முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்கா எனும் முகத்திரை இன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் இருந்த காலத்தில் அச்சட்டத்தின் கீழேயே நிகாப் மற்றும் புர்காவுக்கு தடைவிதிக்கப் பட்டிருந்தது. அவசரகால சட்டம் நீக்கப்பட்டதும் நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீங்கியுள்ளது என பொலிஸ் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு செய்தும் பொதுஇடங்களில், பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிய இயலாத சூழலே காணப்படுகிறது.
ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, அவரது அதிகாரத்தின் கீழ் இருக்கும் மாகாணத்தில் நிகாப் மற்றும் புர்காவுக்கு தடை விதித்துள்ளமை முஸ்லிம் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நாட்டின் நாட்டு மக்களின் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் பொலிஸ் திணைக்களம் நிகாப் மற்றும் புர்காவுக்கான தடை நீங்கியுள்ளதென உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்ற நிலையில் மாகாண ஆளுநர் ஒருவரால் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலை மீறமுடியுமா? என்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
நிகாப், புர்காவுக்குத் தடை
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்படைவாதக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நாட்டின் ஏனைய இன மக்கள் மத்தியில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கு பலத்த எதிர்ப்பினை நாடெங்கும் ஏற்படுத்தின. தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு முன்பு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இனவாதக் குழுக்களே முகத்திரைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்தன. ஆனால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்பு நாடு தழுவிய ரீதியில் ஏனைய சமூகங்கள் அனைத்தும் எதிர்ப்பினை வெளியிட்டன. முகத்திரை அணியும் பெண்களை தீவிரவாதிகளாக அடையாளம் காட்டின.
இந்நிலையிலே நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்காக பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கு தடைவிதித்து விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டார். ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து மறுதினம் ஏப்ரல் 22 ஆம் திகதி இரவு முதல் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2 ஆவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமையவே அவசரகால சட்டம் அமுலாக்கம் தொடர்பான விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்திற்கு பாராளுமன்றம் ஏப்ரல் 24 ஆம் திகதி அனுமதி வழங்கியதுடன் அன்று முதல் ஒவ்வொரு மாதமும் 22 ஆம் திகதி அவசரகால சட்டத்தை ஜனாதிபதி நீடித்து வந்தார். இந்நிலையிலே அவசரகால சட்டத்தின் கீழ் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு முகத்திரை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது?
அவசரகால சட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ளது. எனினும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொலிஸாருக்கு ஒத்துழைப்புகளை வழங்க இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 12 ஆவது சரத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே அவர் இராணுவத்தை ஈடுபடுத்துவதற்கான உத்தரவுகளை வழங்கியுள்ளார்.
முகத்திரைக்கான தடை நீக்கம்
கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி முதல் அவசரகால சட்டத்தின் நீக்கத்துடன் முஸ்லிம் பெண்களின் முகத்திரைக்கான தடையும் நீங்கியிருந்தது. என்றாலும் விசேட வர்த்தமானி மூலம் தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையின் தடையும் நீங்கியுள்ளதா? என்பது தொடர்பில் முஸ்லிம் சமூகம் தெளிவற்று இருந்தது. இந்நிலையில் இது தொடர்பில் தெளிவுகளை, முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பொலிஸ்மா அதிபரிடம் கோரி, கடிதமொன்றினை அனுப்பியிருந்தார்.
பொலிஸ் திணைக்களத்தின் விளக்கம்
முகத்திரை தடை நீக்கம் தொடர்பாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பொலிஸ்மா அதிபருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார். அமைச்சரின் கடிதத்துக்கு பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கடந்த 7 ஆம் திகதி பதில் வழங்கியிருந்தார். பதில் கடிதத்தில் முகத்திரைக்கான தடை நீக்கம் குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நிகாப், புர்கா மற்றும் முகத்திரை தடை அவசரகால சட்ட விதிகளின் கீழேயே அமுலில் இருந்தது. அவசரகால சட்டம் அமுலில் இல்லாததால் நிகாப், புர்கா மற்றும் முகத்திரை தடைக்கான சட்டமும் அமுலில் இல்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் முகத்திரைக்கான தடைச்சட்டம் நீங்கினாலும் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதில் அவதானமாக நடந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
நாட்டில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட பெண்கள் அணியும் முகத்திரைக்கான தடையும் நீங்கியுள்ளது என பொலிஸ் திணைக்களம் தெளிவுபடுத்தியிருந்தாலும் முஸ்லிம் பெண்கள் தற்போதைய சூழ்நிலையில் பொது இடங்களில் முகத்திரை அணிவதால் ஏற்படக்கூடிய அசாதாரண நிலைமைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இது விடயத்தில் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
முகத்திரைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அவசரகால சட்டத்தின் நீக்கத்துடன் நீங்கியிருந்தாலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை ஏற்கனவே மக்களுக்கு வழங்கியிருந்த வழிகாட்டல்களையே தொடர்ந்தும் பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இம்மாதம் 1 ஆம் திகதி உலமாசபை அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை பின்வருமாறு தெரிவிக்கிறது.
ஆடையைத் தெரிவு செய்து அணிவது ஒவ்வொரு மனிதனினதும், பெண்ணினதும் அடிப்படை மனித உரிமையாகும். இலங்கையின் அரசியல் யாப்பிலும் இது பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்பு நாட்டில் ஓர் அசாதாரண நிலைமை உருவானது. இந்நிலையிலே அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியது. அவசரகால சட்டத்தின் கீழ் நிகாபும் தற்காலிகமாகத் தடைக்குள்ளானது. அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி நீக்கப்பட்டது. அத்தோடு விஷேட அரசாங்க வர்த்தமானியொன்றும் வெளியிடப்பட்டது. நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பாதுகாப்புப் படையினரைக் கடமையில் ஈடுபடுத்தும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டது.
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து ஏற்பட்ட அச்ச உணர்வுகளிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இவ்வாறான தற்போதைய நிலையில் முஸ்லிம் பெண்கள் பகிரங்க இடங்களில் முகத்திரை அணிந்தால் அசாதாரண நிலைமைகள் உருவாகலாம். எனவே ஸ்திரமற்ற இன்றைய அரசியல் சூழலில் இனவாதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்காத வகையில் நாம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமும் முஸ்லிம் பெண்கள் முகத்திரையணிந்து பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டியுள்ளார். மேலும் அவர் ‘கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விசேட அரசாங்க வர்த்தமானியையும் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். தற்போது முகத்திரைக்கான தடையும் நீங்கியுள்ளது. எனினும் நமது சூழலிலுள்ள பெரும்பான்மை சகோதரர்களின் மனோபாவமும், அச்சமும் இன்னும் மாறியதாகத் தெரியவில்லை. இந்நிலையில் முஸ்லிம் பெண்கள் முகத்திரையணிந்து வெளியில் செல்லும்போது அசெளகரியங்களுக்கு ஆளாக இடமுண்டு. எனவே முகத்திரையணிந்து பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், காலநேர சூழ்நிலைகளைக் கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.
பாதுகாப்புத் தரப்பினரின் சோதனை நடவடிக்கைகளின் போது பூரண ஒத்துழைப்பினை வழமைபோல் வழங்குமாறும் வேண்டுகிறோம். உலமாக்களின் வழிகாட்டல்களின்படி பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒத்துழைப்பு நல்கி எமது உரிமைகளை எதிர்காலத்தில் உறுதி செய்ய முன்வருமாறும் வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்காரவும் முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் நிகாப் மற்றும் புர்கா அணிவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கோரியுள்ளார்.
‘அவசரகால சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் நிகாப், புர்கா அணிவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டதாகத் தெரிவிக்க முடியாது. இதனை சட்டத்தால் தடுப்பதற்குத் தேவையில்லை. மாறாக இதனை பொது இடங்களில் தவிர்த்துக் கொள்ளுமாறே அணிபவர்களிடம் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
நிகாப் மற்றும் புர்கா தடையை நீக்குவதன் மூலம் ஆண், பெண் அடையாளத்தை அறிந்துகொள்ள முடியாத நிலையே ஏற்படும். இது பாரிய பிரச்சினையாகும். பாதையில் நாம் பயணிக்கும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டும். அத்தோடு எதிரே வரக்கூடியவர் ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.
அத்தோடு அனைத்து இடங்களிலும் ஆண், பெண்களின் முகம் வெளிப்படையாக இருக்க வேண்டும். தங்களது சொந்த இடங்களில், வீடுகளில் முகத்திரை அணிவதை நாம் எதிர்க்கவில்லை. அது அவர்களின் விருப்பமாகும். ஆனால் பொது இடங்களில் முகத்திரை அணிய வேண்டாம் என நாம் வினயமாக கேட்டுக் கொள்கிறோம். இதனை சட்டத்தின் மூலம் செய்ய வேண்டியதில்லை.
அவசரகால சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு முகத்திரைக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கை மூலம் அறிகிறேன். ஆனால் இந்தச் சட்டம் அவசரகால சட்டத்தின் கீழ் வருவதல்ல. இது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதில் இருக்கும் பிரச்சினையாகும். ஒருவர் ஒரு தவறை செய்திருந்தால் அந்த தவறை யார் செய்தார் என்பதை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு அடையாளப்படுத்தும் பிரச்சினையிலே இந்த நிகாப் பிரச்சினை பார்க்கப்படுகிறது. மாறாக அவசரகால சட்டத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண முன்னாள் ஆளுநர்
நிகாப், புர்கா தொடர்பில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவரது கருத்துக்களும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கருத்துக்களை ஒத்தவையாகவே அமைந்துள்ளன.
‘முஸ்லிம் சமூகம் கண்ணியமாக அரசுக்கு வழங்கிய சுய உறுதிமொழியினைக் காப்பாற்றும் வகையில் செயற்பட வேண்டும். நிகாப் மற்றும் புர்கா என்பனவற்றைப் பொது இடங்களில் அணிவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்’ என அசாத் சாலி முஸ்லிம் சமூகத்தைக் கோரியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் பொது இடங்களில் நிகாப், புர்கா அணிவதைத் தவிர்க்குமாறு உலமா சபை ஏற்கனவே அறிவித்துள்ளது. நிகாப், புர்காவுக்கான தடை நீக்கப்பட்டுவிட்ட பின்பும் முன்னைய நிலைப்பாட்டிலே இருப்பதாக உலமாசபை தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களையடுத்து அவசரகால சட்டத்தின் கீழ் நிகாப், புர்கா தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது தடை நீங்கியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நிகாப், புர்கா தடை நீக்கத்திற்கு பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய கட்சிகளும் மற்றும் அமைச்சர்கள் போன்றோரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஊவா மாகாண ஆளுநரும் அம்மாகாணத்தில் முகத்திரைக்கு தடை விதித்துள்ளார்.
நிகாப், புர்காவை நிரந்தரமாக தடை செய்வதற்கு அரசாங்கம் சட்டம் கொண்டுவர முயன்றபோது அதனை எதிர்த்து நாம் தடுத்தோம். அப்போது நாம் சுயமாக செயற்பட்டு முகத்திரை அணிவதை தவிர்ப்பதாக அரசுக்கு வாக்குறுதியளித்தோம்.
ஆனால் மீண்டும் சிலர் பொது இடங்களில் முகத்திரை அணிய ஆரம்பித்துள்ளதால் பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அதனால் பொது இடங்களில் முகத்திரை அணிவதைத் தவிர்த்து தனிப்பட்ட இடங்களில் அணியுமாறு சமூகத்தைக் கோ-ருகிறோம். வீணான பிரச்சினைகள் உருவாகுவதைத் தவிர்க்க ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணத்தில் முகத்திரைக்குத் தடை
நாட்டில் சட்டங்கள் ஒவ்வொரு மாகாணத்திற்குமென தனித்தனியாக இயற்றப்படுவதில்லை. சட்டங்கள் முழு நாட்டுக்குமே அமுல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றான ஊவா மாகாணத்தில் நாட்டின் சட்டத்தையும் மீறி முகத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை நகைப்புக்குரியது என்று கூட சொல்லலாம்.
ஆளுநர் மைத்திரி குணரத்ன
‘ஊவா மாகாணத்தினதும், மக்களதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையை தொடர்ந்தும் அமுல்படுத்தியிருக்கிறேன். ஊவா மாகாணத்தில் நிகாப், புர்கா அணிந்து செல்பவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள் என ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், ‘ஊவா மாகாணத்தில் நிகாப் மற்றும் புர்கா அணிந்து செல்பவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி அவர்கள் அடிப்படைவாத குழுக்களைச் சேர்ந்தவர்களா இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்.
அவசரகால சட்டம் நீக்கப்பட்டதும் நிகாப் மற்றும் புர்காவுக்கான தடை நீங்கியிருந்தாலும் அத்தடை ஊவா மாகாணத்தில் அமுலில் இருக்கும். இப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதியே இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளேன்.
முஸ்லிம்கள் 600 வருடங்களுக்கும் மேலாக எமது கலாசாரத்துடன் ஒன்றிணைந்து வாழ்கிறார்கள். இந்நிலையில் அண்மைக் காலமாக நிகாபும் புர்காவும் சம்பிரதாய முஸ்லிம்களின் கலாசாரத்தைப் பாதித்துள்ளன.
பெண்கள் நிகாப் மற்றும் புர்கா தொடர்ந்தும் அணிவார்கள் என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவுடன் தொடர்புபட்ட தீவிரவாதிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதே அர்த்தமாகும். ஏப்ரல் 21 சம்பவத்துடன் எமது முஸ்லிம் சமூகம் தொடர்புபடவில்லை என்றே நாம் கருதுகிறோம். ஏப்ரல் தாக்குதல்களின் பின்பு தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. தாக்குதலில் 250 க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாகியிருக்கிறார்கள். இந்நிலைமையை இந்நாட்டில் மீண்டும் அனுமதிக்க முடியாது.
இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு மிகவும் சவாலாக அமைந்திருந்த காலத்தில் ஞானசார தேரருக்கு எதிராக குரல் கொடுத்தவன் நான். நான் ஒரு இனவாதியோ தீவிரவாதியோ அல்ல. ஆனால் நான் முஸ்லிம், பௌத்தம், தமிழ் என எந்த தீவிரவாதம் என்றாலும் எதிர்ப்பவன்.
நிகாப் மற்றும் புர்கா அணியப்படாத காலத்தில் எமக்குள் எந்தப் பிரச்சினையும் உருவாகவில்லை. தீவிரவாதிகளின் செயற்பாட்டினாலே சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே வைராக்கியம் வளர்ந்து முரண்பாடுகள் உருவாகின. எனவே, தேசிய பாதுகாப்புக்கும், நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ள நிகாப், புர்காவை ஊவா மாகாணத்தில் தடை செய்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறென்றால் ஊவா மாகாணத்தில் மாத்திரம் தான் தீவிரவாதிகள் இருக்கிறார்களா? ஆளுநர் மைத்திரி குணரத்னவின் கருத்து எம்மை இவ்வாறே நினைக்கச் செய்கிறது.
ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் தன்னிச்சையான செயற்பாடுகள், அதுவும் ஓர் இனத்தை ஆடையை அடிப்படையாகக் கொண்டு தீவிரவாதிகளாக முத்திரை குத்த முனைந்திருப்பதை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்பது புதிராகவே இருக்கிறது. இது தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும்.
முகத்திரை தடை நீக்கத்திற்கு எதிர்ப்பு
முகத்திரை அணிவதற்கான தடை நீக்கப்பட்டமைக்கு பலதரப்புகளிடமிருந்தும் எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. அமைச்சர் சம்பிக்க ரணவக்க முகத்திரை அணியும் பெண்கள் அடிப்படைவாதிகள் என்று வர்ணித்துள்ளார். முகத்திரை அடிப்படைவாதிகளின் ஆடை எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் தீவிரவாதத்தை அடியோடு களைந்தெறிய முகத்திரை அனுமதிக்கப்படக்கூடாது தடை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்மஹிந்த அமரவீர
நிகாப் மற்றும் புர்காவுக்கான தடை நீக்கப்பட்டுள்ளமை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு சவாலாக மாறியுள்ளது. நாட்டில் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையினாலே அண்மையில் நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. அரசாங்கம் நிகாப், புர்காவை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம
முஸ்லிம் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நிகாப், புர்காவுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் அரசியல்வாதிகளின் அழுத்தங்கள் காரணமாகவே இத்தடை நீக்கப்பட்டுள்ளது. நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்பு இது தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படாமை ஆபத்தானதாகும். இத்தடை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நிரந்தர தடை ஏற்படுமா?
நிகாப் மற்றும் புர்கா அணிவதை நிரந்தரமாக தடைசெய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையை நாம் அறிவோம். கடந்த ஜூலை மாதம் 30ஆம் திகதி நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரள முகத்திரை அணிவதை நிரந்தரமாக தடைசெய்வதற்கு அமைச்சரவைப் பத்திரமொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அமைச்சரவையில் பெரும்பான்மை அமைச்சர்கள் ஆதரவும் வழங்கியிருந்தார்கள். இது தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கால அவகாசம் கோரியதையடுத்து அப்பத்திரம் பின்தள்ளப்பட்டது.
நிகாப் மற்றும் புர்கா ஆடைகளுக்கு முற்றாக தடை விதிக்காது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் மாத்திரம் அதனைத் தடை செய்யும் வகையில் சட்டமியற்றுவது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் நீதியமைச்சர் ஆலோசனை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிகாப், புர்காவை நிரந்தரமாக தடைசெய்யாது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக தடை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
முகத்திரைக்கான தடை நாட்டில் தற்போது அமுலில் இல்லை. பொது இடங்களிலும் முகத்திரை அணிய முடியும் என்றாலும் சட்டத்தை அமுல்படுத்துவதில் சிக்கல்கள் உருவாகியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
நடைமுறையில் முகத்திரை தடை நீக்கியதாகத் தெரியவில்லை.
பொது இடங்களில் முகத்திரை அணிந்து செல்லும் பெண்கள் சந்தேகம் கொண்டே நோக்கப்படுகின்றார்கள். இந்நிலைமை மாற்றம் பெறவேண்டும். இந்நிலைமையை சட்டத்தினால் மாத்திரம் மாற்றிவிட முடியாது.
முஸ்லிம் சமூகத்தில் இது பற்றி எழுந்துள்ள குழப்பங்கள் நீக்கப்பட்டு தெளிவுகள் வழங்கப்படவேண்டும்.
இதுவிடயத்தில் உலமா சபை நாட்டின் இன நல்லிணக்கம், முஸ்லிம் சமூகத்தில் பாதுகாப்பை முன்னிறுத்தி பகிரங்க தீர்மானத்தை உடன் அறிவிக்க வேண்டும்.
vidivelli