் குறித்த முறைப்பாடுகள் 47.6% ஆகும். கிடைத்த முறைப்பாடுகளில் 73% சிறுமியருக்கு எதிராக இடம்பெற்ற குற்றங்கள் பற்றியதாகும். கிடைத்த முறைப்பாடுகளில் 63.5% ஆனவை இடம்பெற்றிருப்பது பேஸ்புக் மூலமாகும்.
இலங்கைச் சிறுவர்கள் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் யுனிசெப் நிறுவனம் 2017 இல் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, வயது 11 – 18 இடையிலான சிறுவர்களில் 53% ஆனோர் இணையத்தளத்தை பயன்படுத்துகின்றனர். சிறுவர்களில் இணையத்தளத்தை பயன்படுத்தும் கூடுதல் எண்ணிக்கையானோர் தென் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர். சிறுவர்களின் பிரபல்யமான சமூக ஊடகமாக பேஸ்புக் உள்ளது. இணையத்தளத்தை பயன்படுத்துவோரில் 61.7% ஆனோர் பேஸ்புக் பயனாளர்களாவார்கள். இணையத்தளத்தை பயன்படுத்தும் கூடுதலானோர் உயர் கல்வி பயிலும் சிறுவர் சமுதாயத்தினராவார்கள். இது 70.5% ஆகும்.
பெற்றோரின் கவனயீனம்
சிறுவர்கள் பெரியவர்களைவிட சிந்திக்கும் ஆற்றல் மற்றும் பகுத்தறிவிலும் குறைந்தவர்கள். சிறுவர்களுடைய இந்த மனோபாவத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிற சில கயவர்கள் சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்ய முனைகின்றனர்.
சிறுவர்களை சொல் ரீதியாக ஏசுதல், அவர்களிடம் ஆபாச வார்த்தைகளைக் கூறுதல், தவறான நோக்கத்துடன் சிறுவர்களைத் தொடுதல் அல்லது தீண்டுதல், தனிமைப்படுத்தல் மற்றும் சிறுவர்களின் விருப்பத்துடனோ விருப்பமின்றியோ பாலியல் உறவு கொள்ளுதல் போன்றன தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களாகும்.
இன்றைய பெற்றோர்கள் தன்னையறியாமல் செய்யும் சில செயற்பாடுகள் பிள்ளை துஷ்பிரயோகம் செய்யப்படக் காரணமாக அமைந்து விடுகின்றது. பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்காக கடுமையாகத் தண்டித்தல் மற்றும் ஏனைய பிள்ளைகளுடன் ஒப்பிட்டுப்பேசுதல் என்பன பிள்ளைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடுகின்றது. பெற்றோரிடமிருந்து அன்பு கிடைக்காத சிறுவர்கள் அந்த அன்பை வேறுவழியில் எதிர்பார்க்கின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் பிள்ளைகளின் விருப்பத்துடன் பாலியல் துஷ்பிரயோகங்கள் அரங்கேறுகின்றன.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சகல செயற்பாடுகளிலும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளையின் நண்பர்கள், வகுப்பாசிரியர், பாட ஆசிரியர்கள், பாடசாலைக்குச் செல்லும் வழிமுறை, வாகனத்தில் செல்வதாயின் வாகன சாரதியின் நடத்தை என பல விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
தாய், தந்தை என இருவரும் வேலைக்குச் செல்லும் பட்சத்தில் பிள்ளையுடைய நிலைமை என்ன என்பது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். தமது பிள்ளையைப் பாதுகாப்பான இடத்தில்தான் விட்டுச் செல்கிறோமா என்பது பற்றி ஆராயவேண்டும். பிள்ளையை திரும்ப சந்திக்கும் நேரத்திலும் மீண்டும் கொண்டு சென்றுவிடும் சந்தர்ப்பத்திலும் பிள்ளையுடைய மனநிலை, எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பாக கண்டிப்பாகக் கவனம் செலுத்தவேண்டும்.
வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கென செவிலிகளை நியமிக்கின்றனர். அவ்வாறு வேலைக்கமர்த்தும் செவிலிகளுடைய தனிப்பட்ட வாழ்க்கை, அவர்களுடைய நடத்தை என்பவற்றை ஆராய்வது கட்டாயமாகும். தனக்கு வந்தால்தான் தலைவலி என்று இருக்காமல் தமது பிள்ளைகளை மேற்கூறப்பட்ட பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க முன்வர வேண்டும்.
கண்டுகொள்ளப்படாத ஆண் பிள்ளைகள்
பெண் பிள்ளைகளைக் காட்டிலும் அதிகமாக ஆண் பிள்ளைகள் மீதே பாலியல் சுரண்டல் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வை இந்த உலகம் ஏற்படுத்தாதது ஏன்? என்ற கேள்விக்கு விடை சொல்ல இந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளனர்.
இன்றைய ஊடகங்கள் அனைத்தும் பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் துஷ்பிரயோகங்களையும் பாலியல் வன்புணர்வுகளையும் மாத்திரமே அறிக்கையிடுகின்றன. அவற்றுக்கு அப்பால் ஆண் பிள்ளைகள் மீதான பாலியல் சுரண்டலை பேசத் தயங்குவதன் காரணம் புரியாத பூடகமாகவே உள்ளது. பெரியவர்களால் முன்வைக்கப்படும் பாலியல் சீண்டல்கள் பற்றி எந்தவித விழிப்புணர்வும் இல்லாத சிறுவர்களின் முறைப்பாடுகள் ஊமையின் குரல்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
ஆண் பிள்ளைகளிடம் சட்டவிரோதமாக மனச்சாட்சியின்றி இன்பத்தைப் பெற்றுக் கொள்கின்றவர்கள் தம்மை சமூகத்திடம் இருந்து தற்காத்துக்கொள்ள பிள்ளைகளை அச்சுறுத்துவர். அவர்களுடைய அறியாமையைத் தமக்கு சாதகமாக பல வழிகளில் பிரயோகித்துக் கொள்கின்றனர். ஒரு சில சந்தர்ப்பங்களில் அதன் பாரதூரமான விளைவாக பிள்ளைகள் அவர்களின் பாலியல் அடிமைகளாக மாறிவிடும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவது இன்றைய பெற்றோர்கள் அறியாத ஒன்றல்ல. ஒருசில சமூக விரோதிகளின் இந்த செயற்பாட்டினால் பொருத்தமில்லாத வயதில் பிள்ளைகளுக்கு பாலியல் தேவைகள் உருவாகி விடுகின்றன. இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் பாதிக்கப்படும் இந்த சிறுவர்கள் பெரியவர்களாகி மீண்டும் அதே செயலைச் செய்யத்தூண்டப்படுகிறார்கள். சுழற்சி முறையில் நடக்கும் இந்தச் செயற்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு ஒரு நாளும் முடிவு கட்ட முடியாத நிலைமையைத் தோற்றுவிக்கின்றது.
நல்ல தொடுகை மற்றும் கெட்ட தொடுகை
(Good Touch and Bad Touch)
சிறுவர்கள் மட்டுமன்றி பெரியவர்களும் குறிப்பாக பெற்றோர்கள் நல்ல தொடுகை கெட்ட தொடுகை பற்றி விளங்கி வைத்திருப்பது அவசியமானது. சிறுவர்கள் தம்மை தொடுவதற்கு அனுமதிக்கக் கூடியவர்கள் யார் என்பதையும் அன்பு முத்தத்தினையும் அரவணைப்பையும் தரக்கூடியவர்கள் யார் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
நல்ல தொடுகை என்பது பெற்றோர் மற்றும் அவரைச் சார்ந்த உறவினர்கள் முத்தமிடுவது, தலையை வருடிக் கொடுப்பது என்பனவாகும். சிறுவர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கும் வகையில் உரசுவது அவர்களின் அவயவங்களைத் தொடுவது என்பன கெட்ட தொடுகைகளாகும்.
சிறுவர்களுக்கு இவை பற்றி தெளிவுபடுத்துவதால் முடிந்தளவு துஷ்பிரயோகங்களை இல்லாமல் செய்யலாம். எந்தவொரு பாதுகாப்பற்ற சந்தர்ப்பத்திலும் “வேண்டாம்” என்று கூறி விலகிச்செல்லும் உரிமை சிறுவர்களுக்கு உண்டு. யாராவது ஒருவர் தேவையற்ற விதத்தில் தொட்டால் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் அதனைத் தெரியப்படுத்துமாறு அவர்களை வழிநடத்தவேண்டும்.
சிறுவர் துஷ்பிரயோகங்களை ஏன் எதிர்க்க வேண்டும்?
சிறுவர் துஷ்பிரயோகம் காரணமாக குறித்த பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு இடம்பெறுகின்ற ஆள்சார் அழுத்தத்திற்கு அப்பால் சமூகத்துக்கு வீணாக ஏற்படப் போகும் பொருளாதார செலவீனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருபுறம் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மத்தியில் ஏற்படும் பாதகமான மற்றும் வேதனைமிக்க விளைவுகள் சாதாரணமானதல்ல. பிள்ளை மீது ஏற்படுகின்ற காயம், வளர்ச்சி மட்டுப்படுத்தப்படல், கற்றல் கோளாறுகள், நடத்தை முறை, சிகிச்சைசார் சிக்கல்கள், அடிமையாதல், தற்கொலை மனநிலை என்பன வாழ்நாள் முழுவதும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவனைப் பாதிக்கும் விடயமாக இருக்கலாம். மறுபுறம் சமூக, கலாசார நிலைத்திருத்தலில் ஏற்படுத்தும் பாதிப்பைப் போன்று இந்த நிலைமையை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் மனித செலவீனமும் பொருளாதார செலவீனமும் சாதாரணமானதல்ல.
துஷ்பிரயோக அனுபவம் கொண்ட ஒருவரை துஷ்பிரயோக அனுபவம் இல்லாத ஒருவருடன் ஒப்பிடும் போது புகைப்பிடிக்கும் அச்சுறுத்தல் 103% ஆகும். உடல் பருமனாகும் அச்சுறுத்தல் 95% ஆகும். மது பயன்படுத்தும் அச்சுறுத்தல் 192% ஆகும். தற்கொலை செய்து கொள்ளும் அச்சுறுத்தல் 43% ஆகும்.
(மூலம் – தேசிய பாதுகாப்புச் சபை)
இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்காக கடந்த வருடம் 1.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இது மறைமுகமாக சிறுவர் துஷ்பிரயோகத்தினால் ஏற்பட்ட செலவினமாகும். சிறுவர் துஷ்பிரயோகம் காரணமாக புற்று நோய், சுவாசப்பை நோய், குடல் நோய், இருதய நோய், ஈரல் நோய், இனப்பெருக்க சுகாதார அபாயம் என்பன அதிகமாகும். உடல் அல்லது பாலியல் அல்லது கடும் பாரபட்சத்திற்கு ஆளானோரில் ¼ முதல் 1/3 வரையானோர் இந்த துஷ்பிரயோகத்திற்கு தமது பிள்ளைகளையும் ஆளாக்குகின்றனர். பெரியோரின் தற்கொலை முயற்சிகளில் 9.2% சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களினால் இடம்பெறுகின்றன.
பாலியல் துஷ்பிரயோகம்
வளர்ந்த ஒருவர் அல்லது இளம்பிராயத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லது வயதில் மிகக் கூடுதலான பலம்மிக்க சிறுவன் ஒருவனால் அவனை வயது, பலம் குறைந்த ஒருவர் தமது பாலியல் திருப்திக்காகப் பயன்படுத்துவது பாலியல் துஷ்பிரயோகம் ஆகும்.
இங்கு சிறுவன் விருப்பம் தெரிவிக்கக்கூடிய விடயத்தில் இருக்கின்றாரா என்பதைப் பார்க்க வேண்டியது அவசியமாகும். வளர்ந்த சிறுவனிடம் பெரியவருக்கு சமனான அதிகாரம், சமமான அறிவு, சமமான உதவிக் கட்டமைப்பு இல்லாமையினால் அவர்கள் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாது. ஏதேனுமொரு வகையில் அவ்வாறானதொரு பிள்ளை விருப்பத்தைத் தெரிவிக்கின்ற போதும் அதனை செல்லுபடியான விருப்பமாக நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதில்லை.
அதற்கமைய இடம்பெறுகின்ற பாலியல் துஷ்பிரயோகங்களை தொடுவதுடனான பாலியல் துஷ்பிரயோகம் தொடுவதற்ற பாலியல் துஷ்பிரயோகம் என வகைப்படுத்தலாம். பாலியல் அவயவங்களைத் தொடுதல், மற்றொருவரின் பாலியல் அவயவங்களைத் தொடச் செய்தல், ஏதேனுமொரு பொருளைப் பயன்படுத்தி பாலியல் செயலொன்றில் ஈடுபடச் செய்தல் என்பன தொடுவதுடனான பாலியல் துஷ்பிரயோகங்கள் ஆகும். தொடுவதற்ற பாலியல் துஷ்பிரயோகங்களாக பாலியல் வீடியோக்களைக் காட்டுதல், பாலியல் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கச் செய்தல், பாலியல் பேச்சுக்களை செவி சாய்க்கச் செய்தல், பாலியல் புகைப்படம் அல்லது வீடியோக்களில் தோன்றச்செய்தல், பாலியல் செயற்பாடுகளைப்பார்க்க பலவந்தப்படுத்தல் போன்ற பல விடயங்களைக் கூறலாம்.
சிறுவர்களுக்கு இடம்பெறுகின்ற பாலியல் துஷ்பிரயோகங்களில் 90 வீதமானவை இடம்பெறுவது பிள்ளை மிகவும் அறிமுகமான அல்லது பிள்ளையுடன் ஏதேனுமொரு தொடர்பைக் கொண்டுள்ள ஆள் மூலமாகும். பிள்ளை எந்த ஒரு வகையிலும் அறியாத ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் 10% ஆகும். சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதில் உள்ள மோசமான சவால் இதுவாகும்.
ஏப்ரல் 21 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்தான் நாலா பக்கமும் பேசப்படுகிறது. இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஊடகங்கள் இன்னும் பேசி முடித்த பாடில்லை. நாட்டில் அரசியல் என்ற ஒரு விடயம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அரசியல் மட்டும்தான் பேசப்பட வேண்டிய ஒன்று எனக் கிடையாது.
நாட்டிலுள்ள ஆளுமைமிக்க மதகுருமார்கள் வீணான போராட்டங்களைத்தான் நடத்துகிறார்கள். ஏன் இந்த உண்ணாவிரதப் போராட்டங்களை இளம்பிஞ்சுகளுக்காக நடத்தக் கூடாது. எமது நாடு சீமா, வித்யா, சேயா, ரெஜினா என இளசுகளை இழந்தபோது யார் போராட்டம் நடத்தினார்கள்? ஒரு இனத்தின் மீதான குரோதத்தை வெளிக்காட்ட மட்டும்தான் இந்த நாட்டில் போராட்டம் நடக்குமா? அந்தளவுக்கு மதகுருமார்களின் மனிதம் மரணித்து விட்டதா?
ஏன் எமது அரசியல்வாதிகள் கூட இந்த விடயத்தில் மௌனம் சாதிக்கின்றார்கள். ஒன்றும் அறியாத இந்தப் பிஞ்சுகள் மீது கருணை காட்ட எந்த அரசியல்வாதி முன்வருவார்? இவர்கள் மீதான பாலியல் சீண்டல்கள் தொடரும் பட்சத்தில் இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், மதகுருமார்கள் என அனைவரும் குற்றவாளிகள் தான்.
எம்.ஏ.எம்.அஹ்ஸன்
vidivelli