எம்மிடம் குடும்ப அரசியல் இல்லை, நாட்டின் சகல மக்களையும் சிந்தித்து சகலரதும் ஒத்துழைப்புடன் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பூரண ஆதரவுடன் நான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.
நாட்டிலுள்ள ஒன்பது மாகாண மக்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
கொலன்னாவையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
நாம் உருவாக்கும் பரந்த கூட்டணியின் மூலமாக இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு எமது வெற்றியை நாம் உருவாக்குவோம். அடுத்த எமது அரசாங்கத்தை அமைத்து இந்த நாட்டில் ஆரோக்கியமான ஆட்சியை முன்னெடுப்போம். அத்துடன் சர்வதேசத்துடன் போட்டிபோடக்கூடிய சிறந்த ஏற்றுமதிகளை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். நாட்டினை கட்டியெழுப்பும் புதிய வேலைத்திட்டங்களே எம்மிடம் உள்ளன. மக்களுக்கு பொருளாதார ஏணி ஒன்றினை உருவாக்க வேண்டும். வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் அரச தலைமைத்துவம் எப்போதும் ஒரு தேசிய கொள்கைத் திட்டத்திலிருக்க வேண்டும். இது குடும்ப கொள்கை திட்டத்தில் இருக்க முடியாது. கடந்த காலத்தில் தேர்தல் வேட்பாளர் விடயத்தில் இரண்டு திரைப்படங்களைப் பார்க்க முடிந்தது. ஒன்று தமது குடும்ப தலைமைத்துவம், அதில் அண்ணன், தம்பி அதிகாரங்கள் பற்றி மட்டுமே சிந்திக்கப்பட்டன. பொதுமக்கள் குறித்தும் அடிமட்ட மக்கள் குறித்தும், தொழிலாளர் குறித்தும், விவசாயிகள் குறித்தும், நடுத்தர மக்கள் குறித்தும் சிந்திக்கவில்லை. ஒருவர் பின் இன்னொரு சகோதரருக்கு எவ்வாறு நாட்டின் உரிமையை கொடுக்க முடியும் என்றே சிந்தித்தனர்.
மறுபக்கம் எமது தரப்பில் ஒரு வேட்பாளர் விடயத்தில் அனைவரதும் கருத்துக்கள், ஒன்பது மாகாணங்களின் நிலைப்பாடு, உள்ளூராட்சி மன்றங்களில் நிலைப்பாடு, பங்காளி கட்சிகளின் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்ற அனைவரையும் பற்றி சிந்தித்து தலைவரின் முழுமையான ஆசிர்வாதத்துடன் எமது அணி தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த நாட்டில் எதிர்காலத்தை குடும்பம் ஒன்றுக்கு கொடுக்கப் போகின்றீர்களா அல்லது நாடாக ஒன்றிணைந்து பயணிக்கும் தீர்மானத்தை எடுக்கப்போகின்றீர்களா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். எம்மிடம் குடும்ப ஆட்சி இல்லை. எம்மை நம்பி மக்கள் எமக்கு கொடுக்கும் ஆதரவை நாம் எப்போதும் காப்பாற்றுவோம். மக்களுக்கு முன்வைக்கும் அனைத்துமே மக்கள் வேலைத்திட்டம். இதில் காலம், எண்ணம், கொள்கை என்ற திட்டமே இருக்கும். என்னிடம் ஏமாற்று அரசியல் ஒருபோதும் இல்லை. நான் எப்போதும் இந்த நாட்டுக்கான நேசமான அரசியலையே செய்வேன் என்றார்.
vidivelli