இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள், புத்திஜீவிகள், கல்விமான்கள், துறைசார்ந்த ஆளுமைகள் அதிகம் வாழும், வரும் இடமாக கொழும்பு நகரம் உள்ளது. இலங்கை முஸ்லிம் சனத்தொகையில் கொழும்பு மாவட்டத்தில் சுமார் 2,25000 முஸ்லிம்களும், மத்திய கொழும்பில் சுமார் 1,50000 முஸ்லிம்களும் வாழ்கின்றனர்.
நாட்டின் அனைத்து ஊர்களிலும் இருந்து தொழில் நிமித்தம் கொழும்பு நகருக்கு வரும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களின் கணிசமான ஒருதொகையினர் நாளாந்தம் தமது வீடுகளுக்கு செல்கின்றனர். மற்றும் வாராந்தம் தமது ஊர்களுக்கு செல்கின்றவர்களும் அதிகமாக இருக்கின்றனர். அத்துடன் கல்வி நோக்கத்திற்காக கொழும்பு நகர் வந்து அங்கேயே தங்கி வாழும் பலரும் இவர்களில் உள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் முஸ்லிம் சமூகத்தின் முன்னோடிகளாக இருப்பவர்கள்; இருக்க வேண்டியவர்கள். கருத்து, நிலைப்பாடுகளை உருவாக்குவோர். சமூக மேம்பாட்டுக்கும் நாட்டு நலனுக்கும் உழைக்கும் திறன் கொண்டவர்கள்.
தனிப்பட்ட வாழ்வு, குடும்ப வாழ்வு, தொழில் வாழ்க்கை, சமூகப் பணி என்ற பரப்புகளில் எவ்வாறு சமநிலையுடன் வாழ்வது, ஒன்றை ஒன்று மிகைக்காமல் எவ்வாறு ஒவ்வொரு பகுதிக்கும் உரிய இடத்தைக் கொடுத்து வாழ்வது என்பது ஒவ்வொருவரும் அறிந்து செயற்பட வேண்டிய அம்சமாகும்.
இதுவிடயத்தில் இவர்கள் வழிகாட்டப்படுகிறார்களா என்ற கேள்வி உள்ளது. இவர்கள் விடயத்தில் முஸ்லிம் நிறுவனங்கள், அமைப்புகள் உரிய முறையில் கவனம் செலுத்துகின்றதா என்ற கேள்வியும் உள்ளது.
இத்தகையோர் இஸ்லாத்தின் பரந்த, விரிந்த தெளிவுகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஒருசிலர் சுயமாக நூல்களை வாசித்து தம்மை வளர்த்துக் கொள்வார்கள். ஆனால் அதிகமானோர் இந்நிலையில் இருக்க மாட்டார்கள்.
இன்று இஸ்லாம் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அரச அலுவலகங்களில் பணிபுரியும் முஸ்லிம்களிடம் இது தொடர்பில் சகோதர சமூகத்தை சேர்ந்தவர்கள் பல கேள்விகளை எழுப்புகின்றனர். ஆனால் இவைபற்றிய விடை தெரியாது மௌனமாக இருக்கும் பலர் அங்குள்ளனர். அதேநேரம் அரைகுறையாகப் பதில் கொடுத்து சங்கடப்படும் பலரும் அவர்களுக்கு மத்தியில் உள்ளனர். மிகச் சொற்பமானவர்களே தெளிவுடன் இவ்வாறான பிரச்சினைகளுக்கு விளக்கம் கொடுக்கின்றனர்.
இந்த இடத்தில் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுசேரும் வாராந்த ஜும்ஆக்கள் முக்கியம் பெறுகின்றன. முஸ்லிம்களை அறிவூட்டித், தரப்படுத்தும் குத்பாக்களாக எமது குத்பாக்கள் காணப்பட வேண்டும். அதிலும் கொழும்பு நகர பள்ளிவாசல்களின் குத்பாக்கள் இருக்க வேண்டும். ஆனால், இத்தகைய பின்னணியில் குத்பாக்கள் இடம்பெறுவதில்லை என்பதே உண்மை. கால, சூழல் மாற்றங்களுக்கேற்ப குத்பாக்கள் நடைபெறுவது மிகவும் குறைவு.
கொழும்பு நகரப் பள்ளிவாசல்களில் இடம்பெறும் குத்பாக்கள் தொடர்பில் பின்வரும் அவதானங்கள் உள்ளன.
* இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் குத்பாக்கள் இடம்பெறாமை. கதீப்களின் மொழிப் பிரச்சினை இதற்கு முக்கிய காரணமாகும். வாசிப்புப் பழக்கத்திலுள்ள பலவீனம், நவீன மொழி பற்றிய குறைந்த பரிச்சயம் இதற்கு சில காரணங்களாக இருக்கலாம்.
* கால மாற்றங்களுக்கு ஏற்ப தலைப்புக்கள் இல்லாமை. நாட்டு நிலைமைகள், உலகில் நடக்கும் மாற்றங்கள், இதற்குப் பின்னால் காணப்படும் சர்வதேசிய சக்திகள் பற்றிய போதிய தெளிவின்மை இதற்கு காரணங்களாக இருக்கலாம். இதனால் எடுத்த அனைத்திற்கும் இது யூத, நஸாராக்களின் திட்டம் என்று சொல்லக்கூடிய வார்த்தைகளை அதிகம் செவிமடுக்கின்றோம்.
* ஒரு தலைப்பில் குத்பாவை நிகழ்த்தாமல் சிதறிய அமைப்பில் குத்பாக்கள் உள்ளமை. முடிவாக கதீப் சொல்ல வரும் கருத்தை கிரகிக்க முடியாதுள்ளமை.
* அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதில் காட்டும் ஆர்வம், சுபசோபனம் கூறுவதில் இல்லாமை. எச்சரிக்கை செய்வது, தண்டனைகள் பற்றி விரிவாகப் பேசுவது சில கதீப்களின் பண்பாக மாறியுள்ளது.
* இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவது சிரமமானது என்ற மனப்பதிவை கொடுக்கும் வார்த்தைகளே அதிகம் பிரயோகிக்கப்படுகின்றன. அதன் இலகுத்தன்மையுடன் சேர்த்து இஸ்லாத்தை முன்வைப்பது அரிதாகிவிட்டது. இதனால்தான் மிகத் தெளிவாக ஹராமில்லாத பல விடயங்களையும் ஹராம் என்று கூறும் கதீப்களை மிம்பர்களில் காண்கின்றோம்.
* அதிகமான குத்பாக்கள் கேட்கமுடியாதளவு உரத்த குரலில் நிகழ்த்தப்படுகின்றன. இது எமது மரபாகவும் மாறியுள்ளது. ஆக்ரோஷமில்லாமல், அமைதியாக, உள்ளத்துடன் உறவாடும் குத்பாக்களை கேட்பது மிகவும் குறைவாகவே உள்ளது.
* சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள், முதன்மை கொடுக்கப்பட வேண்டிய அம்சங்கள், அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய அம்சங்களை மையப்படுத்திய குத்பாக்கள் மிகவும் குறைவு. கருத்து வேறுபாடுள்ள, கிளை அம்சங்களில்தான் அதிகமான குத்பாக்கள் இடம்பெறுகின்றன.
இதனால் குத்பாக்களின் உயிரோட்டம், பயன் குறைவடைந்து செல்கின்றது. சமூகத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டிய குத்பாக்கள், சிலபோது சமூகத்துக்கு மத்தியில் பிளவையும், பிடிவாதத்தையும் அதிகரித்துள்ளது.
இதன் கருத்து அனைத்து குத்பாக்களும் தரம் குறைந்தது என்பதல்ல. தரமாகவும், கால சூழல் மாற்றங்களைக் கருத்திற் கொண்டு நிகழ்த்தப்படும் குத்பாக்களும் கொழும்பு நகர்ப் பள்ளிவாசல்களில் உள்ளன. இத்தகைய குத்பாக்களை நாடிச் செல்லும் மக்களும் உள்ளனர். ஆனால் இதுபோன்ற குத்பாக்கள் குறைவாக உள்ளன என்பதே இங்கு சொல்லவரும் கருத்தாகும்.
எனவே மிம்பர்களைப் பயன்படுத்தும் உலமாக்கள் அதன் அமானிதங்களைக் கவனத்தில் எடுக்க வேண்டும். அதற்குத் தகுதியானவர்களாக தம்மை மாற்றிக் கொள்ள தொடராக தயாராக வேண்டும்.
மிம்பர்கள் கருத்துருவாக்கம் நடைபெறும், சிந்தனைகளைப் புடம்போடும் இடங்களாகும். கால மாற்றங்களுக்கு ஏற்ப எப்படி சமூகம் வாழ வேண்டும், தமது அடிப்படைப் பிரச்சினைகள் எவை, எங்கு விட்டுக் கொடுக்கலாம், விட்டுக் கொடுக்க முடியாத இடங்கள் எவை, தமது இருப்புடன் தொடர்பான அம்சங்கள் யாவை போன்ற பல்வேறு விடயங்களில் சமூகம் வழிகாட்டப்பட வேண்டும். மனிதனாக வாழும் நாம் எப்படி பிற சமூகங்களுடன் வாழ வேண்டும். மனிதம் என்ற அடிப்படையில் இந்த நாட்டை கட்டியெழுப்ப எமது பங்களிப்பு எவ்வாறு அமையலாம் போன்ற அம்சங்கள் முக்கியமானவை.
கதீப்களை தயார்படுத்துவற்கான நிறுவனங்கள் காணப்பட வேண்டும்.
முன்வைப்புத் திறன், தலைப்புக்களைத் தெரிவு செய்தல் ஆற்றல், மொழியாற்றலை மேம்படுத்தல், உளவியல் மற்றும் உலக நடப்புக்களை அறிதல் போன்ற பல்வேறு அம்சங்களைப் போதித்து, திறன்விருத்தியைக் கொடுக்கும் வகையில் இந்நிறுவனங்கள் செயற்பட வேண்டும்.
இதன் மூலம் பயனுள்ள குத்பாக்களை மிம்பர்களில் செவிமடுக்கலாம். முஸ்லிம் சமூகத்தை அறிவு, ஆன்மீக ரீதியாக தயார்படுத்தலாம். இது பற்றி சிந்திப்போமாக.
ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்
vidivelli