உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராய விசாரணை ஆணைக்குழு நியமித்தார் ஜனாதிபதி
தலைவராக நீதிபதி ஜனக் டீ சில்வா
4/21 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையில் இந்த ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் இந்த ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2141/88 எனும் விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 13 பிரதான விடயங்களை மையப்படுத்தி சாட்சிகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்க இந்த ஆணைக்குழுக்கு பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலர் உதய ஆர். செனவிரத்னவின் கையொப்பத்துடன் 2019 செப்டம்பர் 21 ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, இந்த ஐவர் கொண்ட ஆணைக்குழுவில் தலைவரான நீதிபதி ஜனக் டி சில்வா உட்பட இரு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளும், இரு ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளும் ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். இந்த ஆணைக்குழுவின் தலைவருக்கு மேலதிகமாக அக்குழுவில், மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக் ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு -– கொச்சிக்கடை, நீர்கொழும்பு –- கட்டான, மட்டக்களப்பு –- சியோன் தேவாலயங்கள் மற்றும் முன்னணி ஹோட்டல்கள் மீது நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் உயிரிழந்த, அங்கவீனமுற்ற, படுகாயமடைந்த மற்றும் பாரிய சொத்திழப்புக்களை சந்தித்தவர்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு ஆராயவுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலுடன் நேரடியாக அல்லது மறைமுகமாகத் தொடர்புபட்டுள்ளதாகக் கருதப்படுகின்ற அரச ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அது தொடர்பில் அறிந்திருந்தவர்களை பொருட்படுத்தாமை தொடர்பில் பல முறைப்பாடுகளும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தைத் தவறாகக் கையாண்டமை, கடமையைத் தவறவிட்டமை, கவனயீனம், பொறுப்புக்களை நிறைவேற்றாமை மற்றும் செயற்றிறனற்ற செயற்பாடுகள் என்பன மீள நிகழாதிருப்பதனை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதே இந்த ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்பாகும்.
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் துரித, பக்கச்சார்பற்ற பூரண விசாரணை நடத்துவது, பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டவர்கள் மற்றும் அமைப்புக்களின் செயற்பாடுகளை அடையாளம் காண்பது ஆகிய பொறுப்புக்களும் இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகளை முன்கூட்டியே அறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியமை, கவனயீனத்துடன் செயற்பட்டமை மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை அடையாளம் காணுமாறும் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி பொறுப்பளித்துள்ளார்.
அதேவேளை, தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் தொடர்பிலும் அவற்றின் பின்னணியிலிருந்து செயற்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்கள் தொடர்பிலும் ஆராய இந்த ஆணைக்குழுவுக்கு பொறுப்பு சாட்டப்ப்ட்டுள்ளது.
நாட்டில் இன, மத முறுகல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புக்கள், தனி நபர்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இந்த ஆணைக்குழு ஊடாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனைவிட, இந்த ஆணைக்குழுவுக்கு விசாரிக்க பொறுப்புச் சாட்டப்பட்டுள்ள 13 விடயங்களில், 4/21 தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கான காரணம், அதற்கான சந்தர்ப்ப சூழல், தாக்குதல்களின் தன்மை ஆகியவற்றையும் கண்டறியுமாறும் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுக்க பரிந்துரைகளை முன்வைக்குமாறும் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது.
1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க ஆணைக்குழுக்கள் சட்டத்தின் 14 ஆம் அத்தியாயத்தில் கூறப்படும் அனைத்து விதி விதானங்களுக்கும் உட்பட்டு நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு, சாட்சிகளை விசாரித்து எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்கான அறிக்கையாகத் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றவியல் விசாரணைகள் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணைகள் என இரு வேறு விசாரணைகளுக்குத் தேவையான வகையில் வெளிப்படும் சான்றுகளை பரிந்துரைகளாக சமர்ப்பிக்க இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தாக்குதலுக்கு உதவியவர்கள், அதற்கான தூண்டுதல்களை செய்தவர்கள் மற்றும் சதித்திட்டம் தீட்டியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது உள்ளிட்ட பரிந்துரைகளை ஆணைக்குழு தமது இறுதி அறிக்கையில் உள்ளடக்க வேண்டியுள்ளது. குறித்த ஐவரடங்கிய ஆணைக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை 3 மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
அதனையடுத்து, 2 மாதங்களுக்கு ஒரு தடவை இடைக்கால அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 6 மாதங்களுக்குள் விசாரணைகளின் முடிவு, பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை, அனைத்து உறுப்பினர்களின் கையொப்பத்துடன் தமக்கு ஒப்படைத்தல் வேண்டுமென விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
vidivelli