வஹாபிஸம், அரபுமயமாதலுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்
இறுதி அறிக்கையில் சிபாரிசு செய்ய பாராளுமன்ற தெரிவுக்குழு திட்டம்
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை பூர்த்தி செய்துள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு, அதன் இறுதி அறிக்கையில் வஹாபிஸம் மற்றும் அரபு மயமாதல் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்த சிபாரிசுகளை முன்வைக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற தெரிவுக்குழுவின் கூட்டத்திலேயே இதுகுறித்து ஆராயப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தவிர்ந்த குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த சிபாரிசுகளில் புலனாய்வுக் கட்டமைப்பில் மறுசீரமைப்புகளை ஏற்படுத்துதல், அதிகரித்து வரும் இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் பௌத்த தீவிரவாதத்தை கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல், சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் உள்ளிட்ட தாமதமாகும் சட்டமியற்றும் பணிகளை துரிதப்படுத்துதல் ஆகியவற்றுடன் வஹாபிஸம் மற்றும் அரபுமயமாதலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற தெரிவுக்குழு, மீண்டும் ஒக்டோபர் 4 ஆம் திகதி கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
vidivelli