அவசரகால சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் நிகாப், புர்கா அணிவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டதாகத் தெரிவிக்க முடியாது. அத்துடன் இதனை சட்டத்தால் தடுக்கத் தேவையில்லை. மாறாக, பொது இடங்களில் இதனை தவிர்த்துக்கொள்ளுமாறே அணிபவர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாயக்கார தெரிவித்தார்.
சோஷலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், புர்கா, நிகாபுக்கான தடையை நீக்குவதன் மூலம் ஆண் பெண் அடையாளத்தை அறிந்துகொள்ள முடியாத நிலையே ஏற்படும். இது பாரிய பிரச்சினையாகும். பாதையில் நாங்கள் பயணிக்கும்போது பாதுகாப்பாக செல்லவேண்டும். அத்துடன் எதிரே வரக்கூடியவர் ஆணா பெண்ணா என்பதை அறிந்துகொள்ள முடியுமாக இருக்கவேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கின்றோம்.
அத்துடன் அனைத்து இடங்களிலும் ஆண்கள் பெண்களின் முகம் வெளிப்படையாக இருக்க வேண்டும். இவ்வாறு நிகாப், புர்கா அணிபவர்கள் அவர்களின் சொந்த இடங்களில் வீடுகளில் இதனை செயற்படுத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. அது அவர்களின் விருப்பம். ஆனால் பொது இடங்களுக்கு வரும்போது அதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றே நாங்கள் அவர்களிடம் வினயமாக கேட்டுக்கொள்கின்றோம். ஆனால் அதனை சட்டத்தால் செய்யவேண்டியதில்லை.
அத்துடன் அவசரகால சட்டம் நீக்கப்பட்ட பின்னர் புர்கா மற்றும் நிகாப் அணிவதற்காக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். ஆனால் இந்த சட்டம் அவசரகால சட்டத்துக்கு கீழ் வருவதல்ல. மாறாக இது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதில் இருக்கும் பிரச்சினையாகும். ஒருவர் ஒரு தவறை செய்திருந்தால் அந்த தவறை யார் செய்தார் என அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு அடையாளப்படுத்தும் பிரச்சினையிலே இந்த நிகாப் பிரச்சினை பார்க்கப்படுகின்றது. மாறாக அவசரகால சட்டத்துக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
vidivelli