நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் நகர்வுகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்குமிடையில் டுவிட்டர் தளத்தில் கருத்துப் பரிமாற்றம் ஒன்று இடம்பெற்றது.
அரசியல் ஆய்வாளரான ரசிக ஜயகொடி டுவிட்டரில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இருவரும் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
”நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான முயற்சிகள் தொடர்பில் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் திகாம்பரம் ஆகியோருக்கு எம்.ஏ. சுமந்திரன் விளக்கமளித்திருந்ததாகவும் அதற்கு அவர்கள் ஒருமித்த ஆதரவு தெரிவித்திருந்ததாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்கள் இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதுடன் (யூ டேர்ன்) இது ஒரு சதி முயற்சி என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து விளக்கமுடியுமா?”என ரசிக ஜயகொடி கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சுமந்திரன், ” ஒருமித்த ஆதரவல்ல. ரவூப் ஹக்கீம் இந்த முன்னெடுப்பை எதிர்த்திருந்தார். ஏனையோர் எதிர்க்கவில்லை. ஆனால் இதனை சதித்திட்டம் என அழைப்பது பிழையானது. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை எதிர்ப்பவர்கள் அதற்கு எதிராகப் பேசலாம். அத்துடன் அமைச்சரவை ஒரு முடிவை எடுக்க முடியும். மேலும் இது ஒரு புதிய பிரச்சினையல்ல.
25 வருடங்களுக்கு மேலாக வாக்குறுதியளிக்கப்பட்டு வந்த விடயம்” என சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது கருத்தை பதிவிட்டுள்ள ரவூப் ஹக்கீம், ”பங்காளிக் கட்சிகளுக்கு எதனையும் தெரிவிக்காதிருப்பதைத் தவிர சுமந்திரனுடன் எந்தப் பிரச்சினையுமில்லை. எல்லா மாகாண சபைகளையும் புறக்கணிக்கும் வகையில் மாகாண சபை தேர்தல் சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவர ரணில் விக்கிரமசிங்க இதேபோன்று எவ்வாறு முயற்சித்தார் என்பதை ஞாபகமூட்டுகிறேன். 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க மஹிந்த ராஜபக் ஷ முயற்சித்த போதும் நாம் போராடினோம்” என குறிப்பிட்டுள்ளார்.
ரவூப் ஹக்கீமின் மேற்படி கருத்துக்கு பதிலளித்துள்ள சுமந்திரன், ”மாகாண சபைகள் திருத்தச் சட்ட விவகாரத்தில், ஜனாதிபதி நியூயோர்க்கிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு அதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதன் காரணமாகவே குழுமட்ட திருத்தங்களுக்கு மாத்திரம் ஆதரவளித்ததாக நீங்கள் எம்மிடம் கூறியிருந்தீர்கள். பிரதமரின் அறையில் மாத்திரமன்றி உங்கள் அறையிலும் இது தொடர்பில் இடம்பெற்ற சகல சமசரப் பேச்சுக்கள் குறித்தும் நான் இரகசியமாக அறிவேன்” என தெரிவித்துள்ளார்.
சுமந்திரனின் மேற்படி கருத்துக்கும் ரவூப் ஹக்கீம் பதிலளித்துள்ளார். அதில், ” ஐக்கிய தேசியக் கட்சி தற்சமயம் சரியான தீர்மானத்தை எடுப்பதை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும். அவர்கள் எங்களை மட்டுமல்ல, தேசத்தையும்தான் வீழ்த்துகிறார்கள். நல்ல ஆலோசனைகள் வெற்றியளிக்கும் என்று நம்புங்கள். பங்களாளிக் கட்சிகள் மீண்டும் ஒன்றுபட்டு பணியாற்றுவோம். எனது ‘மெகாபோன் இராஜதந்திரம்’ (பகிரங்க அறிக்கைகளை வெளியிடுவதன் ஊடாக சமரசம் பேசுதல்) வெற்றியளிக்கும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
vidivelli