நீர்வழங்கல் அமைச்சரின் தொழில் வழங்கும் செயல் தேர்தல் சட்டத்திற்கு முரண்
சபையில் தினேஷ் தெரிவிப்பு ; ஹக்கீம் மறுப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் நீர்வழங்கல் அமைச்சரினால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இது தேர்தல் சட்டத்துக்கு முரணாகும். தேர்தலொன்று இடம்பெறும்போது இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாதென எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இதன்போது அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் தினேஷ் குணவர்த்தனவுக்குமிடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. அத்துடன் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் நீர்வழங்கல் அமைச்சரினால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இது தேர்தல் சட்டத்துக்கு முரணாகும். தேர்தலொன்று இடம்பெறும்போது இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது.
(அமைச்சர் ஹக்கீமை நோக்கி) உங்கள் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் சில, உங்கள் அமைச்சின் செயலாளருக்கும் நீர்வழங்கல் அமைச்சின் பொது முகாமையாளருக்கும் கடிதம் ஒன்றை வழங்கி இருக்கின்றது. ஏன் இவ்வாறு சட்டவிரோதமாக செயற்படுகின்றீர்கள் என்றார். இதன்போது எழுந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஹக்கீம் தெரிவிக்கையில், ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு நியமனம் வழங்கப்போவதாக தெரிவிக்கும் எண்ணிக்கை முற்றாக பொய்யான கருத்தாகும். அத்துடன் நியமனக்கடிதம் வழங்க நடவடிக்கை எடுத்திருப்பது இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். அத்துடன் இது சட்டவிரோதம் என்றால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு நடவடிக்கை எடுக்கலாம்.
அத்துடன் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட திகதியிலிருந்தே இவ்வாறான நடவடிக்கைகள் சட்டவிரோதமாகும். மாறாக தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதற்கு பிறகு அல்ல. தற்போது நியமனம் வழங்கப்போவது ஏற்கனவே நேர்முகப்பரீட்சை நடத்தியவர்களுக்காகும்.
அத்துடன் நாங்கள் வழங்கும் நியமனம் சட்டவிரோதம் எனில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிடுங்கள். தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தால் இதனை நான் கைவிடுவேன். நீங்கள் நினைத்த பிரகாரம் சட்டத்துக்கு அர்த்தம் கற்பிக்க முடியாது என்றார்.
இதன்போது எழுந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிக்கையில்,
தினேஷ் குணவர்தன செத்துப் பிழைத்ததுபோல் இன்று கதைக்கின்றார். 2015 ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு ஒருநாள் இருக்கும் நிலையில் அதாவது, ஜனவரி 7ஆம் திகதியும் தொழில்வாய்ப்புக்களை வழங்கினர். தேர்தல் காலம் முழுவதும் தொழில் வாய்ப்புக்களை வழங்கி தேர்தல் சட்டங்களை முற்றாக மீறி செயற்பட்டனர். தேர்தல் இடம்பெறும்போது அம்பாந்தோட்டையிலிருந்து எத்தனை பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கினார்கள் என்பதை தேவையெனில் சபைக்கு சமர்ப்பிக்கத் தயார். அதனால் உங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளை நீங்கள் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை என்றார்.
இதன்போது எழுந்த சபை முதல்வர் லக் ஷ்மன் கிரியெல்ல, வேட்புமனு தாக்கல் செய்யும்வரை நியமனங்கள் வழங்கலாம். அதன் பின்னர் மேற்கொள்வதே தேர்தல் சட்டத்துக்கு முரணாகும் என்றார்.இறுதியாக சபாநாயகர் பதிலளிக்கையில், இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார். அதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி தீர்வொன்றை எடுப்பேன் என்றார்.
(ஆர்,யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
vidivelli