நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நோக்கில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டம் பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளின்படியே இக் கூட்டம் இடம்பெற்றதாக ஜனாதிபதி பகிரங்கமாக கூறியிருக்கிறார். எனினும் இதனை மறுத்துள்ள பிரதமர், ஜனாதிபதியே இக் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து ஆராய முற்பட்டதாக பதிலளித்துள்ளார்.
மேற்படி கூட்டத்தை யார் கூட்டியிருப்பினும் அதன் நோக்கம் வெற்றியளித்திருக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட பின்னர் இதுபற்றிப் பேசுவதில் பலனில்லை என அமைச்சரவையின் பெரும்பான்மையினர் இதனை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிட்டனர். சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே இக் கூட்டம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.
எது எப்படியருப்பினும் கடந்த நான்கு வருடங்களாக காலத்தைக் கடத்திவிட்டு, அடுத்த ஜனாதிபதி தேர்தலும் அறிவிக்கப்பட்டபின்னர் இது பற்றி ஜனாதிபதியும் பிரதமரும் ஆராய்வது கேலிக்குரியதாகும். கடந்த வருட இறுதியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க கோரி மக்கள் விடுதலை முன்னணியினால் தனிநபர் பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தப் பிரேரணையை முன்வைத்திருந்தார். எனினும் அதனை முன்கொண்டு சென்று வெற்றி பெறச் செய்ய முன்வராத ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது அதற்கு அவசரப்படுவதன் பின்னணி என்ன என்பது சமகால அரசியல் நகர்வுகளை உற்று நோக்குபவர்களால் இலகுவில் புரிந்து கொள்ளத்தக்கதாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமராக அன்று இருந்த ஜே.ஆர்.ஜயவர்தன 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை அறிமுகம் செய்தார். ”பெண்ணை ஆணாகவும், ஆணைப் பெண்ணாகவும் மட்டுமே தன்னால் மாற்ற முடியாது எனவும், ஏனைய அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் ” எனவும் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன அன்று கூறிய வாசகம் இன்றும் பேசப்படுகிறது.
இதன்பின்னர் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என 1994ஆம் ஆண்டு முதல் இதுவரை பதவிக்கு வந்த அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் வாக்குறுதியளித்தனர். சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச இருவரும் இரண்டு முறைகள் நீடித்த தமது பதவிக்காலங்களின்போதும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதேபோன்றுதான் 2015 இல் பெரும் எதிர்பார்ப்புடன் ஜனாதிபதிப் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேனவும் தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை.
மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டு, 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும் அது ஜனாதிபதியின் அதிகாரங்களை முழுமையாக ரத்துச் செய்யவில்லை. இறுதியாக அவர் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்த காரியங்கள், இதற்கு முன்னர் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் செய்யத் துணியாதவையாக இருந்தன. அதனால்தான் ”என்.எம். பெரேரா அன்று எழுப்பிய கேள்விக்கு இன்று மைத்திரிபால சிறசேன பதில் தந்துள்ளார்” என பலரும் கிண்டலடித்தனர். ஜனாதிபதியின் இந்த குளறுபடியான நிர்வாகம் மற்றும் விளைவுகளைக் கருத்தில் கொள்ளாத தீர்மானங்கள் என அனைத்திற்கும் காரணம் இந்த நிறைவேற்று அதிகார மமதையே ஆகும்.
நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லாத போதிலும் அதனை உரிய காலத்தில் மேற்கொள்ளாது காலத்தைக் கடத்திவிட்டு தற்போது தமது தனிப்பட்ட நலன்களுக்காகவும் தாம் விரும்பாதவர்களுக்கு ஜனாதிபதி அதிகாரம் சென்றுவிடக் கூடாது என்ற நோக்கத்திலும் அதனை ஒழிக்க முன்வருவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
அந்த வகையில் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ளவர் 19 ஆவது திருத்தத்திற்கமைய குறைந்தளவு அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவே விளங்குவார் எனக் கூறப்படும் நிலையில் அவராவது இதனை ஒழிக்க முன்வருவாராயின் அதுவே போதுமானதாகும். அச் சமயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, பொது ஜன பெரமுன உட்பட ஏனைய சிறுபான்மைக் கட்சிகளும் இதற்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும். அந்த வாக்குறுதியை எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களில் யார் வழங்குவார் என்பதே இப்போதுள்ள கேள்வி.
vidivelli