முஸ்லிம் தனியார் சட்டம் : திருத்தங்களை அவசரமாக நிறைவேற்றிவிட முடியாது
ஒரு வருட காலம் எடுக்கும் என்கிறார் அமைச்சின் பணிப்பாளர் அஷ்ரப்
அரசியல்வாதிகள் தேர்தல் காலகட்டத்தில் அவசரப்படுகிறார்கள் என்பதற்காக முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட திருத்த வரைபினை பாராளுமன்றத்தில் உடனடியாகச் சமர்ப்பித்து அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. திருத்தங்களுக்கான சட்ட வரைபினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. அதற்கிணங்க இந்த செயற்பாடுகளுக்கு சுமார் ஒருவருட காலம் தேவைப்படலாம் என முஸ்லிம் சமய விவகார அமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்தார்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்களால் அங்கீகரிக்கப்பட்டு சட்ட திருத்த அறிக்கை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால் உடனே சட்ட வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சரைக் கடிதம் மூலம் கோரியிருந்தார். இதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பயனற்றதாகிவிடுமெனவும் தனது கடிதத்தில குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரபிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரம் பெற்றுள்ள சட்ட வரைபு அண்மையிலேயே நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டு முஸ்லிம் சமய விவகார அமைச்சர் மற்றும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஆகியோரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது அந்த சட்ட வரைபு அரச சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்ட வரைஞர் திணைக்களம் சட்ட திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதன் பின்பு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கும். சட்டமா அதிபர் திணைக்களம் திருத்தங்கள் அரசியல் யாப்புக்கு முரணானதாக உள்ளதா என்பது பற்றி ஆராய்ந்த பின்பே அங்கீகாரத்தை வழங்கும். இந்த செயற்பாடுகள் அனைத்தும் முற்றுப் பெற்றதன் பின்பே சட்ட வரைபு பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மை அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்படும். எனவே, இந்த செயற்பாடுகளுக்கு சுமார் ஒரு வருட காலம் தேவைப்படும். அதனால் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் சுயநலம் கருதி அவசரப்படுவது போல் அவசரமாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு 9 வருட காலத்தின் பின்பே தனது அறிக்கையை நீதியமைச்சிடம் கையளித்துள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்தே இத்திருத்தங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும் என்றார்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக 2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் தற்போதைய ஓய்வு நிலை நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அக்குழு தனது அறிக்கையை கடந்த வருடம் நீதியமைச்சரிடம் கையளித்திருந்தது. குழு இரு வேறாகப் பிரிந்து இரு வேறுபட்ட சிபாரிசுகளை முன் வைத்திருந்ததனாலேயே நீதியமைச்சர் தலதா அத்துகோரள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பித்து திருத்தங்கள் தொடர்பான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
vidivelli