குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 24 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சட்டவிரோதமாகக் கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டமை, முறையற்ற வகையில் நிதி சேகரித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தாம் தடுத்து வைத்திருந்தமையை ஆட்சேபித்து, வைத்தியர் ஷாபி தாக்கல் செய்த மனுவே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனு கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவவேனக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டது. இதன்போது இந்த மனு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்களை திரட்டுவதற்கு கால அவகாசம் தேவையென சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் துஷித் முதலிகே கோரியதற்கமைய அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டே இவ்வாறு குறித்த மனு அடுத்த வருடம் ஜனவரி 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
vidivelli