இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் சமூகம் சார்ந்த சிந்தனைகளை மேற்கொண்ட பல தலைவர்கள் இருந்திருகிறார்கள். ஆயினும், மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பை நினைவு கூர்வதனைப் போன்று ஏனைய தலைவர்களை பெரிதாக நினைவு கூர்வதில்லை. அதற்காக மர்ஹூம் அஷ்ரப் எந்த தவறுகளையும் செய்யவில்லை என்று கூற முடியாது. அவர் ஏனைய முஸ்லிம் தலைவர்களை விடவும் வித்தியாசமானதொரு பாதையில் முஸ்லிம் சமூகத்தின் அரசியலை முன்னெடுத்தார். முஸ்லிம்களுக்கும் தனித்துவமான அரசியல் கட்சி வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்தார். அவர் முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்த காலம் முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக் குழுக்களினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட காலமாக இருந்தது. அத்தோடு, முஸ்லிம்களின் வாக்குகளையும், முஸ்லிம்களையும் பேரினவாத தேசிய கட்சிகள் தமது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டன. இந்த இரண்டு விடயங்களையும் மர்ஹூம் அஷ்ரப் கடுமையாக எதிர்த்தார்.
அவருடைய துணிச்சல் மிக்க இந்த நடவடிக்கை இலங்கை முஸ்லிம்களை குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களை ஈர்த்தது. இதனால், இன்றும் அவர் பேசப்படும் ஒருவராக இருக்கின்றார். மேலும், இன்று முஸ்லிம் அரசியலை கையில் எடுத்துக் கொண்டு சக்கரம் ஆடிக் கொண்டிருப்பவர்களில் அதிகம் பேர் மர்ஹூம் அஷ்ரப்பின் பாசறையில் அரசியல் அரிச்சுவடியை கற்றவர்கள். இவர்கள் முஸ்லிம்களின் அரசியலை விலை பேசி விற்றாலும், மர்ஹூம் அஷ்ரப்புக்கு முஸ்லிம்கள் மத்தியில் இன்னும் மரியாதை இருப்பதனை உணர்ந்துள்ளார்கள். இதனால், வருடத்திற்கு ஒரு தடவையாவது அவரைப் பற்றி பேசி தங்களை மர்ஹூம் அஷ்ரப்பின் கொள்கைகளை வாழ வைக்க வந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காகவும் நினைவு தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். மர்ஹூம் அஷ்ரப்புக்கு தற்போது 19ஆவது நினைவு தினத்தை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பொதுவாக மர்ஹூம் அஷ்ரப்பின் நினைவு நினைத்தை முஸ்லிம் காங்கிரஸூம், ஏனைய கட்சிகளில் உள்ள அவரது சீடர்களும் எடுத்துக் கொண்டிருக்கும் நினைவு தினம் மரணித்தவரை (அஷ்ரப்பை) உயிர்ப்பிக்கும் நாளாகவே இருக்கின்றது.
வருடா வருடம் செப்டெம்பர் 16ஆம் திகதி மர்ஹூம் அஷ்ரப்பின் நினைவு தின வைபவங்களை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரசியல் கட்சிகளும், பல அமைப்புக்களும் நடாத்திக் கொண்டிருக்கின்றன. இது கடந்த 18 வருடங்களாக நடைபெற்றுள்ளன. தற்போது 19ஆவது நினைவு தினத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வைபவத்தில் மர்ஹூம் அஷ்ரப்பின் ஆளுமை, திறமை, முஸ்லிம் சமூகத்திற்காக அவர் ஆற்றிய சேவைகள் குறித்தெல்லாம் ஆட்களை அழைத்து பேசுகின்றார்கள். இதற்காக பெரும் தொகைப் பணத்தையும் செலவு செய்கின்றார்கள். மர்ஹூம் அஷ்ரப்பின் சிறந்த ஆளுமைக்கு எடுத்துக் காட்டுத்தான் இன்று வரைக்கும் பல கோணல்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் காங்கிரஸ் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது. அவர் அன்று போட்ட அத்திவாரம் இன்னும் பெரியளவில் உடைந்து தாழ் இறங்கவில்லை. அதனால், இங்கு நாம் மர்ஹூம் அஷ்ரப்பின் ஆளுமை, சமூகப்பற்று மற்றும் திறமைகள் குறித்து பேச முன் வரவில்லை. அது குறித்து வாசகர்கள் நிறைய அறிந்திருப்பீர்கள்.
ஆனால், மர்ஹூம் அஷ்ரப்புக்கு நினைவு தினத்தை நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் குறித்தும், அதன் உறுப்பினர்கள் குறித்தும் பேசுவது பொருத்தமென்று நினைக்கின்றேன். ஒரு தலைவனின் நினைவு தினத்தை மாத்திரம் வருடாந்தம் அனுஷ்டித்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை. அத்தகைய வைபவங்கள் அவருக்கு செய்கின்ற மரியாதையாகக் கொள்ளவும் முடியாது. ஆனால், குறித்த அத்தலைவனின் நல்ல கொள்கைகளை வாழ வைப்பதுதான் அத்தலைவனுக்கு செய்கின்ற உண்மையான மரியாதையாகும். ஆதலால், 19ஆவது நினைவு தினம் என்ற பெயரில் மர்ஹூம் அஷ்ரப்புக்கு வைபவங்களை நடத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸாக இருந்தாலும், அதன் தலைவராக இருந்தாலும், பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்களாக இருந்தாலும் மர்ஹும் அஷ்ரப்பின் எந்தக் கொள்கையை நிலை நாட்டியுள்ளார்கள். அவர் குரல் கொடுத்து முஸ்லிம் சமூகத்தின் எந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளார்கள் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
இதே போன்றுதான் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பாக இருந்தாலும், தேசிய காங்கிரஸாக இருந்தாலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸாக இருந்தாலும் மர்ஹூம் அஷ்ரப் காட்டிய வழியில் பயணிக்கவில்லை. ஆனால், எல்லா அரசியல் கட்சிக்காரர்களும் நாங்கள்தான் அஷ்ரப்பின் கொள்கைகளை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றோம் அல்லது வாழ வைப்பதற்கு போராடிக் கொண்டிருக்கின்றோம் என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வெறும் கூச்சல்கள் உணர்வுகளுடன் சம்பந்தப்படுவதில்லை. அதன் பின்னால் வேறு திட்டங்கள் இருக்கும். இன்று முஸ்லிம் கட்சிகள் யாவும் மர்ஹூம் அஷ்ரப்பின் கொள்கைளை தேர்தல் காலங்களில் மாத்திரம் பேசிக் கொள்ளும் நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் காலங்களில் அஷ்ரப் எனும் மந்திரக் கோலைக் கொண்டு முஸ்லிம்கள் மத்தியில் மாயாஜால வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் வாக்காளர்கள் உண்மைக்கும், போலிக்கும் வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாது வித்தைகளில் மயங்கி தன்னிலை மறந்து முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சமூகத்தை விலை பேசி விற்பதற்கு துணையாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
சமூக அரசியலைச் செய்வதற்கு மர்ஹூம் அஷ்ரப்பின் பின்னால் அணி திரண்டவர்கள் அணி அணியாகப் பிரிந்து தேசிய கட்சிகளுடன் சுமுக உறவைப் பேணி இணக்க அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
மர்ஹூம் அஷ்ரப் மரணித்து 19 வருடங்களில் இணக்க அரசியல் எனும் அசிங்கத்திற்குள் முகங்களைப் புதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் சமூகத்தை தலை நிமிர்ந்து பார்க்காது பணங்களையும், அமைச்சர் பதவிகளையும், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளையும், கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் ஏனைய பதவிகளையும் எதிர்பார்த்து சமூகத்தை தலை குனிந்து செல்லும் நிலைக்குள்ளாக்கி இருக்கின்றார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமும், அக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் உள்ள மனித பலவீனங்கள் முஸ்லிம் சமூகத்தையே அதிகம் பாதிக்கச் செய்துள்ளன.
அதே வேளை, முஸ்லிம் சமூகத்திற்காக எதனையாவது சாதித்துக் காட்டியுள்ளார்களா என்றால் அதனைக் கூட கண்டு கொள்ள முடியவில்லை. மர்ஹூம் அஷ்ரப்பின் அரசியல் காலம் மிகக் குறுகியதாகும். அக்காலத்திற்குள் பலவற்றை சமூகத்திற்காக சாதித்துள்ளார். ஆனால், அவரது மரணத்தின் பின்னர் கட்சியை பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் 19 வருடங்களில் முஸ்லிம் சமூகத்தின் எந்த அடிப்படைத் தேவையையும் பூர்த்தி செய்யவில்லை. பாதைகளை அமைப்பதும், கட்டிடங்களை அமைப்பதும் முஸ்லிம் சமூகத்தின் தேவையாக இருந்தாலும், முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சி இதற்காக ஆரம்பிக்கவில்லை. ஏனெனில் இத்தேவைகளை இன்றுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும் அதிகமாக தேசிய கட்சிகளில் அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்த முஸ்லிம்கள் செய்துள்ளார்கள். அத்தோடு, சிங்கள அமைச்சர்கள் கூட முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்திக்கு பங்களிப்புக்களைச் செய்துள்ளார்கள். முஸ்லிம் காங்கிஸை மர்ஹூம் அஷ்ரப் ஆரம்பித்த போது முஸ்லிம் சமூகத்தின் குரலாக மாத்திரமே இருப்போம் என்றுதான் தெரிவித்தார். ஆனால், இன்று முஸ்லிம்களின் குரலாக யாருமில்லை என்பதுதான் மிகப் பெரிய கவலையாகும். ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள், பௌத்த இனவாதிகளின் முஸ்லிம் விரோத செயல்கள், இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள், முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள், அத்துரலிய ரதன தேரரின் உண்ணா விரதமும் இடம்பெற்றது. இவற்றைத் தொடர்ந்து முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமாச் செய்தார்கள். இதன் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தீரும் வரை அமைச்சர் பதவிகளை ஏற்கமாட்டோம். கல்முனை பிரதேச செயலகப் பிரச்சினை தீரும் வரை அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று சொல்லிக் கொண்ட முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்பிரச்சினைகள் முடிவுறாத நிலையிலேயே அமைச்சர் பதவிகளை மீண்டும் ஏற்றுக் கொண்டார்கள். இதுதான் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாடாகும். இவ்வாறு சொல்லுவது ஒன்று செய்வது ஒன்றாக இருந்து கொண்டுள்ள நிலையில் மர்ஹூம் அஷ்ரப்புக்கு 19ஆவது நினைவு தினம் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மர்ஹூம் அஷ்ரப் விடுதலைப் புலிகளின் ஆயுத அச்சுறுத்தல்களுக்கும், அரச இயந்திரத்தின் அதிகார அடக்கு முறைகளுக்கும் மத்தியில்தான் சமூகத்தின் உரிமைகளைப் பற்றிப் பேசினார்கள். ஆனால், இன்றுள்ள முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் பங்காளிகள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள பின்னணியில்தான் முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகளின் தூண்டுதலின் பேரில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அளுத்கம, பேருவளை, தர்காநகர் போன்ற இடங்களில் முஸ்லிம்களின் மீது தாக்கினார்கள். அதன் போது அன்றைய ஆட்சியாளர்கள் அத்தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கைது செய்யவில்லை. பௌத்த இனவாதிகளையும், தாக்குதல்களுக்கு துணையாக செயற்பட்ட தேரர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டது. இதன் போது கூட முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்யவில்லை. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்டிக்கவில்லை. பௌத்த இனவாதிகளின் மீது மாத்திரம் பழியைப் போட்டுவிட்டு, அரசாங்கத்தை பாதுகாத்தார்கள்.
தற்போதைய அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் பௌத்த இனவாதிகளினால் தாக்கப்பட்டார்கள். கிந்தோட்டை, அம்பாறை, திகன, கண்டி, குருநாகல், குளியாப்பிட்டி, மினுவாங்கொடை, கின்னியாம உள்ளிட்ட 30இற்கும் மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் தாக்கினார்கள். பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டன. ஆயினும், பங்காளிகள் என்றுள்ள முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளுந்தரப்பு கதிரைகளையே அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பு தர முடியாத ஆட்சியின் பங்காளி எனும் பட்டத்தில் சமூகத்திற்கு எந்தப் பயனுமில்லை. முஸ்லிம் சமூகம் பயன் பெறாது போனாலும் தாங்கள் அமைச்சர்களாக இருக்க வேண்டுமென்பதே முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் தீர்மானமாக இருக்கின்றது. இவ்வாறு சமூகம் பிறரால் தாக்கப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டுமுள்ள நிலையில் அமைச்சர் பதவிகளுக்காக எல்லா அரசாங்கத்தின் காலங்களிலும் பங்காளி என்றிருப்பர்கள் மர்ஹூம் அஷ்ரப்பின் 19ஆவது நினைவு தினத்தை அனுஷ்டித்து, அவரைப் பற்றி கவர்ச்சிகரமாகப் பேசி தங்களை அஷ்ரப்வாதிகளாக காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
மர்ஹூம் அஷ்ரப் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு தேசிய கட்சிகளினாலும், தமிழ் ஆயுதக் குழுக்களினாலும் ஏற்படுத்தப்பட்ட அநியாயங்களினாலும் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சமூக இயக்கமாக செயற்பட்ட போது அதனூடாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம் இளைஞர்களில் சிலர் தேசிய கட்சிகளின் ஒடுக்குதல்கள், அரசியல் அதிகாரத்தைக் கொண்டவர்களின் பாரபட்ச நடவடிக்கைகளினால் கவலை கொண்டு தமிழ் ஆயுதக் குழுக்களில் இணைந்து செயற்பட்டார்கள். முஸ்லிம் இளைஞர்களின் இந்த மனமாற்றம் எதிர்காலத்தில் சமூகத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதியும் முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்து அதன் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்களுக்கு நியாயங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென்று முஸ்லிம் இளைஞர்களை தமிழ் ஆயுதக் குழுக்களில் இணைந்து கொள்வதனை தடுத்தார்.
இலங்கை –- இந்திய உடன்படிக்கை மூலமாக தற்காலிகமாக இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தை நிரந்தரமாக இணைக்க வேண்டுமென்று தமிழர்கள் கோரிய போது, வடக்கும், கிழக்கும் நிரந்தரமாக இணைய வேண்டுமாயின் அதில் முஸ்லிம்களுக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். முஸ்லிம் பிரதேசங்களை இணைத்து அதிகார அலகு தரப்பட வேண்டுமென்று கோரினார். இலங்கையில் முஸ்லிம்களுக்கென ஓர் அதிகார அலகு இருக்கும்போது, அந்த அதிகாரத்தை பெறுகின்றவர்கள் முழு நாட்டிலுமுள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பர் என்று தெரிவித்து இருந்தார். பின்னர் அவர் தென்கிழக்கு அலகை சந்திரிகா அரசாங்கத்தின் தீர்வாக முன் வைத்த கதையும் மர்ஹூம் அஷ்ரப்பிடம் இருக்கின்றது. ஆயினும், அவர் இலங்கை முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தில் அதிகார மையம் ஒன்று இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், அவரது மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் நலன்கள், அதிகாரங்கள் குறித்து பேசவில்லை.
தமிழர்களின் அதிகார மையத்தை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்ற வகையில் செல்லும் ஒரு போக்கையும், முஸ்லிம்களுக்கு அதிகார அலகு கிடைக்காது போனாலும், அல்லது கிழக்கு மாகாணம் வடக்குடன் ஏதோவொரு அடிப்படையில் இணைந்து கொண்டாலும் கவலையில்லாததொரு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவே இருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட கரையோர மாவட்டத்தைக் கூட முஸ்லிம் காங்கிரஸ் கோரி இருந்தது. இந்தக் கோரிக்கை கூட முஸ்லிம் காங்கிரஸினாலோ, ஏனைய முஸ்லிம் கட்சிகளினாலேயோ நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. கரையோர மாவட்டம் தொடர்பில் கரையோர மாவட்டமும் மண்ணாங்கட்டியும் என்று தூக்கி எறிந்த நபர்களைக் கொண்டதாகவே முஸ்லிம் காங்கிரஸ் இருந்தது. இம்மாவட்டக் கோரிக்கை குறித்து அக்கட்சியின் இன்றைய தலைமைத்துவம் மௌனமாகவே இருக்கின்றது.
இதே போன்று மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை பற்றியும் அதிகம் பேசினார். பொன்னன்வெளி காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தார். இதனை ஜே.வி.பி. உட்பட சிங்கள கட்சிகள் எதிர்த்தன. இதனை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே அவர் மரணமடைந்தார். ஆயினும், இன்று ஆட்சியில் இருக்கும் முஸ்லிம் கட்சிகளினால் முஸ்லிம்கள் இழந்த ஒரு அங்குலக் காணியைக் கூட மீட்டுக் கொடுக்க முடியவில்லை. இவ்விதமாக எதனையும் செய்து கொள்ள முடியாத நிலையில் அமைச்சர் பதவிகளை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு சில அபிவிருத்திகளை செய்துவிட்டு நாங்கள் அஷ்ரப்வாதிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். மர்ஹூம் அஷ்ரப்பின் மரணத்தோடு அவரின் கொள்கைகளும் மரணித்து விட்டன. ஆயினும், தேர்தல் காலங்களிலும், நினைவு தினங்களிலும் மர்ஹூம் அஷ்ரப்பைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதே வேளை, மர்ஹூம் அஷ்ரப் தனது கையினால் ஆரம்பித்து வைத்த ஒரு சில அபிவிருத்திப் பணிகளைக் கூட பூர்த்தி செய்யாது அஷ்ரப்பை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. நிந்தவூரில் சுமார் 24 வருடங்களாக அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபம் பூர்த்தி செய்யப்படாத நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது. மர்ஹூம் அஷ்ரப்பின் கைகளினால் அடிக்கல் வைத்த ஒரு மண்டபம் 24 வருடங்களாக பூர்த்தி செய்யப்படாது இருக்கின்றதென்றால் இவர்கள் மர்ஹூம் அஷ்ரப்பின் மீது எத்தகைய அபிமானத்தைக் கொண்டுள்ளார்கள் என்று புரிந்து கொள்ள முடியும். அதே போன்றுதான் அவரது ஒலுவில் வீடு. அதனை கட்சியின் கிழக்கு மாகாண காரியாலயமாக்குவதாகவும், தாருஸ்ஸலாம் என்று பெயர் சூட்டுவதாகவும் தெரிவித்தார்கள். பின்னர் அதனை அஷ்ரப்பின் நினைவுகளைச் சுமந்ததொரு மியூசியமாக்க இருக்கின்றோம் என்றும் தெரிவித்துக் கொண்டார்கள். எதுவும் நடக்கவில்லை. நாங்கள் இப்படித்தான், பேசுவோம் செய்யமாட்டோம் என்பதாகவே மர்ஹூம் அஷ்ரப்பின் பாசறைக் குழந்தைகளின் கதையாக இருக்கின்றது.
இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸி லிருந்து பிரிந்து புதிய கட்சிகளை தோற்றுவித்தவர்கள் கூட மர்ஹூம் அஷ்ரபின் கொள்கைகளை வாழ வைக்கவில்லை. அவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் மீதும், அதன் தலைமையின் மீதும் அதிகம் குறை கண்டார்கள். ஆனால், அவர்களினால் அக்குறையை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அவர்கள் அமைச்சர் பதவிகள், தலைவர் பதவிகள் வேறு தேவைகளுக்காகவே புதிய கட்சிகளை ஆரம்பித்தார்கள்.
இவ்விதமாகவே மர்ஹூம் அஷ்ரப்பின் பாசறையில் அரசியல் கற்றுக் கொண்டவர்களின் கதைகள் இருந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் வருடாந்தம் மர்ஹூம் அஷ்ரப்பின் நினைவு தினத்தை மேற்கொண்டு மரணித்தவரை உயிர்ப்பிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்றார்கள். ஒரு நாளில் உயிர்ப்பித்து மறுநாளில் மரணிக்கச் செய்கின்றார்கள். தேர்தல் காலங்களில் போஸ்டர்களில் காட்சிப்படுத்துகின்றார்கள். இன்று இவர்களுக்கு மர்ஹூம் அஷ்ரப்பின் கொள்கைகளை விடவும், அவரின் போட்டோக்களே தேவைப்படுகின்றன. மர்ஹூம் அஷ்ரப் நல்ல அரசியல்வாதி, ஆனால், அவரால் நல்ல சீடர்களை உருவாக்க முடியவில்லை.
எஸ்.றிபான்
vidivelli