முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தங்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் சில பெரும்பான்மை இனவாதிகள் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு தடை ஏற்படுத்தும் முயற்சியில் மும்முரமாக செயற்பட்டு வருகிறார்கள். முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினுள் நிலவும் கருத்து வேறுபாடுகள் இதற்குச் சாதகமான நிலையினை உருவாக்கியுள்ளன.
திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர தனிநபர் பிரேரணையொன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் ஊடகவியலாளர் மாநாடொன்றினை ஏற்பாடு செய்து தெரிவித்துள்ளார்.
‘நாட்டில் அனைவருக்கும் ஒரு திருமணச் சட்டமே இருக்கவேண்டும். முஸ்லிம் சமூகம் நிச்சயமாக இதனை ஏற்றுக்கொள்ளும்’ எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனையைப் பிரேரணையாக ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் கையளிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
கடந்த 20 வருடங்களில் 90 ஆயிரம் தமிழ், சிங்களவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார். கலப்புத் திருமணங்கள் பலாத்கார மதமாற்றத்தின் கீழ் நடைபெறுவதில்லை. கலப்புத் திருமணங்கள் காதல் திருமணங்க ளாகவே பெரும்பாலும் அமைகின்றன. எனவே அங்கு பலாத்காரத்திற்கு இடமில்லை.
இவ்வாறான திருமணங்கள் விவாகரத்தில் முற்றுப்பெறும்போது முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் பிள்ளைகள் முஸ்லிம் சமூகத்தில் தடுத்து வைக்கப்படுகிறார்கள் என அத்துரலியே ரதன தேரர் தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பலதாரமணம் செய்து கொள்வதற்கென்றே ஒரு சில பெரும்பான்மை சகோதரர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்கள் சில காலத்தின் பின்பு விவாகரத்து பெற்றுக் கொண்டு பிள்ளைகளை பௌத்த மதத்திலே வளர்க்கிறார்கள். இதனை அத்துரலியே ரதன தேரர் ஏன் வெளிப்படுத்தவில்லை என்பது சந்தேகத்திற்கிடமாகவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரின் கருத்துகள் இனவாதத்தைப் பரப்புவதாகவே அமைந்துள்ளது. தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்ப்பதற்கு இப்போதிலிருந்தே தயாராக வேண்டும். அதற்கான புள்ளிவிபரங்களைச் சேகரிக்க வேண்டும்.
அத்தோடு சுமார் 10 வருடகால முயற்சியின் பின்பு முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தங்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தச் சட்டத் திருத்தங்களை தாமதியாது பாராளுமன்றத்தில் அங்கீகரித்துக் கொள்ளவேண்டியது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமுக்கு கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினால் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த பரிந்துரைகள் அரச சட்டவரைஞர் திணைக்களத்திற்கு நீதியமைச்சரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிந்துரைகளை சட்டவரைபாக மாற்றுவதற்கு நீண்டகாலம், சுமார் ஒரு வருட காலம் தேவைப்படும் என முஸ்லிம் சமய விவகார அமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
சட்டத் திருத்தங்களை தற்போதைய பாராளுமன்றத்திலே அங்கீகரித்துக் கொள்வதற்கு என்ன நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் எனவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். முஸ்லிம் சமய விவகார அமைச்சும், நீதியமைச்சும் இணைந்து உடனடியாக திருத்தங்களுக்கான சட்டவரைபொன்றை சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு சமர்ப்பிப்பதே மாற்றுவழி என்றும் அவர் கூறியுள்ளார். அவ்வாறெனில் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இரண்டிலொன்று பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
எமது மூதாதையர்களால் எமக்கென்று வடிவமைக்கப்பட்டுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பாதுகாத்துக்கொள்வது எமது கடமையாகும்.
இந்நிலையில் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தங்களை விரைவில் பாராளுமன்றத்தில் அங்கீகரித்து, காதிநீதிமன்ற கட்டமைப்பைத் தரமுயர்த்த ஆவன செய்வது எமது அரசியல் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.
முஸ்லிம் தனியார் சட்டத்திற்கெதிரான தவறான பிரசாரங்களை, தவறானது என நிரூபிப்பதும் அவர்களது கடமையாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
vidivelli