தங்க புத்தர் சிலை விவகாரம் : இரண்டு பேரை கைதுசெய்ய உத்தரவு கோத்தாவிடமும் விசாரிக்கும் சாத்தியம்
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் ஆலோசனை மற்றும் கோரிக்கைக்கு அமைய, அனுராதபுரம் ‘சந்த ஹிரு சேய’ நினைவுத் தூபியில் வைப்பதற்காக தங்கத்தினாலான சமாதிநிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ். மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில் 8 கிலோவை கடற்படைக்கு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட இருவரைக் கைதுசெய்ய சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ. விஜேவீர மற்றும் முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரை உடனடியாகக் கைதுசெய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க எப்.சி.ஐ.டி. எனும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறை இலக்கம் 8 பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில், விசாரணையின் தற்போதைய நிலை கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் ஆலோசனை தொடர்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்தக் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கம் மற்றும் கடற்படை தொடர்புபட்ட இந்த தங்க மோசடி தொடர்பில் முதன் முதலில் மோசடி தடுப்புக் குழுவுக்கு அனாமதேய முறைப்பாடு கிடைத்துள்ளது. இந்த முறைப்பாடானது அக்குழுவின் தலைவர் ஆனந்த விஜேபால ஊடாக கடந்த 2016 மே 13 ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனையடுத்து அதுகுறித்த விசாரணைகள் எப்.சி.ஐ.டி. எனப்படும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இதுகுறித்த விசாரணைகள் சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. மற்றும் எப்.சி.ஐ.டி. ஆகியவற்றின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, சி.ஐ.டி. மற்றும் எப்.சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஆகியோரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் அனுர பிரேமரத்னவின் கீழ் பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்னாண்டோ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி வடமேல் கடற்படை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி 45.03 கிலோ தங்கம் யாழ். மாதகல் கடலில் வைத்து படகொன்றிலிருந்து மீட்கப்பட்டது. இதன்போது இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் சந்தேக நபர்களும் தங்கமும் யாழ். சுங்கப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கடத்த முயன்ற தங்கம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அப்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் எஸ்.என்.ஜே.பெரேரா சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ள நிலையில் தங்க புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்காக கைப்பற்றப்பட்ட தங்கத்தில் 8 கிலோவை மீளக் கோரியுள்ளார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக்கமைவாக அதனைக் கோருவதாகவும் அக்கடிதத்தில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்புக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியே இந்த தங்கத் தொகை கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்போதைய சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ. விஜேவீரவை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ள பாதுகாப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தாபய ராஜபக் ஷ, குறித்த தங்கத்தை கடற்படைக்கு கையளிக்குமாறு ஆலோசனையும் வழங்கியுள்ளதாக இதுவரையிலான விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே அப்போதைய சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ. விஜேவீர அப்போதைய கடற்படை தளபதியின் கோரிக்கை கடிதத்தை மேலதிக சுங்கப் பணிப்பாளர் தாரக செனவிரத்னவுக்கு இந்த விடயத்தைக் கையாள அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை தொடர்பில் நீதிமன்றுக்கு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விரிவான அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே சட்டமா அதிபரிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆலோசனையும் கோரியது.
அந்த ஆலோசனை கிடைக்கப்பெற்ற நிலையில், அதில் முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ. விஜேவீர மற்றும் முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரை நம்பிக்கை மோசடி மற்றும் பொதுச் சொத்து துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்ய ஆலோசனை கிடைக்கப்பெற்றுள்ளது. அது தொடர்பில் கோட்டை நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே முன்னாள் சுஙப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ. விஜேவீர மற்றும் முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரை உடனடியாகக் கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். சுங்கப்பிரிவின் பொறுப்பில் எடுக்கப்படும் எந்தப் பொருளும் 30 நாளுக்குமுன் எந்தவொரு காரணத்திற்காகவும் விடுவிக்கப்பட முடியாதென சுங்க கட்டளைச் சட்டம் குறிப்பிடும் நிலையிலேயே கைப்பற்றப்பட்டு 24 மணிநேரத்திற்குள் இந்த தங்கம் மீளளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 2014 ஒக்டோபர் மாதம் கைப்பற்றப்பட்ட தங்கத்திலிருந்து கடற்படை பெற்றுக்கொன்ட 8 கிலோ தங்கத்தில் சமாதிநிலை புத்தர் சிலை அமைக்கப்பட்டு, அது 2014 நவம்பர் 23 ஆம் திகதி அனுராதபுரம் ‘சந்த ஹிரு சேய’ நினைவுத் தூபியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட தங்கத்தை கடற்படைக்கு கொடுக்க ஆலோசனை, உத்தரவு வழங்கியதாகக் கூறப்படும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிடம் இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்க எப்.சி.ஐ.டி. நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், அதற்கு முன்னதாக குறித்த இரு சுங்க அதிகாரிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
vidivelli