அம்பாறை மாவட்டத்தின் தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழுவொன்று மற்றுமொரு பாரிய தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளது. நேற்று திங்கட்கிழமை திடீரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 இற்கும் அதிகமான இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் சோதனை சாவடியொன்றை அமைத்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அதேபோன்று இராணுவத்தினருக்கு நேற்று கிடைக்கப்பெற்ற தகவலொன்றை அடுத்து கனரக வாகனமொன்றில் வந்திறங்கிய சுமார் 40 இற்கும் அதிகமான இராணுவத்தினர் சாய்ந்தமருது பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சாய்ந்தமருது அல்-–ஹிலால் வீதியில் அமைந்துள்ள வீடுகள், மையவாடியை அண்டிய பகுதிகளில் படையினர் தேடுதலை மேற்கொண்டதுடன் குறிப்பிட்ட பிரதேசத்தில் வீதியால் சென்ற பொதுமக்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். மேலும் அண்மைக் காலமாக அடிக்கடி இடம்பெறும் இராணுவ சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் குறித்த பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இராணுவத்தினரின் திடீர் தொடர் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.
இதேவேளை, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களின் பின்னர் காத்தான்குடி பிரதேசத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பள்ளிவாசலை அண்மித்ததாக கடற்கரை பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி ஒரு மாதத்திற்கு முன்னர் அகற்றப்பட்டிருந்தது. எனினும் நேற்று முதல் குறித்த சோதனைச்சாவடி மீண்டும் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்
vidivelli