ஹபரனை – ஹிரிவட்டுன, தும்பிக்குளம் காட்டில் 7 பெண் யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் கீழ் சீகிரிய வனஜீவராசிகள் அலுவலகம் ஊடாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யானைகளின் மரணத்தின் பின்னணியில் பாரிய குற்றமொன்று இருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையில் அதுதொடர்பில் விசாரணைகள் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு சூழல் மற்றும் இயற்கை தொடர்பிலான கற்கை நிலையத்தின் தலைவர் ரவீந்ர காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் நேற்று மாலைவரை விசாரணைகள் சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதை சி.ஐ.டி.க்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவும் உறுதி செய்தனர். எனினும் இந்த சம்பவம் குறித்து ஹபரணை பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் உறுதி செய்தனர்.
இதனிடையே, இவ்வாறு மர்மமாக உயிரிழந்த மேலும் யானைகளின் சடலங்கள் தும்பிக்குளம் காட்டில் உள்ளனவா என்பதை உறுதி செய்யவும், உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய ஏதேனும் சான்றுகள் கிடைக்கின்றதா என ஆராயவும் 10 குழுக்கள் தும்பிக்குளம் காடு முழுவதும் விஷேட தேடுதல்களை ஆரம்பித்துள்ளன. வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், இராணுவத்தினர் பொலிஸார் இணைந்து இந்த 10 குழுக்களாக சேர்ந்து இந்த சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனைவிட மேலும் பல குழுக்கள் கொரசகல்ல பகுதியில் இருந்து ஹிரிவடுன்ன குளக்காடு வரையில் யானைகள் பயணிக்கும் பாதைகள் ஊடாகவும் விசேட சோதனைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
யானைகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த யானைகள் கலாவெவ பகுதியிலிருந்தே இங்கு வருகை தந்துள்ளமை இதுவரையிலான விசாரணைகளில் தெரியவ்ந்துள்ளன.
இந்த யானைகள் ஹபரணை காட்டில் வசிக்கும் யானைகள் இல்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 27 ஆம் திகதி வெள்ளியன்று நான்கு பெண் யானைகளின் உடலங்கள் முதலில் மீட்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் 28 ஆம் திகதி சனியன்று அதிகாலை ஒரு யானையின் உடலம் மீட்கப்பட்டது. இதன்போது அந்த யானையின் அருகே அதன் 4 வயதான குட்டி உயிருடன் நின்றிருந்தமை விசேட அம்சமாகும். அதன் பின்னர் மேலும் இரு யானைகளின் சடலங்கள் அப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டன.
இவ்வாறு மீட்கப்பட்டுள்ள 7 யானைகளும் பெண் யானைகள் என்பதுடன், அவற்றில் 3 யானைகள் கர்ப்பமாக இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த யானைகளுக்கு விஷம் கலந்த உணவுகள், நீர் கொடுக்கப்பட்டதன் விளைவாக அவை மரணமடைந்ததா என விஷேட அவதானம் செலுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், உயிரிழந்த 7 யானைகளும் பெண் யானைகள் என்பதும், ஒரு யானையின் அருகே அதன் குட்டி உயிருடன் இருந்தமை தொடர்பிலும் இந்த விசாரணைகளில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. விஷம் ஊட்டப்பட்டதா என்பதைவிட, இந்த யானைகள் அதிகார வர்க்கத்திலுள்ள எவரினதும் தேவைக்காக பலி பூஜைகளுக்குப் பலியாக்கப்ப்ட்டதா என்பது குறித்தும் தற்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலும் விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், யானைகளின் பிரேத பரிசோதனைகள் நிறைடையும் வரை மரணத்துக்கான உறுதியான காரணத்தை வெளியிடுவது சாத்தியமில்லையென வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்தார். இந்நிலையில் அதற்கான காரணத்தை கண்டறிய 7 யானைகளினதும் உடற் கூறுகள் அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான பின்னணியிலேயே சூழல் மற்றும் இயற்கை தொடர்பிலான கற்கை நிலையத்தின் தலைவர் ரவீந்ர காரியவசம், இந்த யானைகளின் மர்ம மரணத்தின் பின்னணியில் மனித செயற்பாடுகள் உள்ளதாக சந்தேகம் எழும் நிலையில், அவை வனஜீவராசிகள் சட்டம், பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டங்களின் கீழ் குற்றங்களாக இருக்கலாம் என்பதால் சி.ஐ.டி. ஊடாக விஷேட விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
vidivelli