எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் எல்-சிசியினை இராஜினாமா செய்யுமாறு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட எகிப்தியர்களை உடனடியாக விடுவிக்குமாறு முன்னணி மனித உரிமைக்குழுவொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடுமுழுவதும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட டசின் கணக்கானோர் கைது செய்யப்பட்டதை அடுத்து அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கான உரிமையினைப் பாதுகாக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் எகிப்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தலைநகர் கெய்ரோவிலும் ஏனைய நகரங்களிலும் நூற்றுக்கணக்கான எகிப்தியர்கள் வீதிகளில் இறங்கி சிசி வெளியேறு எனும் கோசம் உள்ளிட்ட அரசாங்கத்தை வெளியேறுமாறு கோரும் கோசங்களை எழுப்பினர். சிசியின் ஆட்சிக்கு எதிராக மிக அரிதாக இடம்பெறும் மாற்றுக்கருத்தின் வெளிப்பாடு என இது கருதப்படுகின்றது.
குறைந்தது 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்றிற்குத் தெரிவித்த பாதுகாப்பு வட்டாரங்கள் சிவில் ஆடை தரித்த பொலிஸார் கெய்ரோ நகர்ப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தன.
ஜனாதிபதி சிசியின் பாதுகாப்பு முகவரகங்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது பலப் பிரயோகம் மேற்கொண்டதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க மனித உரிமைகள் கண்காணிப்பக பிரதிப் பணிப்பாளர் மைக்கேல் பேஜ் தெரிவித்தார்.
உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது என்பதையும் கடந்த கால அட்டூழியங்கள் மீண்டும் இடம்பெறாது தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது என்பதை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நிவ்யோர்க்கிற்கு கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்ற அல்-சிசி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான மக்களின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்துச் செயற் படுமாறு எகிப்திய அரசாங்கத்தை எகிப்தின் சர்வதேச பங்காளி நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமும் கோர வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுள்ளது.
vidivelli