அரசியலமைப்பை மீறியே ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார்
சபையில் ஹக்கீம், ரிஷாத், முஜீப் குற்றச்சாட்டு
ஜனநாயகத்தை மீறிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன மாறிவிட்டார். அரசியலமைப்பினையும் சபாநாயகர் அறிவிப்பையும் மீறி ஜனாதிபதி செயற்பட முடியாதென எதிர்க்கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் சபையில் சாடினர். ஜனாதிபதி விட்ட தவறை அவரே சரிசெய்ய வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபை அமர்வுகளின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் உரை நிகழ்த்திய போதே இந்த விடயங்களை சுட்டிக்காட்டினர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் உரையாற்றுகையில்,
பாராளுமன்றத்தில் பிரதமருக்கும் ஆளும் கட்சிக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கம் பெரும்பான்மை இழப்பதாக பாராளுமன்றத்தில் சபாநாயகர் மூலமாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இப்போது அரசாங்கம் ஒன்றும் பிரதமர், அமைச்சர்கள் எவரும் இல்லை. அவ்வாறிருக்கையில் இன்னமும் ஊடகங்களில் இவர்களை பிரதமர், அமைச்சர்கள் என குறிப்பிடுவது பாராளுமன்ற அங்கீகாரத்தை மீறும் ஜனநாயக விரோத செயற்பாடாகும்.
இன்றும் ஊடகங்களில் இவர்களின் செய்தியாளர் சந்திப்புகள் பிரசுரிக்கப்படும்போது சகல ஊடகங்களிலும் இவர்கள் அமைச்சர்கள், மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் என அடையாளப்படுத்துகின்றனர். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டுள்ளது, சபாநாயகர் அறிவித்தல் பதியப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்தும் ஊடகங்களில் இவர்களை அமைச்சர்கள், பிரதமர் என கூறுவது எமது சிறப்புரிமையை மீறும் செயற்பாடாகும். ஆகவே இதனை கவனத்தில் கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் கூறுகையில்,
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடியவர்கள் குறைந்தபட்சம் பட்டதாரியாகவாவது இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாததால்தான் நாகரிமற்ற முறையில் கடந்த தினங்களில் பாராளுமன்றத்தில் செயற்பட்டனர். இவர்களின் முறையற்ற செயற்பாட்டினால் பாராளுமன்ற அப்பாவி ஊழியர்கள், பொலிஸார் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்தனர். அதனால் மிளகாய்த்தூள் கரைத்து எறிந்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் அரச தரப்பு என சொல்லிக்கொண்டிருப்பவர்கள் உங்களுக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நானும் அகதி முகாமில் இருந்தே பாராளுமன்றம் வந்தேன். நான் செய்யாத பல குற்றச்சாட்டுக்கள் எனக்கெதிராக கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டு வந்தன. நான் நேர்மையாக செயற்பட்டு வந்தமையால் அவற்றுக்கு நான் தைரியமாக முகம்கொடுத்தேன். இறுதியில் எனக்கு வெற்றி கிடைத்தது. அதேபோல் உங்கள் நேர்மையான செயலுக்கு உங்களுக்கும் வெற்றிகிடைக்கும்.
அத்துடன் தற்போது இருக்கும் பிரச்சினைக்கு பாராளுமன்றத்தில் தீர்வு காணமுடியாமல் இருக்கும் நிலையில் பொதுத் தேர்தலில் தீர்வுகாண முயற்சிப்பது சிறுபிள்ளைத்தனமான செயலாகும். அத்துடன் நாமல் குமார தெரிவித்த கொலை சதி முயற்சியில் ஜனாதிபதி, கோத்தாபய ராஜபக் ஷவுடன் எனது பெயரையும் தெரிவித்திருந்தார். ஆனால் ஊடகங்கள் எனது பெயரை மறைத்தார்கள். இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன். நாமல் குமாரவின் நடவடிக்கையால் தற்போது அரசியலில் மோசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் எனது பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றுகையில்,
பாராளுமன்றத்துக்குள் இருந்துகொண்டே சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக விமல் வீரவன்ச ஊடக சந்திப்பு நடத்தி தெரிவிக்கின்றார். சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் பாராளுமன்றத்தில் ஒருமுறை இருக்கின்றது. நிலையியற் கட்டளையின் பிரகாரம் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவந்து சபாநாயகரை நீக்கலாம். ஆனால் அவர்கள் சபைக்கு வராமல் பாராளுமன்றத்துக்குள் ஊடக சந்திப்புக்களை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு பின்னால் இருந்தே இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர். ஜனாதிபதியும் பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு எதிராக செயற்படுகின்றார். பாராளுமன்ற தீர்ப்புகளை அவர் நிராகரித்து வருகின்றார். அத்துடன் சபாநாயகரை விமர்சிக்குமாறு ஜனாதிபதி சிலருக்கு கொந்தராத்து வழங்கியுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் இந்த செய்தியை ஜனாதிபதி செயலகம் இதுவரை நிராகரிக்கவில்லை என்றார்.
-Vidivelli