- இஸ்ஸத் அபூ ஷப்கீ
கடந்த வருடம் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டபோது, இலங்கை எதிர்வரும் மூன்றாண்டுகளுக்கு மீள் செலுத்தவேண்டிய கடன்களின் தொகை மிக அதிகமாக இருப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும் 2018ஆம் ஆண்டு நாடு மீளச் செலுத்த வேண்டிய மூலதனக் கடன்கள் குறைவாகவே காணப்பட்டன. ஏனெனில், இவ்வருடம் இலங்கைக்கான 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அபிவிருத்திக் கடன் முறிகள் முதிர்ச்சியடைகின்றன. இதைவிடவும் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டியும் 600 மில்லியன் அமெரிக்க டொலராகக் கணக்கிடப்பட்டிருந்தது.
இந்த மீள் செலுத்தவேண்டிய முழுத் தொகைகளை இவ்வாண்டில் பெறப்படத் திட்டமிட்டுள்ள 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அபிவிருத்திக் கடன் முறிகள் மூலமாக அவற்றை ஈடுசெய்ய அரசால் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாயின் 2018ஆம் ஆண்டைவிட 2019ஆம் ஆண்டு பாரதூரமான கடன்பளு கூடிய ஆண்டாக இருக்கப்போகிறது என்பது யதார்த்தமாகும். அதாவது, 2018இல் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் மீள்செலுத்த வேண்டியதானதும் சேர்த்து 2019இல் 4.2 பில்லியன் அமெரிக்க டொலராக கடன்தொகை உயர்ந்துள்ளது. அடுத்து இதே போன்றதொரு தொகையை 2022ஆம் ஆண்டிற்குப் பின்பு செலுத்த வேண்டியுமுள்ளது. ஆனாலும் 2020 முதல் 2022 வரையுள்ள ஒவ்வொரு வருடமும் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்தொகை மீள்செலுத்த வேண்டியுமுள்ளது. அதனால்தான் 2018 ஆம் ஆண்டே மீள் செலுத்துகைக் கடன் குறைந்த வருடமாக கணிக்கப்பட்டது.
அதனால் நிகழ் ஆண்டில் வரவிருக்கும் 2019 ஆம் ஆண்டுக்குரிய கடன் சுமைகளை மீளளிப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டுத் தயார் செய்யவேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்பட்டிக்கிறது. இதனைக் கருத்திற்கொண்டு பெற்ற கடனைச் செலுத்த மேலும் கடன் பெறுவதைத் தவிர்ப்பதற்கும் சென்மதி நிலுவைப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கும் முறையாகத் திட்டமிட்டு வினைத்திறனுடன் நல்லாட்சியரசு செயற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற, நிலையற்ற தன்மையும் நாணயப்பெறுமதியின் வீழ்ச்சியும் தொடர் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களால் பாதிக்கப்பட்டு வினைத்திறனை இழந்துள்ளதன் காரணமாக 2018ஆம் ஆண்டிற்கான மீளளிக்கவேண்டிய கடன் தொகையையும் முழுமையாக செலுத்த முடியாமல் அரசாங்கம் திறனிழந்து நிற்கிறது. இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு மீளளிக்க வேண்டிய கடன் தொகை இமாலய அளவு உயர்ந்து காட்சியளிக்கிறது.
அதனால் வேறு வழியேயின்றி பொதுமக்களின் வாழ்வுக்கான வருமானத்தில் கைவைக்கும் வரிகளாகவும் செலவினங்களை அதிகரிக்கச் செய்யும் வரிகளாகவுமே பற்றாக்குறையை நிவர்த்திக்கப் பொருத்தமான வழியாக இந்த வரி விதிப்புகளை ஆட்சித்தலைமைகள் தெரிவு செய்துள்ளன. இந் நிலையைக் கருத்திற்கொண்டுதான் கடந்த வாரத்திற்கு முன் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய நிதிச் சட்டத்தை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்துள்ளனர்.
இப்புதிய வரிகள் சென்ற வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட நடைமுறைப்படுத்தப்படாதவையாகும். இவைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வருமானத்தை ஈட்டிக் கொள்ள சமர்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில புதிய வரிகளுக்குமான அங்கீகாரத்தையும் கோரியுள்ளனர். அதேபோல கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி நிறுவனங்களின் மீது அறிமுகப்படுத்திய கடனை மீளச்செலுத்தும் வரியை நடைமுறைப்படுத்தி அவற்றை வசூலிக்கும் இந்தத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அனைத்து தொலைபேசி சேவை நிறுவனங்களும் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஆனாலும் அதிகரித்துச் செல்லும் கடன் சுமையை சீர்செய்யும் நோக்கில் அரசாங்கம் மீளவும் வரியை அமுல்நடத்த அனுமதி கோரியுள்ளது. அதனால் எதிர்வரும் ஆண்டில் மக்களின் தொலைபேசிக் கட்டணங்களில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையவுமுள்ளது.
இவற்றை விடவும் வாகனங்களுக்கும் புதுவகையான வரிகளை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த வகையில் டீசலில் இயங்கும் 2300 சீசீ இயந்திர வலுக்கு மேல் சக்திகொண்ட மற்றும் 1800 சீசீ க்கு மேல் வலு கொண்ட பெற்றோலில் இயங்கும் வாகனங்களுக்கும் பட்டரியில் இயங்கும் வாகனங்கள் 200கே.டபிள்யூ க்குமேற்பட்ட வாகனங்களுக்கும் ஆடம்பர வரி விதிப்புக்கான முன்மொழிவுகளை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது. இவ்வரியானது அரச சேவைகளுக்காகவென இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்புடையதாக மாட்டாது எனவும் குறிப்பிடப்படடுள்ளது.
இதனைவிடவும் மேலதிகமாக உரிம வரி மற்றும் காபன்வரி எனவும் வாகனங்களுக்கு அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உரிம வரியானது வாகனத்தைக் கொள்வனவு செய்த வருடத்திலிருந்தே அறவிடப்படும். அத்துடன் இவ்வரியை வருடாவருடம் செலுத்துவதுடன் அவ்வாகனத்திற்கான காபன் வரியை கொள்வனவு செய்த வருடத்திலிருந்து ஒரு வருடம் கழித்து பின் வருடாவருடம் செலுத்தக் கூடியதாக அமையவிருக்கிறது.
அதேபோலவே கடந்த (2017) வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த நிறுவனங்களின் பதிவுக்கட்டணங்கள் திட்டத்தை 2019ஆம் வருடம் முதல் அறவிடுவதற்கான முன் மொழிவுகளும் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில்தான் பொதுக் கம்பனிகள் வருடாந்தம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியுமுள்ளன. இவ்வகையான வரிகள் அனைத்துமே எதிர்வரவிருக்கும் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னராகவே அரசினால் அமுல்நடத்த எதிர்பார்க்கப்படுபவைகளாகும்.
இப்படியான சூழ்நிலையில் ஆட்சியாளர்கள் இப்பாரிய கடன் பளுவிலிருந்து நாட்டை எப்படி மீட்கப் போகிறார்கள்? என்பதே இப்போது நாட்டு மக்களிடம் மீளெழுந்துள்ள கேள்வியாகும். ஆட்சிப் பொறுப்பெடுத்த 2015 முதல் இன்றுவரை அரச தலைவர்களால் மேடைகளிலும் ஊடக கருத்தரங்குகளிலும் நேர்காணலின் போதும் வெளிப்படுத்திவரும் முக்கிய தகவலாக வெளிவருவது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவின் ஊழல் மோசடியினாலும் பிழையான அபிவிருத்தித் திட்டங்களினாலும் பாரிய கடன் சுமைகளுக்கு நாடு உள்ளாக்கப்பட்டுள்ளதால் அக்கடன்களை செலுத்துவதற்காகவே இவ்வரிவிதிப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதாக் கூறி வருகின்றனர் அதில் உண்மை இல்லாமலுமில்லை.
ஆனாலும், மூன்று தசாப்தகால யுத்த முடிவுக்கான செலவுகள், அதன் பின்னரான பாரிய நாடளாவிய ரீதியிலான வீதி அபிவிருத்திகள் புனரமைப்புகள், 55,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஒரே தினத்திலான அரச நியமனங்கள் வழங்கியமை, வறுமைக்குட்பட்ட மக்களுக்கான சமுர்த்திக் கொடுப்பனவுகள், விவசாயிகளுக்கான உர மானியங்கள் இவைகள் போன்ற பல பாரிய மக்கள் வாழ்வாதார சமூக நலத்திட்டகளும் மகிந்த ராஜபக் ஷ அரசால் மேற் கொள்ளப்பட்டன. இதற்கான பெரும் தொகைக்கடன்கள் மீளளிக்கப்படவில்லை. எனினும் இவ்வனைத்து வேலைத்திட்டங்களும் நாட்டு மக்களிடம் முறையாகச் சென்றடைந்துள்ளன. அதன் காரணமாக பாரிய கடன் பளுவைப் பற்றியோ நிரூபிக்கப்படாத ஊழல் மோசடிகள் பற்றியோ மக்கள் பொருட்படுத்தவில்லை என்பது புலனாகிறது. அதன் பிரதிபலிப்பு மகிந்த ராஜபக் ஷவுக்கு கடந்த மூன்று வருடகால ஆட்சி அதிகாரமில்லாத இடைவெளிச் சூழலிலும் பெரும்பான்மையின மக்களின் மனோநிலை எப்படி இருந்ததென மதிப்பீடு செய்ய இவ்வருடம் பெப்ரவரி 10இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளில் வெளியாக்கிக் காட்சிப்படுத்தியுள்ளன. அந்த வெற்றி அவரது தனி ஆளுமைக்கும் சேவைகளுக்கும் அவர் சார்பு மொட்டுக் கடசிக்குக் கிடைத்த பெறு பேறாகவே மக்கள் கருதுவதனாலேயாகும். ஆனாலும் அவரது ஆட்சியில் நாட்டின் சிறுபான்மை இனங்களின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் மதித்து உரிய தீர்வுகளை வழங்கத் தவறியதன் காரணமாகவும் நாட்டுக்கே விசுவாசமாயுள்ள முஸ்லிம்களுக்கே இனவாதிகளால் ஏற்படுத்திய அழிவுகளுக்கு முடிவுகாணத் தவறியதனாலும் அவரின் அரச ஆட்சியதிகாரம் கைமாறக் காரணமானது.
ஆனால், இப்போது நல்லாட்சியிலும் முன்னைய ஆட்சிகால கட்டுப்பாடில்லாத இனவாத செயல்கள், சிறுபான்மை சமூகங்களுக்கெதிரான தீவிர இனவாத மதவாத எதிர்ப்பலைகள் சற்றுத் தணிந்திருந்த போதிலும் இருப்புக்கும் வாழ்வாதாரத்திற்கும் உத்தரவாதமில்லாத நிலை நல்லாட்சியிலும் காணப்படுகின்றன. குறிப்பாக முஸ்லிம்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் ஆதாரமான காணிகள் உரித்தாக்கப்படாது பறிக்கப்பட்டுவருகின்றன. வாழ்க்கைக்கான வருமான வழிகளின் பாதுகாப்பு உறுதியளிக்கப்படாது அழிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் வாழ்க்கைச் செலவினங்கள் வரம்புக்கப்பால் நீண்டு செல்கிறது. அதற்கப்பால் நிரூபிக்கப்பட்ட மத்திய வங்கி ஊழல் மோசடி காரணமாக நாட்டின் இருப்புப் பொருளாதாரத்தில் குறைவேற்பட்டதும் நாட்டு மக்கள் மனதில் ஆழப் பதியப்பட்டுவிட்டது.
இது தவிர வரலாறு காணாத பாரிய வீழ்ச்சி ரூபாவின் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் நாட்டின் பணவீக்கமும் அதிகரித்தே காணப்படுகிறது. பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு மாத அடிப்படையில் 2018 ஜூன் மாதத்தில் 1.8 சத வீதத்திலிருந்து ஜூலை மாதம் 2.3 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டது.
இப்படியான வரிச்சுமைகள் கூடிய நிகழ் காலத்தைப் பற்றியும் கடன் பளுக்கூடியதாகவுள்ள வரும் ஆண்டைப் பற்றியும் குறித்துகூற முடியாத அபிவிருத்தியே இல்லாத சூழ்நிலை பற்றியும் தொழிலற்ற பட்டதாரிகளுக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் வழங்க நல்லாட்சியால் தற்போது முடியாதுள்ளதென நிதியமைச்சரே பகிரங்கமாகக் கூறியுள்ள நிலையிலும் தொழிற் சங்கப் போராட்டங்களை நீதியாக அணுகி தீர்வு காணப்படாமலும் ஆட்சியைப் பொறுப்பெடுத்த போது நாட்டு மக்களுக்கும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலும் மீதியாயுள்ள இடைவெளிக் காலத்திலும் இவைகளுக்குத் தீர்வின்றி நல்லாட்சி பயணிக்குமானால் அதன் பிரதிபலனை மக்கள் வழங்க எப்போதும் தயார் நிலையிலேயே உள்ளனர் என்பதனை முன்னோக்கி வரும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியேயாகும் என்பதை யாரும் குறைத்து மதிப்பீடு செய்யமுடியாது என்பதே யதார்த்தமாகும்.
-Vidivelli