இலங்கையில் நிலைபேறான அபிவிருத்தி, மனித உரிமைகள் மற்றும் அமைதி ஆகியவற்றை மேம்படுத்துவதே ஐ.நாவின் இலக்கு என்றும், அதன் பிரதிநிதி என்ற வகையில் அனைத்து தரப்பினரிடமும் இந்த இலக்குகள் தொடர்பிலேயே வலியுறுத்துவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் கூறியிருக்கிறார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களில் சிலருக்கு ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பாக செயற்பட்டு ஆதரவளிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அடுத்தே ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் பல நூற்றாண்டு காலமாக செயலாற்றி வருவதாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், நிலைபேறான அபிவிருத்தி, மனித உரிமைகள் மற்றும் அமைதி ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு ஐ.நா.உறுதிபூண்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
எனவே, ஐ.நா.வுடன் தொடர்புகளைப் பேணுகின்ற, இணைந்து பணியாற்றுகின்ற அனைவரும் இந்தக் கொள்கைகளுக்கும் இலக்குகளுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, ஐக்கிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு தரப்பினருடனும் மேற்கொள்ளும் கலந்துரையாடல்களில் இவற்றையே பெரிதும் வலியுறுத்துவதாகவும் ஹனா சிங்கர் கூறியிருக்கிறார். அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ, ‘பிறர் உங்களை மோசமாக சித்திரிப்பதைப் போன்று உண்மையில் நீங்கள் மோசமானவர் இல்லை’ என ஹனா சிங்கர் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே ஹனா சிங்கர் மீது சமூகவலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
vidivelli