அரம்கோ தாக்குதல்களுக்கு ஈரானே பொறுப்பு என கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அடெல் அல்-ஜுபையிர் தெரிவித்தார்.
அரம்கோவினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான ஏவுகணை வடக்குப் பக்கத்திலிருந்தே வந்தது, யெமனிலிருந்தல்ல, ஏவுகணை ஏவப்பட்ட இடத்தினைக் கண்டறிவதற்கு சவூதி அரேபியா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என அடெல் அல்-ஜுபையிர் ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் எண்ணெய் வயல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஈரானிய ஆயுதங்களைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால்தான் தாக்குதல்களுக்கு ஈரானே பொறுப்பு எனக் கூறுகின்றோம்.
சவூதி அரேபிய அரசாங்கத்திற்குச் சொந்தமான பெரும் எண்ணெய் நிறுவனமான சவூதி அரம்கோவினால் நடத்தப்படும் இரு எண்ணெய் வயல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக அங்கு பாரிய தீ ஏற்பட்டுள்ளதோடு அங்கு உற்பத்திக்கும் ஏற்றுமதிகளுக்கும் தடங்கல் ஏற்பட்டது.
இத் தாக்குதலுக்கு கடந்த செப்டெம்பர் 14 ஆம் திகதி யெமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்களால் உரிமை கோரப்பட்டது. யெமனில் 2015ஆம் ஆண்டு தொடக்கம் சவூதி தலைமையிலான கூட்டுப் படையினர் ஈரானின் ஆதரவுடன் செயற்பட்டு வரும் ஹெளதி கிளர்ச்சிக்காரர்களுடன் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான யெமன் மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ள அதேவேளை பஞ்சத்தின் விளிம்புக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
ஈரானின் ஆதரவுடனான ஹெளதிகளின் நடுத்தர மற்றும் நீண்ட தூர கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் சவூதி அரேபிய வான் பாதுகாப்புப் பிரிவினரால் அடிக்கடி நடுவானில் அடையாளம் காணப்படுகின்றன. அவை சவூதி அரேபியாவின் முக்கிய சொத்துக்களையும் இடங்களையும் இலக்கு வைத்து ஆயுதம் பொருத்தப் பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவப்படுபவையாகும்.
vidivelli