ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்சவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, மேன் முறையீட்டு நீதிமன்றில் ‘செட்டியோராரி’ எழுத்தாணை (Certiorari writ) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வெயங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர ஆகியோர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தலைமையில் நீதிபதி அர்ஜுன் ஒபேசேகர ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன் இம்மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி மஹிந்த சமயவர்தனவையும் உள்வாங்கி மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை முதல் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இம்மனு நாளை 2 ஆம் திகதியும் நாளை மறு தினம் 3 ஆம் திகதி மற்றும் 4 ஆம் திகதி ஆகிய தினங்களில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு வந்திருந்தது.
இதன்போது மனுதாரர்களான காமினி வெயங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர ஆகியோர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜராகி, பிரதிவாதியான கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலுக்காக எதிர்வரும் 7 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், அவசர அவசியமாகக் கருதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரினார். அத்துடன் வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ கோரினார்.
இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, அலி சப்றி ஆகியோருடன் சட்டத்தரணிகளான சுகத் கல்தேரா, ருவந்த குரே, ஹரித் டி மெல் ஆகியோர் சிரேஷ்ட சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனைக்கமைய ஆஜராகியிருந்தனர். இதில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்கல் செய்யப்பட்ட ஒன்றாகும் என்பதுடன், அதிலுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும் குறிப்பிட்டார். அதனால் வழமையான நடைமுறைகளின் பிரகாரம் இந்த மனுவை விசாரணைக்கு உட்படுத்துவது போதுமானது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா எடுத்துரைத்தார்.
எவ்வாறாயினும், இருதரப்பு விடயங்களையும் ஆராய்ந்த பின்னர், இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள், அரசியல் ரீதியான காரணிகளை கொண்டிருப்பதால், மனுவை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிப்பதே பொருத்தமானது என்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட அறிவித்தார். அதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட, அர்ஜுன் ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை 2 ஆம் திகதி மனுவை பரிசீலிப்பதற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தாபய ராஜபக் ஷவை, இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுக்கும் உத்தரவொன்றை அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பேராசிரியர் சந்திரகுப்த தெனுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட அம்மனுவில் பிரதிவாதிகளாக குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஆர்.எம்.ரத்நாயக்க, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக, அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜக் ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ, பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணை அறை பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் திஸாநாயக்க ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் இம்மனு பரிசீலனை செய்யப்பட்டபோது, பிரதிவாதிகளில் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஆர்.எம்.ரத்நாயக்க, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக, அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன ஆகியோருக்கு நாளை 2 ஆம் திகதி மன்றில் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், கோத்தாபய ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய கடவுச்சீட்டு, அடையாள அட்டை தொடர்பிலான அனைத்து ஆவணங்களையும் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
முன்னதாகத் தனது அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இலங்கையின் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பெற்றுக் கொண்டுள்ளதாக மனுதாரர்கள் தாம் தாக்கல் செய்த எழுத்தாணை கோரும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். உரிய பிரஜவுரிமை சான்றிதழை சமர்ப்பிக்காமல் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை பெற்றுக் கொண்டுள்ளதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள், அந்த ஆவணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள விதம் சட்டத்திற்கு முரணாகும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். எனவே, கோத்தாபய ராஜபக் ஷவுக்கு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை இரத்து செய்ய வேண்டும் எனவும், அவரது இலங்கை குடியுரிமையை ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரியுள்ள மனுதாரர்கள், இந்த மனுவை விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கும் வரையில் விநியோகிக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றின் செயற்பாட்டுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் பிரதிவாதியான கோத்தாபய ராஜபக் ஷவுக்கு மேலதிகமாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவின் கீழ் சட்டத்தரணிகளான நவீன் மாரப்பன, கணேஷ் தர்மவர்தன உள்ளடங்கிய குழுவினரும், அமைச்சர் வஜிர அபேவர்தன, ஏனைய அரச ஊழியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளேயும் ஆஜராகினர்.
ஏற்கனவே இந்த விவகாரத்தை உள்ளடக்கியதாக சி.ஐ.டி. குற்ற விசாரணையொன்றை ஆரம்பித்து கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
எம்.எப்.எம்.பஸீர்
vidivelli