அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டு பெயரளவிலான ஜனாதிபதி முறைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னர் அதற்குப் பொருத்தமான முறையில் ஜனாதிபதியொருவரை நியமிப்பது குறித்து யாப்பு திருத்தத்தின் போது குறிப்பிடத் தவறியமையால் பொதுவான அரசியல் அமைப்புத் திட்டமும் சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக பாரியதொரு மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில் அது குறித்து மக்கள் தெளிவூட்டப்படுவது அரசின் மீதுள்ள பொறுப்பாகும். ஆனால் அரசாங்கம் இதனைத் தெரிந்தோ தெரியாமலோ இதுவரை மக்களுக்கு மூடிமறைத்தே வந்துள்ளது. அதனால் இனி வரப்போகும் ஜனாதிபதி நிறைவேற்றதிகாரமற்ற ஒருவர் என்பது மக்களுக்குத் தெரியவில்லை. ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் கூட இது தெரியாத விடயமாகவே உள்ளது. இப்போதும் கூட இது குறித்து அவர்களிடம் சரியான தெளிவின்மை காணப்படுவதாகவே தோன்றுகிறது.
கோடிக்கணக்கான ரூபா மக்கள் பணத்தைச் செலவு செய்து நிறைவேற்றதிகாரம் இல்லாத ஜனாதிபதியொருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா? பொருளாதார நிலையில் இலங்கை திருப்திகரமாக இல்லை. மிகவும் வங்குரோத்து அடைந்துள்ள நிலையிலே உள்ளது.
இந்த நிலையிலுள்ள நாடு எத்தகைய அதிகாரமுமற்ற பெயரளவிலான ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்வதற்காக பெருந்தொகைப் பணத்தை விரயமாக்குவதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?
அரசியல் யாப்போடு சம்பந்தப்பட்ட தீர்க்கமான இப் பிரச்சினையை ஆரம்பத்திலேயே தீர்த்து வைக்காது அரசும் அசட்டை காட்டியே வந்துள்ளது. இது தீர்க்கப்பட வேண்டிய பாரதூரமான பிரச்சினையென்று என்றும் எதிர்க்கட்சியும் கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளது. இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய சந்தர்ப்பத்தில்தான் சிந்திக்க ஆரம்பித்தனர். இது விடயமாக ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.
கலங்கிய குட்டையில் மீன் பிடித்தல்
அடுத்து வரும் ஜனாதிபதிக்கு நிறைவேற்றதிகாரம் இல்லாது, பெயரளவிலான ஜனாதிபதியாகவுள்ள நிலையிலும் பெரிய அதிகாரப் போட்டியொன்றுக்கான முஸ்தீபு இப்போதே முடுக்கி விடப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது. பெயரளவிலான ஜனாதிபதியொருவர் மக்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்படுவதில்லை. அதற்காகப் பெருந்தொகைப் பணம் செலவு செய்யப்படுவது மிகவும் அநியாயமாகும் என்பதை புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் இப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கு இவ்வளவு காலம் கடத்தியமை ஏன் என்பதுதான் இப்போது எழுந்துள்ள பிரச்சினையாகும். இதுவரை ஜனாதிபதி வேட்பாளர் இருவர் களம் இறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி அபேட்சகரைத் தேர்ந்தெடுப்பதில் மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. நிறைவேற்றதிகாரமற்ற பெயரளவு ஜனாதிபதி என்ற நிலையிலும் முன்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எண்ணியிருந்தவர்கள் இப்போதும் தம் மனநிலையை மாற்றியமைக்கத் தயாராக இல்லை என்பதாகவே தெரிகிறது. அவர்கள் தம் மேதாவிலாசங்களைக் காட்ட முற்பட்டுக் கொண்டிருக்கிறார்களேயன்றி, நாட்டின் மீது ஏற்றப்படும் பாரிய பணச் சுமை பற்றிய கவலை அவர்களுக்கில்லை. இப்பிரச்சினையை முன்னரே தீர்த்துக் கொள்ள முயற்சியெடுக்காத ஜனாதிபதியும் பிரதமரும் இறுதிக் கட்டத்திலாவது இதற்குத் தீர்வுகாண முன்வந்தமை நாட்டின் மீதுள்ள அபிமானத்திலல்ல. தமது சுயநல அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டே என்பது நன்கு புலனாகிறது.
இவ்வாறிருக்கிற நிலையில் எதிர்காலத்தில் பாரியதொரு சிக்கல் தோன்றும் வாய்ப்பிருக்கவே செய்கிறது. இலங்கையின் ஆட்சியில் மூன்று பிரதான சக்திகள் உள்ளன. அவை நிறைவேற்றதிகாரம், அரசியலமைப்பு அதிகாரம், நீதிமன்றம் ஆகிய மூன்றுமாகும். இவை மூன்றும் இன்று சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளன. நிறைவேற்றதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லாத போதிலும் மேற்கண்ட மூன்று அதிகாரங்களும் உரிய முறையிலிருந்து தடம்புரண்டுள்ளதால் மக்கள் வாக்கு மூலம் தெரிவாகும் ஒருவர் கையில் மேற்கண்ட மூன்று அதிகாரங்களோ அல்லது அவற்றில் இரண்டோ வரும் பட்சத்தில் சர்வாதிகாரப் போக்குடையவராக அவர் உருவாகுவதற்கு வாய்ப்பிருக்கவே செய்கிறது. அவ்வாறு நிகழும் பட்சத்தில் பானையிலே வெந்து உழன்று கொண்டிருக்கிற நாடு அடுப்புக்குள் விழுவது தவிர்க்க முடியாது போகும்.
மதிக்க வேண்டிய ஜனநாயகம் மிதிக்கப்படும் அவலம்
இலங்கை தேர்தல்கள் நடைபெறும் ஒரு நாடாக விளங்குகிறபோதிலும் ஜனநாயக விழுமியங்கள் கொண்டதொரு நாடாகக் கணிக்க முடிவதில்லை. ஜனநாயகம் குறித்த எத்தகைய தெளிவும் இல்லாதிருப்பதுடன் இங்குள்ள அரசியல் தலைவர்களைப் போன்றே மக்களுக்கும் ஜனநாயக அறிவு சூனியம் நிலவுவதாகவே கூறலாம். இது இன்று, நேற்று உருவானதொரு சூழ்நிலையல்ல. இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதலே நிலவிவரும் இலட்சணமாகும். நாட்டு நிர்வாகிகளும் சமூகமும் நாட்டின் சட்டத்தை அவமதித்து நடக்கும் நிலை மேற்படி பிரச்சினையின் மறுபக்க விளைவாகும்.
நாட்டின் சட்டம் மற்றும் கொள்கை இயற்றும் பிரதான நிறுவனமாக பாராளுமன்றம் விளங்குகின்றது. பாராளுமன்றத்துடன் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தடை. இது இலங்கையில் மட்டுமல்ல; ஜனநாயக முறைமையுள்ள எல்லா உலக நாடுகளிலும் கண்டிப்பாக அமுலிலுள்ள ஒரு தர்மமாகும். இவ்வாறிருந்தும் கடந்த சுமார் 40 வருடங்களாக இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் பகிரங்கமாகவே வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இக்குற்றச் செயலை அங்கீகரித்து வருகிறார்களேயன்றி அதனைத் திருத்தியமைப்பதற்கு முன்வருவதில்லை. இது குறித்து நாம் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். ஆனால் அது குறித்து கவனம் செலுத்துவதற்கு அரசியல் யாப்பில் தனக்கு அதிகாரம் வழங்கப்பட்டில்லை என்ற பதிலே அவரிடமிருந்து எமக்குக் கிடைத்தது. நாம் 64 பேர் ஒன்றிணைந்து இவ்விடயம் குறித்த முறைப்பாட்டினை உயர்நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்தோம். உயர்நீதிமன்றம் இதற்கு என்ன நிலைப்பாட்டைத் தரப்போகிறதோ நாமறியோம். நாம் மேற்படி நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த அறிக்கையில், மதுபான விற்பனை நிலையங்களை நடத்துவதற்காக 100 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதனோல் அனுமதிப்பத்திரங்கள்–4, 75 பா.ம. உறுப்பினர்களுக்கு மணல் விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.14 பா.ம. உறுப்பினர்களுக்கு விமான நிலையங்களில் வர்த்தகக் கடைகள் நடத்த அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப் பட்டுள்ளன. இந்தப் பட்டியலுடன் பாராளுமன்ற உறுப்பினர்களில் அரச காணிகள் பெற்றுள்ளோர், இறக்குமதி அனுமதிப்பத்திரம் பெற்றோர், பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கான அனுமதிப்பத்திரம் பெற்றோர் போன்றோர் பட்டியலை இணைக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் இலட்சணம் எப்படியென்பது புரிகிறதல்லவா? மேற்படி குற்றச்சாட்டுக் குறித்து பாராளுமன்றத்தில் முன்வைத்த முறைப்பாடு நிராகரிக்கப்பட அது உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அங்கும் உதாசீனப்படுத்தப்படுமானால் நாட்டு மக்களாகிய எங்களால் வேறு எதனைத்தான் செய்ய முடியும்?
அநாகரிக முறைமை
நல்ல நாகரிக நாடு என்றால், அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் உதாசீனம் செய்யாது அதனை மிகவும் பரிசுத்தமானதொன்றாக மதித்து உன்னத நிலையிலே வைத்திருக்கும். இந்த முறைமை இலங்கையிலே மிகவும் கீழ் மட்டத்திலேதான் உள்ளது.
சட்டமியற்றும் உயர் சபையாக பாராளுமன்றம் விளங்குகிற போதிலும் 19 ஆவது யாப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றியதன் மூலம் அதியுயர் சட்டமான யாப்பு, பாராளுமன்றத்தாலேயே துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. அரசியல் யாப்பின் அடிப்படை உறுப்பொன்றை மாற்றுவதாயின் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கும் விடப்பட்டு அங்கீகாரம் பெறப்பட வேண்டும். ஆனால் 19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவர் பெயரளவிலான ஜனாதிபதியாகவும் அவருக்குள்ள அந்த அதிகாரங்கள் யாவும் பிரதமரின் தலைமையிலான அமைச்சரவையிடம் சென்றடையும் விதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மக்கள் அபிப்பிராயத்திற்கு செல்லாது பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றம் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. சட்ட மூலத்தில் சில பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரம் நிறைவேற்ற முடியுமான போதிலும் மற்றும் சில சட்ட மூலங்கள் பாராளுமன்றின் மூன்றில் இரண்டுடன் மக்கள் அபிப்பிராயம் பெறப்பட வேண்டும் என்றுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு சட்டமிருக்கையில் யாப்பின் பிரதான கூறான ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தை இல்லாமலாக்கி, அவற்றை பிரதமர் என்ற வகையில் தன்னிடம் வந்தடையும்வாறு 19 ஆவது யாப்புத்திருத்தத்தை சட்டமாக்கிக் கொள்வதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிகண்டு கொண்டார். இது உலகில் யாப்பு உருவாக்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி ஒன்றாகக் கணிப்பிட முடியும். இந்த மோசடி வித்தையைத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ நிறைவேற்றுவதில் பங்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும். ஆளும் தரப்புப் போன்றே எதிர்த்தரப்பினரும் இதற்கு பொறுப்புச் சொல்வதற்குக் கடமைப்பட்டுள்ளார்கள். யாப்பு விதிக்கு முரணாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்டதை எதிர்த்து இதுவரை எவரும் நீதிமன்றை நாடவும் இல்லை.
கடந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவின் அரசை அகற்றி மகிந்த ராஜபக் ஷவின் தலைமையிலான அரசை அதிகாரத்தில் அமர்த்தினார். அதன்போது பாராளுமன்றத்தையும் கலைக்க எத்தனித்தார். இந்தப் பிரச்சினை நீதிமன்றத்திடம் கொண்டு செல்லப்பட்டது. அதன்போதும் தற்போது திருத்தப்பட்டுள்ள யாப்பு விதிக்கமைய ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது சட்டத்திற்குட்பட்டதா அல்லது முரணானதா என்பதை மாத்திரமே நீதிமன்றம் உரசிப் பார்த்தது. அந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தால் தேர்ந்தெடுப்பதற்கும் வேறுவழி இல்லாதிருக்கலாம். அதனால் யாப்புக்கு முரணாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட 19 ஆவது திருத்தத்திற்கும் நீதிமன்றத்தின் இச்செயற்பாடு மூலம் சட்டபூர்வம் வழங்கப்பட்டதென்றே கூறலாம்.
யாப்பு துஷ்பிரயோகம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போல ஜனாதிபதியொருவரால் யாப்பு துஷ்பிரயோகம் செய்த முதற்கட்டம் இதுவல்ல.
குடியரசின் இரண்டாவது அரசியலமைப்பின் சிருஷ்டிகர்த்தா ஜே. ஆர். ஜயவர்தன, தனது குறுகிய சுயநல அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் புதிய யாப்பொன்றைக் கொண்டு வந்தார். அப்போது பாராளுமன்றத்தில் தனக்கிருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்திக்கொண்டு பல சந்தர்ப்பங்களிலும் யாப்பை துஷ்பிரயோகம் செய்தார். அதன் மூலம் தன்னால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தையும் தேசத்தின் யாப்பையும் விகாரப்படுத்தினார். ஜனாதிபதி ஜே. ஆரின் பதவிக்காலத்தில் நான்காவது யாப்புத் திருத்தத்தின் மூலம் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பினூடாக ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடித்துக் கொண்டார். இது மிகவும் மோசமானதொரு யாப்பு விகாரப்படுத்தலாக விமர்சிக்கப்படுகிறது. ஏனெனில் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுப்பதற்கு இந்த யாப்புத்திருத்தமே வழிவகுத்தது எனலாம்.
சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியான போது ஜே.ஆர்.ஜயவர்தனவின் அதிகூடிய பாராளுமன்றப் பலம் போல் அவரது பாராளுமன்றம் அமையவில்லை. அதனால் ஜே.ஆர்.போல அவரால் கையாள முடியாவிட்டாலும் அவர் மாற்று நடவடிக்கையொன்றில் இறங்கினார். அவர் நீதிமன்றப் பிரதானியை தனது கைக்குள் போட்டுக் கொண்டு வழக்குத் தீர்ப்பினூடாக யாப்பை தனக்கு வேண்டியவாறு கையாடல் செய்து கொண்டார்.
ஜே.ஆர்.ஜயவர்தனவினால் தயாரிக்கப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பில் பொதுத் தேர்தல் ஒன்றில் ஒரு கட்சி பெறும் உறுப்புரிமை. அதே பதவிக்காலம் முடியும் வரை கூட்டல் குறைச்சலின்றி அதே அளவில் இருக்கும் வண்ணமே அமைக்கப்பட்டிருந்தது. நிறைவேற்று ஜனாதிபதியாலும் அதனை மாற்ற முடியாது. உறுப்பினர் ஒருவரால் கட்சி மாறவும் முடியாது. மாறினால் தாமாகவே உறுப்புரிமை துறக்கப்படுவார். பதவிக் காலத்திற்கிடையே காலியாகும் இடத்திற்கு இடைத்தேர்தல் நடக்காது. அதே கட்சியில் அடுத்துள்ள ஒருவர் அவ்விடத்திற்கு அமர்த்தப்படுவார். இதன் மூலம் பதவிக்காலம் வரை நிலையான ஆட்சி ஒன்று நிலைத்திருக்கும்வாறே இந்த யாப்பு தயாரிக்கப்பட்டிருந்தது. கட்சி மாறி ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியாத குறிப்பிடத்தக்க யாப்பாக இருந்தது.
இவ்வாறிருந்த யாப்பை ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, அப்போதைய பிரதம நீதியரசர் சரத்.என் சில்வாவின் உதவியைப் பெற்று அரசியலமைப்பின் அடிமட்டத்தையே தகர்த்தெறிந்தார். அதாவது சில ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை இழக்கப்படாது அவர்களை ஆளும் தரப்புக்குள் உள்வாங்கத்தக்கதாக நீதிமன்றத்தினூடாக அதனைச் சாதித்துக் கொண்டார். இது அரசியலமைப்பில் ஏற்படுத்திய பாரிய ஓட்டையாகும். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினரை பாரிய விலை கொடுத்து வாங்கும் மோசடிக்கும் இது வழிவகுத்து விட்டது.
இவருக்குப் பின்னர் அதிகாரத்திற்கு வந்த மகிந்த ராஜபக் ஷவும் தனக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் வந்தவுடன் அதனைப் பயன்படுத்தி தமக்கு வேண்டியவாறு அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்து கொண்டார். அதன்மூலம் 17 ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தை வலுவிழக்கச் செய்து அரசியலமைப்புச் சபையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார். அத்துடன் ஜனாதிபதியொருவருக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் பதவியில் இருக்க முடியாதென்பதை மாற்றி அதற்கு மேலும் பல தடவைகள் பதவியில் இருக்கத் தக்கவாறு சட்டத்தைத் திருத்திக் கொண்டார். இவற்றுக்கு மேலாக பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவியிலிருந்து அகற்றுவதற்காகச் சட்டவிரோதமாக பலவந்தத்தைப் பிரயோகித்த மகிந்தவின் செயற்பாடு பாரதூரமான யாப்புத் துஷ்பிரயோகமாய் பேசப்படுகிறது. மேலும் ரிட் கட்டளைச் சட்டமுறைமை விடயத்தில் மிகவும் அநாகரிகமாகவே நடந்து கொண்டார். இங்கிலாந்தில் பலம் வாய்ந்த அரச பரம்பரையினர்கள்கூட ரிட் கட்டளைகளுக்கு நல்ல மரியாதை கொடுத்தே வருகின்ற நிலையில் ஜனாதிபதி மகிந்த மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டமை நாட்டுக்கே தலைகுனிவாகும். பிரதம நீதியரசர் சிராணி விடயத்தில் நீதிமன்ற கட்டளையை பாராளுமன்றம் மதிக்கவில்லை. பாராளுமன்றத்தால் ரிட் மனு காலால் உதைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேபோன்றே 1977 க்கு முன்னரும் யாப்பு மீறல்கள் இடம்பெற்றுள்ளன. சோல்பரி அரசியல் அமைப்பினது மை காய்வதற்குள் அது மீறப்பட்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டு இந்திய தோட்டத் தமிழர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அதே போன்றே 1956 இல் சிங்களம் மட்டும் அரசகரும மொழிச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இவை சோல்பரி அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறும் சட்டங்களாகவே நிவைவேற்றப்பட்டுள்ளன.
தவறை திருத்திக் கொள்ளாத தவறு
பொதுவாக நாகரிகமாக நடக்கும் எந்தவொரு அரசும் அரசியலமைப்புச் சட்டத்தை புறக்கணிப்பதில்லை. அதனைப் புனிதப் பொருளாகக் கருதி அதற்கு உரிய மரியாதை கொடுத்து வருவதே மரபு. அரச தலைவர்களாலோ அல்லது அரசமைப்பாளர்களாலோ அல்லது நீதிமன்றத்தாலோ யாப்பு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமையை கேள்விப்பட்டதேயில்லை. நாகரிகமுள்ள நாடொன்றில் தப்பித்தவறி இத்தகைய மீறல்கள் உருவாகும் பட்சத்தில் கண்டறிந்ததும் உடனே சீர்செய்து கொள்வார்கள்.
இந்தியாவில் இந்திரா காந்தியின் பரிபாலனத்தின் போது 1976 ஆம் ஆண்டு அந்நாட்டின் அரசியலமைப்பில் 42 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டது. அது யாப்போடு முரண்படுவதாகவே இருந்தது. ஆனால் அதனை நிரந்தரமாக வைத்திருக்கவில்லை. அடுத்து அதிகாரத்திற்கு வந்த ஜனதா அரசு 43 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து யாப்பை முன்னைய நிலைக்கே கொண்டு வந்தது. இந்த 43 ஆவது திருத்தத்திற்கு இந்திராவின் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு வழங்கியது.
இலங்கையிலோ நாட்டுத் தலைவர், தலைவி மற்றும் நீதி மன்றத்தாலும் யாப்பு புறக்கணிப்புக்குள்ளாக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பல. ஆனால் மேற்படி எத்தரப்பினராவது யாப்பு விகாரப்படுத்தப்பட்டுள்ளதை உணர்ந்து அதனைத் திருத்திக் கொண்ட வரலாறும் இல்லை. எமது நாட்டின் அரசியல் இலட்சணம் இப்படியுள்ளது. பெயரளவில் தான் இலங்கையில் ஜனநாயகப் பண்புள்ளது. ஜனநாயகத்தை வளர்த்துக்கொள்ளும் கடப்பாடு எவருக்கும் இல்லை.
அங்குமிங்கும் பலரும் கையாடி இலங்கையின் யாப்பு படுமோசமான நிலைக்கே சிதைவு கண்டுள்ளது. பல சிக்கல்களுக்கும் உள்ளான யாப்பாகவே உள்ளது. யாப்பு இல்லாத ஒரு நாடு சுக்கான் இல்லாத கப்பலுக்குச் சமனாகும். எமது நாடும் பயங்கர ஆழ்கடலுக்கு மத்தியில் சுக்கான் இல்லாத கப்பல் போன்றே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலோ, பொதுத் தேர்தலோ அல்ல. நாட்டுக்குகந்த அரசியலமைப்புச் சட்டம் ஒன்றே எமக்குத் தேவை.
அது அரசியலமைப்பு உறுப்பினர்களைத் தட்டிக்கொடுப்பதாக மாத்திரம் அமையாது, நாட்டு மக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடியதொன்றாக அமையப்பெற வேண்டும்.
அது சகல இன, மத, குலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் எத்தகைய வேற்றுமைகளுமின்றி அனைவரையும் சமநிலையில் வைத்து சம உரிமை வழங்கும் மனிதாபிமானம் காட்டக்கூடியதொரு யாப்பாகவும் விளங்க வேண்டும். அனைத்தின மக்களுக்கும் கௌரவமளித்து நாட்டைக் கட்டியெழுப்பக்கூடியதான அமைப்புச் சட்டமாகவும் அமைய வேண்டும்.
நன்றி–ராவய வார இதழ்.
சிங்களத்தில்: விக்டர் ஐவன்
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்
vidivelli