பாகிஸ்தானுடன் இணைந்து காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் 74ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மத் வலியுறுத்தியிருக்கிறார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நா.வின் தீர்மானம் உள்ள போதிலும், அப்பகுதி வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்த ஆக்கிரமிப்பின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றாலும், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தவறானது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
” எனவே அமைதியான வழிமுறைகளின் மூலம் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனில் ஐ.நா.வின் கோரிக்கைகளைப் புறக்கணிப்பது என்பது சட்ட நீதியைப் புறக்கணிப்பதற்கு ஒப்பானது” என்றும் அவர் காட்டமாகக் குறிப்பிட்டார்.
”பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதிலும் களைவதிலும் இந்தியாவுக்கு முன் அனுபவம் உள்ள பட்சத்தில், காஷ்மீர் மீது படையெடுக்காமல், ஏன் பேச்சுவார்த்தையை பயன்படுத்தி இருக்கக்கூடாது?” என்று தாம் இந்திய தரப்பிடம் கேட்டதாக மஹாதீர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம், தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையிலேயே, மஹாதீர் முஹம்மத் தற்போது இரு நாடுகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு வலியுறுத்தியிருக்கிறார்.
தற்போது உலகில் அதிகாரத்திலுள்ள சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான மஹாதீர் முஹம்மதின் இந்த வேண்டுகோளை இந்தியாவும் பாகிஸ்தானும் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் விவகாரம் குறித்து எதையும் பேசவில்லை. அவர் பெரும்பாலும் தனது அரசு செய்துள்ள சாதனைகள் என்று தாம் கருதும் விவகாரங்கள் பற்றியே பேசினார். ஆனால், இம்ரான் கானின் பேச்சு முழுவதும் காஷ்மீர் பிரச்சினையை மையப்படுத்தியே இருந்தது.
சுமார் 50 நிமிடங்கள் நீடித்த இம்ரான் கானின் உரைக்கு காஷ்மீரில் மாத்திரமன்றி உலகளவிலும் பலத்த வரவேற்புக் கிடைத்துள்ளது. எனினும் அவர் தனது உரையை சற்றுக் காட்டமானதாகவே நிகழ்த்தினார். அணுவாயுத வல்லமையைக் கொண்டுள்ள இரு நாடுகள் போருக்குச் செல்வது ஆரோக்கியமானதல்ல என்ற செய்தியை அவர் திரும்பத் திரும்ப தனதுரையில் வலியுறுத்தினார். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு உடன் தீர்வைத் தர வேண்டும் என்றும் அவர் தனதுரையில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
அந்த வகையில் இந்திய கட்டுப்பாட்டுக்குட்பட்ட காஷ்மீரில் இரண்டு மாதங்களாக நீடிக்கும் ஊரடங்குச் சட்டத்தை நீக்க முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தரப்புகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்தியாவும் பாகிஸ்தானும் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பின் உதவியின்றி சமரசம் காண்பது சாத்தியமானதல்ல. அந்த வகையில் உலகின் அனுபவமிக்க மூத்த தலைவரான மலேசியப் பிரதமர் மஹாதிர் முஹம்மதின் மத்தியஸ்தத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாயின் சுமுக தீர்வொன்றை எட்டக் கூடியதாகவிருக்கும்.
அந்த வகையில் அவர் ஐ.நா.வில் வலியுறுத்தியுள்ளதைப் போன்று பாகிஸ்தானுடன் இணைந்து காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும். அதுவே பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பேருதவியாக அமையும்.
vidivelli