ஒருவர் பெறுகின்ற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும், திறனுக்கும் அடித்தளமாக இருந்து அவரது ஒவ்வொரு செயற்பாட்டையும் சிறப்புற மேற்கொள்ள வழிவகுக்கும். அந்தவகையில், கல்வி கற்கும் வயதெல்லையைக்கொண்ட ஒவ்வொரு பிள்ளையும் இக்கல்வியை கற்றுக்கொள்வதும், கற்றுக்கொள்ள வழி ஏற்படுத்தப்படுவதும் அவசியமாகும்.
அந்த அவசியத்தை இலக்காகக் கொண்டே ஒவ்வொரு பிள்ளையும் கல்வி கற்பதற்கான உரிமை உலகளாவிய ரீதியில் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பில்கூட கல்விக்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படை உரிமையைப் பெற்றுக்கொள்ளும் உரிமை இந்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் உரித்தானது.
உலகளாவிய ரீதியில் கற்றல், – கற்பித்தல் செயற்பாடுகள் பல வடிவங்களில் முறைமைப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகின் சில நாடுகளிலேதான் இலவசக் கல்வி முறைமை நடைமுறையில் காணப்படுகிறது. ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பக்கல்விப் பாடசாலை மாணவர்களுக்கு இலவசக் கல்வி முறைமை உள்ளபோதிலும், இடைநிலைப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவ்வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்கள் கொடுப்பனவு செலுத்தியே கல்வி கற்கும் நிலை காணப்படுகிறது. இருந்தபோதிலும், ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்விவரை இலவசமாக வழங்கும் பிரேசில், மொறிசியஸ் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் ஒன்றாகும். ஆனால், இலவசக் கல்வி முறைமையைக் கொண்டுள்ள இலங்கையின் இலவசக் கல்வி எதிர்காலத்தில் என்னவாக அமையும் என்ற கேள்வியை தற்கால பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் எழுப்பியுள்ளன என்பது அவதானத்திற்குரியதாகும்.
தற்காலமும் பாடசாலைக் கல்வியும்
இலங்கை ஏறக்குறைய 2300 வருடங்களுக்கு முற்பட்ட கல்வி வரலாற்றைக் கொண்டதொரு நாடாகக் காணப்படுகிறது. இந்நாட்டை ஆளுகைக்குட்படுத்தி ஆட்சி செய்த மேற்குலகினர் அவர்களின் கொள்கைகளுக்கும், தேவைகளுக்குமேற்ப கல்வி வாய்ப்பை வழங்கினர். இருந்தபோதிலும், அவர்களின் கொள்கைகளுக்கு இசைந்துபோக மறுத்த பலர் கல்வி வாய்ப்பை இழந்தமையை இலங்கையின் கல்வி வரலாற்றில் காணக்கூடியதாகவுள்ளது.
இருப்பினும், 1836ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கோல்புறூக் ஆணைக்குழுவின் ஊடாக பாடசாலைக் கல்வி முறைமை என்ற நவீன கல்வித்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட முதலாவது பாடசாலையாக கொழும்பு றோயல் கல்லூரி திகழ்கிறது. இதன் பின்னர் பல பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.
1931ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் கல்வி முறைமையானது இலவசக் கல்வி என்ற நிலைக்கு மாற்றப்படுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த முயற்சியின் பயனாக காலனித்துவ காலத்து இலங்கை நிருவாகப் பேரவையின் முதல் கல்வி அமைச்சரான கிறிஷ்டோபர் வில்லியம் விஜேயகோன் கன்னங்கராவினால் 1940ஆம் ஆண்டு இலவசக் கல்வி முறைமை இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அவரினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி வாய்ப்பின் மூலமே இலங்கை மக்கள் எழுத்தறிவு மிக்கவர்களாக உள்ளனர். தென்கிழக்காசிய நாடுகளின் சனத்தொகையில் 98.1 வீதம் எழுத்தறிவு கொண்ட மக்களைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கிறது. அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களின் கடமையுணர்வும் கற்பித்தல் உணர்வும் இந்த நிலையை அடையச்செய்திருக்கிறது. பாடசாலைக் கல்வியின் தாக்கம் இலங்கையை ஆசியாவிலேயே எழுத்தறிவுடையோ