ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் குருநாகல் சியம்பலாகஸ்கொடுவ “ரிச்வின்” வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 19ஆவது நினைவேந்தல் நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட கலாநிதி அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் ஆற்றிய உரை
தொகுப்பு: பஸ்னா ஆதிப்
2000ஆம் ஆண்டு செம்டெம்பர் 16ஆம் திகதி இறக்காமம் ஆலமரச்சந்தி எனப்படும் இடத்தில் தற்பொழுது அந்த மரத்தை வெட்டி விட்டபோதிலும், அன்று அம்மரத்தடியில் அம்பாறைக்கு செல்வதற்காக அதிகாலை 5.30 மணியளவில் வந்து காத்துக் கொண்டிருந்தேன். திருகோணமலை, கிண்ணியாவில் எனக்கொரு நிகழ்ச்சி இருந்தது. அப்பொழுது சுபஹ் தொழுகையை தொழுதுவிட்டு என்னை கடந்து சென்ற எனது மச்சான் ஒருவர் என்னை நோக்கி, “இன்று தலைவர் ஊருக்கு வருகை தரவிருக்கிறார். நீங்கள் எங்கு செல்கின்றீர்கள்” என்று வினவினார்.
தலைவர் அன்று எனது மச்சானின் வீட்டுக்கு வரவிருந்தார். காலை சாப்பாடாக புட்டும், விறால் மீன் கறியும் சமைக்குமாறு வேண்டியதற்கிணங்க தயாரித்து வைக்கப்பட்டிருந்தது. எனது தந்தை, சகோதரர், சொந்தக்காரர்கள், அயலவர்கள் என பலரும் தலைவரின் வருகையை எதிர்பார்த்து வீட்டை முற்றுகையிட்டு இருந்தார்கள்.
அன்று யுத்தத்திற்கு முன்னர் இருந்த வீதியில் அம்பாறையிலிருந்து திருகோணமலைக்கு செல்வதாக இருந்தால் பலவிதமான வழிகளில் நுழைந்து செல்ல வேண்டியிருந்தது. ஒரு மணியளவில் கிண்ணியாவை சென்றடைந்து விட்டேன்.
அன்று கையடக்கத் தொலைபேசி வசதிகள் கிடையாது. அங்கு சென்ற பிற்பாடு தான் தலைவர் அஷ்ரப் இறக்காமம் நகரை அடையவில்லை. மாறாக, தனது 51ஆவது வயதில் ஹெலிகொப்டர் விபத்தில் வபாத்தாகிவிட்டார்கள் என்ற செய்தியை நான் கேள்வியுற்றேன். இந்த நிகழ்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தமையாக அமைந்ததற்கு காரணம் உள்ளது. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் வரலாற்றில் 1980களில் மிகவும் கறை, இருள் படிந்த எமது சமூகம் அநாதையாக்கப்பட்டு, நடுத்தெருவில் நிறுத்தப்பட்ட ஒரு காலமாகும்.
குறிப்பாக, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் முஸ்லிம்கள் நாதியற்றவர்களாக நிறுத்தப்பட்ட காலகட்டம். 1981ஆம் ஆண்டில் காத்தான்குடியில் கால்பதித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் 1986ஆம் ஆண்டு ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து கொண்டது. 1989ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முதன்முதலாக போட்டியிட்டது. பின்னர் படிப்படியாக இக்கட்சி வளர்ச்சியடைந்து மாபெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது.
முஸ்லிம் சமூகத்தில் அரசியல் அடையாளத்தை அல்லது அடையாள அரசியலை ஆரம்பித்து வைத்த பெருமை தலைவர் அஷ்ரபையே சேரும். எனது பள்ளிப்பருவத்தில் தலைவர் எனது ஊருடன் நல்ல நெருக்கமாக இருந்தார். அவருடைய தந்தைக்கு அங்கு ஏறத்தாழ 15 ஏக்கர் கரும்பு காணியொன்று இருந்தது. அக்காணியை பராமரிப்பதற்கு சட்டக் கல்லூரியின் விடுமுறைக் காலங்களில் அடிக்கடி வருவார் என்று எனது தந்தையின் சகோதரர்கள் என்னிடம் சொல்லியிருக்கின்றார்கள். 1990களில் அவர் அங்கு வந்தபோது நான் 9ஆம் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். அவருடைய கூட்டம் எங்கு நடைபெற்றாலும் அவரது உரையை செவிமடுப்பதற்காக நான் செல்வது வழக்கமாக கொண்டிருந்தேன். அவ்வுரையில் 2 விடயங்கள் என்னை கடுமையாகக் கவர்ந்திருந்தன.
அவற்றுள் ஒன்றுதான் அவரது “தொனி.” இயல்பாகவே அவரது தொனி வெள்ளித் தொனி என்றழைக்கப்படக் கூடிய வகையில் அமைந்திருக்கும். மிகவும் அற்புதமான அந்த தொனியின் மூலம் உரையாற்றுகையில் நீண்ட நேரம் செவிசாய்த்துக் கொண்டிருக்கலாம். இரண்டாவது விடயம் அவரது உரை மிகுந்த தர்க்கரீதியாக, அறிவுபூர்வமாக ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமையும்.
ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய தலைமைத்துவம் பற்றி உலகளாவிய ரீதியில் நிறைய கோட்பாடுகள் உள்ளன. தலைமைத்துவம் என்பது ஒரு சிறந்தணித் தொகுப்பா? அல்லது பண்புகள் நிறைந்த தொகுப்பா? இத்தகைய கோட்பாடுகளை எல்லாம் தொகுத்து நோக்கினால் தலைவர் அஷ்ரபின் தலைமைத்துவம் இந்த எல்லாவகையான கோட்பாடுகளையும் தன்னகத்தே கொண்டதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
தலைவரின் அரசியல் சாதனை என்ன என்ற கேள்வியொன்று எம்மத்தியில் உள்ளது. பலவிதமான சாதனைகளை எமது சமூகத்திற்காக அவர் ஆற்றியிருக்கின்றார். அரசியலமைப்பில் 15ஆவது திருத்தத்தை கொண்டுவருவதில் மிகமுக்கிய பங்காற்றியவர் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களே.
பாராளுமன்றத்தில் ஒரு கட்சி நுழைவதற்கு 12.5வீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டுமென்ற அரசியலமைப்பு சட்டத்தை வெறுமனே 5வீத வாக்குகள் பெற்றால் போதுமானது என்ற மிகப் பெரிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
முஸ்லிம்களின் அரசியல் அடையாளத்தை இந்த நாட்டில் வெகுவாக நிலைநிறுத்தி சகல கட்சிகளாலும் இறுதியாக ஏமாற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு ஓர் அரசியல் முகவரியை தலைவர் அஷ்ரப்தான் உண்மையில் வழங்கினார்கள்.
அந்தவகையில் முஸ்லிம் சமூகத்தின் இத்தகைய அரசியல் அடையாளத்தை அல்லது அடையாள அரசியலை மிக உறுதியாக நிலைநிறுத்திய பெருமை அவரையே சாரும்.
1993ஆம் ஆண்டளவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அபூபக்கரின் மகன் என்னுடைய நண்பன். ஒருநாள் அவருடைய வீட்டுக்கு சென்றபோது அங்கு தலைவரின் திறனை காண வாய்ப்பொன்று கிடைத்தது. விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பதற்கிணங்க அவர் நிறைய கதைகளை எங்களிடம் கூறினார்.
கொழும்பில் ஸாஹிரா கல்லூரியில் தலைவர் கற்கின்றபோது அவருடன் கற்ற சக மாணவனொருவன் அதிபர் அலுவலகத்திற்கு சென்று, அஷ்ரப் தான் அமரும் கதிரையில் ஊசியொன்றை வைத்ததாகவும், அது தன்னைக் குத்திவிட்டதாகவும் முறைப்பாடு செய்தார். அதிபர் உடனே தலைவர் அவர்களை அழைத்து விசாரித்தார். அப்போது தலைவர் அந்த மாணவனை நோக்கி நான் ஊசி வைத்ததை நீ பார்த்தாயா என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் ஆம், நான் பார்த்தேன் என்று கூறினார். அதற்கு பதிலளித்த தலைவர் நான் வைத்ததை நீ பார்த்திருந்தால் ஏன் நீ அதில் அமர்ந்தாய் என்று கேட்டார். அவ்வாறு கண்டிருந்தால் நீ அமர்ந்திருக்கமாட்டாய் அல்லவா? ஆகவே, நீ பொய் சொல்கின்றாய் என்று சொன்னாராம். அதிபர், தலைவரின் பேச்சுக் கூர்மையைக் கண்டு வியந்தாராம்.
நான் 2003ஆம் ஆண்டளவில் வெள்ளவத்தையில் அமைந்துள்ள பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று உரையாடுவது வழக்கம். அவருடன் சேர்ந்து பலவிதமான உலக நடப்புகள் தொடர்பில் அறிந்து கொள்வேன். அவ்வாறு ஒரு நாள் இலங்கையின் முஸ்லிம் அரசியல் தொடர்பில் கலந்துரையாடிய போது தலைவர் விபத்தில் வபாத்தாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு என்னிடம் கூறிய கருத்தை நினைவு கூரலாம் என்று நினைக்கின்றேன்.
அதாவது, என்னுடைய 72 வயது ஆயுட்காலத்தில் பல சமூகத்தை சேர்ந்த பலவித கோட்பாடுகள், பண்புகளைக் கொண்ட தலைவர்களை நான் கண்டிருக்கின்றேன். ஆனால், அஷ்ரபை போன்று ஓர் உன்னதமான தலைவரை நான் கண்டதில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் அவரிடமிருந்த ஆண் நிலை வசீகரம் என்ற பண்பை, தனித்துவத்தை எந்தவொரு சமூகத்தை சேர்ந்த அரசியல்வாதியிடமோ, தலைவரிடமோ நான் காணவில்லை.
உண்மையில் அவரிடமிருந்த ஆண் நிலை வசீகரம், வெள்ளி தொனி, கம்பீரம், தனித்துவம், தலைமைத்துவம், நேர்மை, திறன், ஆளுமை இவை அனைத்தையும் பார்க்கையில் பேராசிரியர் கூறிய கூற்றுக்கு விளக்கம் கிடைக்கின்றது.
தலைவர் கலந்துகொண்ட கூட்டம் ஒவ்வொன்றிலும், அவர் அடிக்கடி ஆழமாக கூறிய ஒரு வாக்கியம் தான் “at the time when the Tamil military weapon turned against Muslims we have started Sri Lanka Muslim Congress” எப்போது தமிழ் ஆயுதக்குழுக்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திருப்பப்பட்டதோ அன்றே முஸ்லிம் சமூகத்திற்காக முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த வாக்கியத்தை அடியொட்டி 2005 ஆம் ஆண்டு டெய்லி மிரர் பத்திரிகைக்கு, ‘’ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தை கட்டியெழுப்புவார்” என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதி தலைவர் கூறிய கூற்றை சுட்டிக்காட்டி இருந்தேன். பிரிட்டனை சேர்ந்த அரசியல் ஆய்வு செய்த ஒருவர் அவருடைய பட்டப் பின்படிப்பு அறிக்கையில் இந்தக் கூற்றை அடிக்குறிப்பாக போட்டுள்ளார். இந்தக் குறித்த விடயம் இன்றைய காலகட்டத்திற்கு மிக முக்கியமான விடயமாகும்.
நான் இவ்வாண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி சம்மாந்துறையில் முன்னைய நாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸினால் முன்னெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கான கல்வி விழிப்புணர்வு மாநாடொன்றில் பேச்சாளராகக் கலந்துகொண்டேன். அன்று நான் உரையாடுகையில் முக்கிய கருத்தொன்றை அங்கு பதிவு செய்தேன். “ஒரு சிறுபான்மை சமூகத்தை அடக்கியொடுக்குவதற்கு அல்லது சீர்குலையச் செய்வதற்கு பெரும்பான்மை சமூகத்திற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ தேவைப்பட்டால் அந்த சிறுபான்மை சமூகத்திற்குள்ளேயே சில குழுக்களை இயக்கி விரோத செயல்கள், வன்முறை, பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆதரவளிக்கின்ற ஆயுதமாக பயன்படுத்தி ஊக்குவிப்பதன் மூலம் மிக இலகுவாகவும், விரைவாகவும் அச்சமூகத்தை காயறுக்கலாம்; நிலைகுலையச் செய்யலாம். இதற்குத் தென்கிழக்காசிய நாடுகளில் ஏராளமான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவம் இக்கூற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
வடகிழக்கில் அக்கரைப்பற்று, சம்மாந்துறை, நிந்தவூர், கல்முனை காத்தான்குடி, ஏறாவூர், மீராஓடை, பாலமுனை, ஓட்டமாவடி, திருகோணமலையில் தோப்பூர், மூதூர், கிண்ணியா போன்ற பிராந்தியங்களில் புலிகள் மட்டுமல்லாது பல்வேறு தமிழாயுதக் குழுக்கள் பெயர் கூறிமுடிக்க இயலாதளவுக்கு இருந்தன. இன்னொரு பக்கம் இந்தியாவிலிருந்தும் அமைப்புக்களை அமைத்து அவர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக பலவிதமான அநியாயங்களை செய்து கொண்டிருந்தார்கள்.
இந்த தமிழாயுதக் குழுக்கள் தான் பள்ளிவாசல்களில் முஸ்லிம்களை சுட்டார்கள். முஸ்லிம் பொலிஸாரை தனிமைப்படுத்தி கொலை செய்தார்கள். இவ்வாறு எக்கச்சக்கமான நாசகார செயல்களை கட்டவிழ்த்துவிட்ட காலத்தில் தான் முஸ்லிம்கள் குறித்தும், அரசியல் அபிலாஷைகள் குறித்தும் எதுவித அக்கறையும் இல்லாமல் தான் ஜே. ஆர். ஜயவர்தனவால் பிரதமர் ஆர்.ரணசிங்க பிரேமதாஸவுக்கு கூடத் தெரியாமல்தான் அவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இத்தகைய கொடூரமான காலப்பகுதியில் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி அரசியலில் பங்குபற்றி வெற்றிகண்டு அரசியல் அடையாளத்தை இந்த நாட்டில் நிலைநிறுத்தி சாதனை புரிந்தது. இந்தக் காலகட்டத்தின் இயல்பான போக்கு முஸ்லிம் இளைஞர்கள் வன்முறையை நோக்கி செல்கின்ற பேராபத்தை எதிர்கொண்ட தருணத்தில்தான் அவர்களது உணர்வுகளுக்கு ஜனநாயகக் கால்வாயை அமைத்து இந்தக் கட்சியை உருவாக்கி ஜனநாயக முறையில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக இந்தப் போராட்டத்தை தலைவர் அஷ்ரப் ஆரம்பித்து வைத்தார்.
1989ஆம் ஆண்டு றொனால்ட் றேகன், அமெரிக்காவில் ஜனாதிபதியாக இருந்தபோது அவரை சுற்றியிருந்த ஒரு கூட்டம் உலக வங்கியின் முன்னாள் தலைவர் வோலட்டோ விச், ரிச்சர்ட் ஆக்கிடெக், அதேபோன்ற பல தலைமைகள் சேர்ந்து அமெரிக்காவை 20ஆம் நூற்றாண்டில் வல்லரசாக இருப்பதை போலவே 21ஆம் நூற்றாண்டிலும் வல்லரசு நாடாக இருப்பதற்கு ஒரு திட்டத்தை ஆரம்பித்தார்கள். அமெரிக்காவின் இராணுவம், அறிவு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொருளாதாரம் போன்றவற்றை பலப்படுத்தினால் தான் அவர்களுக்குரிய பலத்தை, சக்தியை உறுதிப்படுத்திக்கொள்ள என்ன செய்வது என்று ஆலோசனை செய்தார்கள்.
இக்கால கட்டத்தில் சோவியத் யூனியன் முற்றாக சரிந்து பனிப்போர் முடிவுற்றிருந்த காலமாகும். இந்த அடிப்படையில் அமெரிக்காவின் மொத்த பட்ஜெட்டில் 40சதவீதத்தை இராணுவத்திற்காக ஒதுக்க வேண்டும். உலகத்திலுள்ள 72வீதமான எண்ணெய் வளம் 16 அரபு முஸ்லிம் நாடுகளில் தான் இருக்கின்றது. அந்த எண்ணெய் வளத்தை 1962ஆம் ஆண்டிலிருந்து குறைந்த விலைக்கு கொள்ளையடித்திருந்த மேற்கத்திய நாடுகள் தொடர்ந்தும் அவ்வாறு அந்த எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க வேண்டுமென்றால் மத்திய கிழக்கு நாடுகளை கையகப்படுத்த வேண்டும். இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த வேளையில் குவைத் மீது சதாம் படையெடுத்தமையினால் தான் அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கிற்குள் நுழைந்தது. பின்னர் சதாமின் படைகள் பின்வாங்கின. அமெரிக்க இராணுவமும் பெருமளவு பின்வாங்கியது.
மீண்டும் அவர்கள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு நிகழ்வை நடத்த முற்பட்டார்கள். அதுதான் நாகரிகங்களுக்கிடையிலான மோதல் எனும் விடயத்தை அறிமுகப்படுத்தினார்கள். அது என்னவென்றால், உலகத்தில் நிறைய நாகரிகங்கள் இருக்கின்றன. இந்நாகரிகங்களுக்குள் 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு சவாலாக இருக்கப் போகின்ற நாகரிகமாக இஸ்லாமிய நாகரிகம் காணப்பட்டது. இதனை அவர்கள் வெற்றிகொள்ள வேண்டும். காரணம் என்னவென்றால், சோவியத் யூனியனின் உடைவோடு வரலாறு முடிந்துவிட்டது என்று ஜப்பானிய அரசியல் சிந்தனையாளர் பிரான்ஸிஸ் பொக்கயாம் ஒரு கருத்தை நிறுவினார்.
அதற்குப் பதிலுரை எழுதிய அமெரிக்காவின் இன்னொரு வெளிநாட்டு கொள்கை வகுப்பாளரான சாமுவேல் ஹன்டிங்டன் “வரலாறு முடியவில்லை. சோவியத் யூனியனுக்குப் பதிலாக ஒரு புதிய நாகரிகம் உலகிற்குள் உருவாகிக்கொண்டு வருகின்றது. அதுதான் இஸ்லாம். அதை நீங்கள் வெற்றிகொள்ள வேண்டும்.”
மீண்டும் அமெரிக்காவினால் மத்திய கிழக்கிற்குள் இருக்கின்ற தடைகள் எல்லாம் தாண்டி சட்டங்களை பேணி நுழைய என்ன செய்யலாம் என்று ஆழமாக திட்டம் தீட்டியது. செப்டெம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது நவீன அரசியல் களத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது. இத்தாக்குதலை ஒசாமா பின்லாடன் செய்தார் என்றும் அவர் ஆப்கானிஸ்தானின் டோரா போரா மலைக்குள் ஒளிந்திருக்கின்றார் என்றும் கூறி மீண்டும் அமெரிக்க இராணுவம் நுழைகின்றது. தோரா போராவிலிருந்து பக்தாதுக்கு செல்ல அவர்கள் பாதையை அமைத்துக் கொண்டார்கள். இதனூடாக 10 வருடங்கள் அங்கிருந்து எண்ணெய் வளத்தை சுரண்டி எடுத்தார்கள்.
ஈராக்கை மூன்று நாடுகளாகப் பிரித்து ஷியாக்களுக்கும், ஸுன்னிகளுக்கும், எண்ணெய் வளம் செறிந்திருக்கும் பகுதியை குர்த்திஸ்களுக்கும் வழங்க சிராஜ் பிராந்தியத்தை உருவாக்கிவிட்டு அமெரிக்கா வெளியேறிவிட்டது. ஆனால் இந்த திட்டத்தில் அமெரிக்கா முழுமையாக வெற்றி காணவில்லை.
அமெரிக்காவின் சப்பாத்து கால்கள் மிதிபடாமல் எவ்வாறு உலகத்தை கட்டுப்படுத்தலாம் என்று அவர்கள் யோசித்தார்கள். விசேடமாக, இஸ்லாமிய உலகை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று யோசித்தார்கள். ஏன் இஸ்லாமிய உலகம் அவர்களுக்கு முக்கியமென்றால் 72 சதவீதமான எண்ணெய் வளம், 40சதவீதமான இயற்கை வாயு, முக்கிய கடல் வழிப்பாதைகள், பெரிய துறைமுகங்கள் எல்லாம் அரபு நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. நைல் நதி, மெதேன் கோடு, யூப்பிரட்டிஸ் மத்திய கிழக்கிற்குள் அமைந்திருக்கின்றது.
.முஸ்லிம்களுக்குள் ஆயுதங்களை விநியோகித்து இராணுவக் குழுக்களை உருவாக்கி அவர்களுக்குள்ளே அவர்களை மோத விடுகின்ற கலாசாரத்தை தோற்றுவித்தார்கள். மேற்கு ஆபிரிக்காவின் நைஜீரியா நாட்டில் போக்கோ ஹராம் இராணுவத்தை உருவாக்கினார்கள். 1990ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பெனாஸிர் பூட்டோவுடன் சேர்ந்து தலிபான்களை உருவாக்கினார்கள். 2016ஆம் ஆண்டில் இஸ்ரேல், ஐ.எஸ்.ஐ.எஸ். இனை சிரியாவில் உருவாக்கினார்கள். அஸ்ஸபாப் என்ற இயக்கத்தை சோமாலியாவில் உருவாக்கினார்கள். ஒசாமா பின்லாடனின் தலைமையில் அல் கைதாவை உருவாக்கினார்கள். யார் இவர்கள்? இஸ்லாமிய உலகிற்குள் இஸ்லாத்திற்கு விரோதமாக மேற்கு நாடுகளின் பினாமியாக இயங்குகின்ற இவ்வமைப்புக்களின் நோக்கம் என்ன?
நான்காவதாக உருவாக்கப்பட்ட விடயம்தான் இஸ்லாமோ போபியா. உலகில் 137 நாடுகளில் சிறுபான்மை இனமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அரசியல், பொருளாதாரம், கல்வி எல்லா வகையிலும் அடக்கி ஒடுக்கி ஓர் அடிமைப்படுத்தப்பட்ட சமூகமாக வாழ வைக்க அமெரிக்காவினால் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் தான் இஸ்லாமோ போபியா என்ற விடயம்.
முஸ்லிம்கள் வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என்று இந்த ஏகாதிபத்திய நாடுகள், இஸ்லாம் வன்முறையை போதிக்கின்றது, தூண்டுகின்றது என்று திரும்பத் திரும்ப ஊடகங்களுக்கு செய்திகளை முன்வைக்கின்றன. இதனால் செப்டெம்பர் தாக்குதலுக்குப் பின்னராக தொடர்ச்சியாக 18 வருடங்களாக இவ்வுலகை 6 ஊடக நிறுவனங்களே கையகப்படுத்தியுள்ளன. உலகிலுள்ள 193 நாடுகளிலும் வாழ்கின்ற 748கோடி மக்கள் காலையில் விடிந்ததும் பார்க்கின்ற தொலைபேசி, பத்திரிகை ஸ்தாபனங்கள், இணையத்தளங்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள் யாவுமே அசோஸியேடட் பிரஸ், பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (BBC), ரொயிட்டர், ஏ.எப்.பி., சி.என்.என், ஆகிய 6 ஊடக நிறுவனங்கள்தான் 96 வீதமான வெளிநாட்டு செய்திகளை தயாரித்து இதர நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். அமெரிக்காவை சார்ந்ததாகவே இருக்கின்றமையினால் அவற்றில் காண்பிக்கப்படும் செய்திகள் முஸ்லிம்கள் தீவிரவாதிகள். பலஸ்தீனியர்கள், பொஸ்னியர்கள் பிரிவினைவாதிகள் என்று திரும்பத் திரும்ப செய்தி வடிவில் வழங்குகின்றார்கள்.
முஸ்லிம்களிடம் சக்திவாய்ந்த ஊடகமொன்று இல்லை. உலகில் இஸ்லாத்தை பற்றி, முஸ்லிம்களை பற்றி போபியாவை உருவாக்கிவிட்டால் வளம்பொருந்திய மத்தியகிழக்கு தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எண்ணெயை கொள்ளையடித்துக் கொண்டே இருக்கலாம். அமெரிக்காவில் 74 குழுக்கள் இஸ்லாமோ போபியாவை பரப்புகின்றன. இதற்காக 500மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் உலகிற்கு அமெரிக்காவில் இருக்கின்ற முஸ்லிம்கள் யாவரும் பயங்கரவாதிகள் என்று பரப்புகின்றார்கள். இன்று மேற்கு நாடுகளில் ஏகப்பட்ட வலதுசாரி கட்சிகள் தோன்றி முஸ்லிம் சிறுபான்மை மக்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்ற மாயையை தோற்றுவிக்கின்றன.
சமீப காலத்தில் உலகில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளும் இந்த மாயையின் பின்னணியில் நிகழ்த்தப்பட்டவையே. இந்த மாயையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு முதலாவதாக ஊடகத்தை பலமான ஆயுதமாக அமெரிக்கர்கள் கையாள்கின்றனர். இலங்கையிலும் இந்நிலைமை காணப்படுகின்றது.கடந்த ஏப்ரல் குண்டுவெடிப்பின் பின்னர் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கைகளின் போது வாள்கள் பள்ளியிலிருந்து கைப்பற்றப்பட்டதாக செய்திகள் பரப்பப்பட்டன. வாளையும், பள்ளியையும் அருகருகில் வைத்து காட்டுவார்கள்.
இரண்டாவதாக, முஸ்லிம்களுக்குள் குழுக்களை உருவாக்கி பலமான ஆயுதங்களை கையளித்துள்ளார்கள். இராணுவத்திடம் இல்லாத ஆயுதங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இடம் எவ்வாறு உள்ளன. இந்தியாவில் நரேந்திர மோடியிலிருந்து நியூயோர்க் ஆகிய நாடுகள் இணைந்து செயற்படுகின்ற இஸ்லாமிமோ போபியா வலையமைப்பிற்கு தத்தமது நாடுகளில் முஸ்லிம்களை பற்றிய பயத்தை ஏற்படுத்தி ஊதியம் பெறுகின்றார்கள்.
இலங்கையில் 10வீத முஸ்லிம்கள் 2600 பள்ளிவாசல்கள் உள்ளன. இந்த சனத்தொகை இவ்வாறு அதிகரித்துக் கொண்டே சென்றால் 2050இல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகிவிடுவார்கள். இலங்கை முஸ்லிம் நாடாக மாறிவிடும் என்ற பரப்புரையை செய்கிறார்கள்.
இந்த நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பான்மை சமூகத்தோடு நாங்கள் இணங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அன்று பெரஹெரவுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் எமது முஸ்லிம்கள். அரண்மனையில் குளியலுக்குப் பொறுப்பாக இருந்தவர் முஸ்லிம்கள். வைத்தியராக இருந்தவர் அபூபக்கர் புள்ளே வெதனாரகே. ஆகவே எல்லாம் நாங்களாகத்தான் இருக்கின்றோம். இடையில் என்ன நடந்தது. இதுதான் இந்நாட்டில் சிங்கள, முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டிய முக்கிய விடயமாகவுள்ளது.
இங்கு எமது தலைவரின் தூரநோக்கைப் பார்த்தால் வன்முறைக்கு வன்முறை அல்ல தீர்வு. பயங்கரவாதத்திற்கு பயங்கரவாதம் அல்ல முடிவு என்று ஜனநாயக வழியில் வென்றெடுக்க இளைஞர்களை வழிநடத்தினார். இதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ் அன்று தலைவரினால் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த தருணத்தில் முஸ்லிம் சமூகம் முதலாவதாக கவனத்திற் கொள்ள வேண்டிய விடயம்தான் முஸ்லிம்கள் வெளிப்படை தன்மையுடன் செயலாற்ற வேண்டும். மத்ரஸா பள்ளிக்கூடங்கள் பயான்களில் என்ன நடக்கிறது என்பதை எல்லோரும் வந்து பார்க்கும் விதமாக செய்யுங்கள். ஒளிவு மறைவாக செய்ய வேண்டிய விடயமொன்று முஸ்லிம் சமூகத்தில் கிடையாது. சந்தேகங்களை உருவாக்கினால் அவை போபியாக்களை உருவாக்கும். இன்று எமது நாடு இருக்கின்ற நிலைமையை பார்த்தால் சிறியதொரு விபத்தைக்கூட இனப் பிரச்சினையாகத்தான் பார்க்கின்றார்கள். ஆகவே கல்வி உட்பட சகல விடயத்திலும் வெளிப்படைத் தன்மையை காட்டி செயற்படுங்கள்.
இரண்டாவது, நாம் ஒருபோதும் உணர்ச்சிபூர்வமாக செயற்படக் கூடாது. பக்குவமாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் எம்மை சுற்றி நடக்கின்ற கசப்பான சம்பவங்களை நோக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.மூன்றாவதாக, நாம் பேண வேண்டியது எம்மோடு சேர்த்து இந்த நாட்டிற்காகவும் போராட வேண்டும். நாட்டை கட்டியெழுப்புதலில் நாம் பங்குகொள்ள வேண்டும். சமாந்தரமாக இதனை செய்ய வேண்டும்.
பெரும்பான்மை சமூகத்திற்குள் பரப்பப்பட்டுள்ள ஐயங்கள், சந்தேகங்கள் போன்றவற்றை நீக்குகின்ற பொறுப்பு எம் சமூகத்தை சார்ந்தது என்று அண்மையில் ஒரு சிங்கள நண்பரொருவர் ஒரு நிகழ்வில் சுட்டிக்காட்டினார்.
மேலும், எமது சமூகம் இந்த நாட்டின் சட்டதிட்டத்தை பேணுபவர்களாக இருக்க வேண்டும். அடிப்படை போக்கு வரத்து சட்டங்களைகூட எம்மவர்கள் சில இடங்களில் கடைப்பிடிக்கத் தவறுகின் றனர். இந்த நிலைமையை எம்முள் திருத்திக் கொள்ள வேண்டும்.
வன்முறை, போராட்டம், பயங்கரவாதம் என்பவற்றுக்கு இஸ்லாத்தில் எவ்வித இடமும் கொடுக்கப்படவில்லை. மர்ஹூம் அஷ்ரபின் மறைவை நினைவுபடுத்தும் இந்நாளில் அவரது தூரநோக்கு சிந்தனையிலிருந்து எடுக்க வேண்டிய முக்கிய விடயம்தான் எமது இளைஞர்கள் ஒருபோதும் வன்முறையை கையிலெடுக்க இடம்கொடுக்கலாகாது. ஜனநாயகத்தின் வழியில் நின்று எமது இலக்கை அடைந்துகொள்ள வேண்டும்.நாங்கள் செய்ய வேண்டிய போராட்டம் அறிவுப் போராட்டமாகவே அமைய வேண்டுமே தவிர ஆயுதப் போராட்டமாக மாறக்கூடாது. உலகிலுள்ள பெரும்பான்மை நாடுகளில் வாழ்கின்ற 100 கோடி முஸ்லிம்களுக்கு 56 முஸ்லிம் நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை வெறும் 650 ஆகும். இந்தியாவில் 1300மில்லியன் மக்களுக்காக 2500 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 30கோடி மக்கள் உள்ள அமெரிக்காவில் 5750 பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆகவே எமது சமூகத்தில் அறிவுத் தேவையை விருத்தி செய்தல் அவசியமாகும்.
அமைச்சர், தலைவர் ஹக்கீமின் கூற்றுக்கிணங்க முஸ்லிம் சமூகம் தங்களை தாங்களே சுயபரிசீலனை செய்து கொள்ளவேண்டிய காலத்தில் இருக்கின்றோம். முஸ்லிம் சமூகத்திற்கு வெளியிலிருந்து வரக்கூடிய சவால்களை சரியாக எதிர்கொள்ள வேண்டுமென்றால் உள்ளக ரீதியாக தங்களை தாங்களே பரீசிலினை செய்ய வேண்டும். இதன் மூலமே வளமான நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனக் கூறி விடைபெறுகின்றேன்.
Vidivelli