மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பார்கள். அந்த அனுபவங்கள் நல்லவையாகவும் அமையலாம். கெட்டவையாகவும் அமையலாம். ஆனாலும் இந்த அனுபவங்கள் மூலம் வாழ்க்கையில் முகங்கொடுக்கும் காயங்களுக்காக வேண்டி தமது ஆயுளை முடித்துக்கொள்ள வேண்டும் என எண்ணுவது நிச்சயமாக ஒரு பிழையான தெரிவாகும்.
உலகளவில் வருடாந்தம் 800,000 தற்கொலைகள் இடம்பெறுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு 40 நொடிகளிலும் ஒருவரை தற்கொலையின் மூலம் இழக்கின்றோம். தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை இதைவிட 25 மடங்கு அதிகமாகும். தற்கொலைகளுக்கு மனநிலைப் பிரச்சினை மாத்திரமில்லாமல் உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் போன்றனவும் காரணங்களாக அமைகின்றன. இருந்தபோதிலும் உலகில் இடம்பெறும் 90% மான தற்கொலைகள் மன அழுத்தத்தினாலேயே இடம்பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குடும்பத்தில் யாராவது ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் பட்சத்தில் மரபணுவின் அடிப்படையில் அவ்வாறான முயற்சிகள் தோன்றுவதற்கான சாத்தியங்கள் கடத்தப்படுகின்றன. உலகளாவிய ரீதியில் கடந்த 45 வருடங்களில் 60% இனால் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 14 -– 45 வயதிற்கு இடைப்பட்டவர்களின் மரணத்திற்கு தற்கொலை ஒரு பிரதான காரணியாக விளங்குகின்றது.
தற்கொலைக்கு மனஅழுத்தம் ஒரு பாரிய காரணமாக இருப்பதால் தமக்கு ஏற்பட்ட சோகத்தின் அடிப்படைக் காரணங்களைக் கண்டுபிடித்து அவற்றை வேரோடு பிடுங்கி எறியவேண்டும். அல்லது சம்பந்தப்பட்டவருக்கு குறித்த சோகத்தை இல்லாமலாக்க அருகிலுள்ளோர் உதவ வேண்டும்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞானப் பிரிவின் மனநல விரிவுரையாளரும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் மனநல மருத்துவருமான வைத்தியர் ஜயமல் டீ சில்வா தற்கொலை தொடர்பாக தெரிவிக்கையில், நாங்கள் இன்று பாடல் காணொலிகளிலும் கலைப்படைப்புக்களிலும் அதிகமாக தற்கொலை தொடர்பான விடயங்களை பார்க்கிறோம். இது தற்கொலை எண்ணமுடையவர்களுக்கு தற்கொலை செய்து கொள்வதற்கான வழியினை தோற்றுவிக்கின்றது. இவை தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பாரிய பொறுப்பு சமூகத்துக்கு உள்ளது என்றார்.
சுமித்ரயோ
இலங்கையில் தற்கொலைகளை தடுப்பதற்காக வேண்டி சுமித்ரயோ என்ற அமைப்பு செயற்பட்டு வருகின்றது. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுபவர்கள் இந்த அமைப்பின் உதவியை நாடும் பட்சத்தில் அவர்களுக்கு உளவள ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் என்பன வழங்கப்படும்.
உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் இவர்களைத் தொடர்புகொள்ளும்போது உணர்வு ரீதியான உறுதுணை குறித்த நபர்களுக்கு வழங்கப்படும். அத்துடன் இவ்வமைப்பு பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் பின்தங்கிய கிராமங்களுக்குச் சென்று தற்கொலைத் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டங்களையும் நடத்துகின்றது.
“நான் சுமித்ரயோவில் இணைந்த பின்னர் பாதிக்கப்பட்டவர்களுடன் நட்பு ரீதியாக இருக்கிறேன். அது என்னுடைய பொறுப்பு. வழமையாக மக்கள், செய்ய வேண்டிய விடயங்களையும் செய்யக்கூடாத விடயங்களையும் பற்றி பேசுவதற்கு தயங்குவார்கள் ஆனால் சுமித்ரயோ அதற்கு பூரண சுதந்திரம் வழங்குகின்றது” என அமைப்பின் அங்கத்தவரான தக் ஷிலா குமாரி தெரிவிக்கின்றார்.
சுமித்ரயோ அமைப்பின் ஆய்வின்படி இலங்கையில் வடமேல் மாகாணத்திலேயே அதிகமான தற்கொலைகள் இடம்பெறுகின்றன. பிங்கிரிய, கட்டுபொத்த மற்றும் ஹெட்டிப்பொல ஆகிய வடமேல் மாகாண கிராமங்கள் அதிகமான தற்கொலை இடம்பெற்ற கிராமங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எதற்காக தற்கொலை?
ஏதாவதொரு செயற்பாட்டினால் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் தற்கொலைச் செயலினை கோழைத்தனம் என்றோ ஒருவரின் பலவீனம் என்றோ கருதிவிட முடியாது. மனவள ஆய்வாளர்கள் மற்றும் உளவியலாளர்களின் கருத்துப்படி தற்கொலை என்பது ஒரு நோயாகும். அதை ஒரு பலவீனமாகக் கருதுவது பிழையாகும்.
மனிதர்களுக்குத் தோன்றுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழியில்லாத போதும் அது தொடர்பான விடயங்களை பகிர்ந்துகொள்ள யாரும் இல்லாமல் இருத்தல் அல்லது பகிர்ந்து கொள்ள முடியாமல் இருத்தல் போன்ற காரணங்களால் தற்கொலை மனநிலை தோன்றுகின்றது.
தொழில் கிடைக்காமை, பொருளாதார பிரச்சினை, குடும்ப விவகாரங்கள், காதல் விவகாரங்கள், போதை, மனநல கோளாறு, நிரந்தர நோய் அல்லது உடற்கோளாறு போன்ற விடயங்கள் ஒரு மனிதனுக்கு ஏற்படும்போது தற்கொலை எண்ணம் பிறக்கிறது.
இவைதவிர பாலியல் ரீதியான கவலை, பெற்றோருடனான முரண்பாடு, சொத்திழப்பு, பரீட்சையில் தோல்வி, பாலியல் இயலாமை போன்ற காரணங்களாலும் தற்கொலை எண்ணம் தோன்றுகின்றது. பிரதானமாக மேற்குறிப்பிட்ட காரணங்களினாலேயே அதிகமான தற்கொலைகள் இடம்பெறுகின்றன.
நமது கடமை என்ன?
ஒரு சராசரி மனிதனின் சிந்தனைக்கும் தற்கொலை எண்ணம் உடைய ஒருவரின் சிந்தனைக்குமிடையில் அதிகளவான வித்தியாசங்கள் உள்ளன. எனவே எமது அன்புக்குரியவர்களுக்கும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நேரம் ஒதுக்குவது ஒரு உயிரை வாழவைக்கும் செயற்பாடு என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
உங்களுடைய நண்பர்கள் அல்லது மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் என நீங்கள் உணரும் நபர்களை முடிந்தவரை சமாதானம் செய்ய முயற்சி செய்யுங்கள். அவர்களை தனிமையில் விடாதீர்கள். பாதிக்கப்பட்டவர் தனது மனதிலுள்ள விடயங்களை உங்களிடம் வெளிப்படுத்தும்போது தற்கொலை எண்ணத்தை கைவிடலாம். அதற்கு நீங்கள், ‘உனக்கு நான் இருக்கிறேன்’ என நம்பிக்கை கொடுத்து அதை அவருக்கு உணர வைக்க வேண்டும்.
சுமித்ரயோ அமைப்பின் பண்டுவஸ்நுவர பிரதேச அதிகாரியான பி.எம். தக் ஷிலா குமாரி இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், நாம் எதிர்கொள்ளும் விடயம் எதுவாக இருப்பினும் அந்த விடயத்தில் நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட வேண்டும். ஒருவருடன் நட்பாக வேண்டும் என்றால் நாம் அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமே தவிர அவர் மீது பரிதாபப்படுவது மாத்திரம் தீர்வைத்தராது. உணர்வு ரீதியாக பலவீனமடைந்த ஒருவருக்கு இவ்வாறுதான் உதவ வேண்டும். நாம் அவர்கள் சொல்ல வரும் விடயங்களை கேட்க வேண்டுமே தவிர அவர் பேச விரும்பாத ஒரு விடயம் பற்றி பேசும்படி வற்புறுத்துவது ஆரோக்கியமான ஒன்றல்ல.
தற்கொலை செய்யவேண்டாம் என நாம் யாருக்கும் அறிவுறுத்துவதில்லை. தற்கொலை என்பது ஒரு பாரிய உளவியல் தப்பிப்பு. சிலர் தற்கொலை செய்வது ஒரு தனிமனித சுதந்திரம் எனக் கருதுகிறார்கள். தற்கொலை என்பது நாட்டுக்கோ வீட்டுக்கோ அந்த நபருக்கோ அல்லது சமூகத்துக்கோ ஆரோக்கியமான ஒரு விடயம் கிடையாது. ஆனால் தற்கொலை செய்து கொள்பவர் இதைப்பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை என்றார்.
சமூக ஆர்வலரான குமுதினி டீ சில்வா தற்கொலை தொடர்பாக தெரிவிக்கையில், இன்றைய சமூக வலைத்தளங்களும் ஸ்மார்ட் தொலைபேசியும் தற்கொலைகளுக்கு பாரிய காரணங்களாக அமைந்து விடுகின்றன. அனைவரும் சமூக வலைத்தளங்களுக்குள் மூழ்கும்போது நம்மில் யாரோ ஒருவர் தனிமைப்படுத்தப்படுகின்றார். கைப்பேசி மீது கொண்ட மோகத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட அந்த நபரின் நடத்தை மாற்றம் அவருடைய பிரச்சினைகள் பற்றி சிந்திக்க நாம் நேரம் ஒதுக்குவது கிடையாது.
நீங்கள் உண்மையாக அந்த நபர் மீது அக்கறை எடுத்துக்கொள்பவராக இருந்தால் குறைந்தது 5-–10 நிமிடம் வரை அவர்களுடன் உரையாட வேண்டும். அவரை ஒரு தேநீர் கடைக்கு அழைத்துச் செல்லலாம். அப்போது தனது பிரச்சினைகளை பேச வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். சில விடயங்களை பேசாமல் மனதுக்குள்ளேயே வைத்திருப்பது எமது சமூகத்தில் உள்ளவர்களின் வழக்கமாக ஆகிவிட்டது. மேலும் எமது சமூகத்தில் உள்ளவர்கள் பிரச்சினைகள் ஏற்படும்போது உளவள ஆலோசனை பெறுவதற்குச் செல்வதில்லை. என்றார்.
தற்கொலை மனநிலை உடையவரா நீங்கள்?
துரதிஷ்டவசமாக நீங்கள் தற்கொலை மனநிலை உடையவராக இருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வது இலகுவானதே. இதற்காக மாற்றத்தை நீங்கள் உங்களது மனநிலையில் இருந்தே கொண்டுவர வேண்டும்.
எப்போதும் தனிமையில் இருக்காதீர்கள். தனிமை தற்கொலையைத் தூண்டும். உங்களை நேசிப்பவர்களுடன் முடிந்தவரை நேரத்தை செலவு செய்யுங்கள். அவர்கள் எப்போதும் உங்களுடைய சந்தோசத்தைப் பற்றி சிந்திப்பவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் உங்களது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பிரச்சினைகளைக் கொண்டவர்கள்தான் என்ற யதார்த்தத்தை உணருங்கள். ஆன்மிகத்தின் பக்கம் உங்கள் கவனத்தை திருப்புங்கள். இறைவனிடம் உங்களது பிரச்சினைகளைச் சொல்லி மன்றாடுங்கள். நிச்சயமாக உங்களது பிரச்சினை எதுவாக இருப்பினும் அதற்கு ஆன்மீக ரீதியான தீர்வு கிடைக்கும்.
வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான விடயங்களை மனதில் நினையுங்கள். அவற்றை மீண்டும் திரும்பப்பெற முயற்சி செய்யுங்கள். சமூகத்தின் பார்வை பற்றி சிந்திக்காமல் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். தனிமையை தவிர்த்து வெளியேறிச் செல்லுங்கள். தேவையற்ற சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இந்த செயற்பாடுகளின் மூலம் நிச்சயமாக தற்கொலைக்கு முடிவு கட்டலாம்.
உலக சுகாதார நிறுவனம் தெரிவிப்பது என்ன?
செப்டம்பர் 10 ஆம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையினை கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. அதில், குடும்பம், உறவினர்கள் மற்றும் நண்பர்களை பொறுத்தவரை ஒவ்வொரு இறப்பும் பாரதூரமானவையாகும். எனினும் தற்கொலையைத் தடுக்க முடியும். நிரூபிக்கப்பட்ட தற்கொலையினைத் தடுக்கும் தந்திரோபாயங்களை உறுதியான முறையில் தேசிய சுகாதார மற்றும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களில் உள்வாங்குமாறு நாம் அனைத்து நாடுகளிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பல நாடுகளில் தற்கொலை தடுப்பு, தேசிய தந்திரோபாயங்களில் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது..
உயர் வருமானம் பெறுகின்ற நாடுகளிலேயே தற்கொலை வீதம் அதிகமாகக் காணப்படுகின்றது. சர்வதேச ரீதியாக 15 – 29 வயதுக்கு இடைப்பட்ட இளம் பராயத்தினரின் இறப்புக்குக் காரணமான இரண்டாவது காரணியாக தற்கொலை காணப்படுகின்றது. முதலாவது காரணியாக வீதி விபத்து காணப்படுகின்றது எனவும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
தற்கொலை செய்துகொள்வதற்கான சூழலுக்கு செல்வதைத் தடுத்தல், தற்கொலை தொடர்பில் பொறுப்புடன் அறிக்கையிடும் வகையில் ஊடகங்களுக்கு அறிவூட்டுதல், இளம்பராயத்தினர் மத்தியில் வாழ்க்கைத்திறனைக் கட்டியெழுப்புவதற்கு உதவும் வகையிலான நிகழ்ச்சிகள் மற்றும் ஆபத்தான நிலையினை ஆரம்ப நிலையிலேயே அடையாளப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் தற்கொலையைக் குறைக்கலாம் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலையை தடுப்பதில் ஊடகங்களின் பங்கு
தற்கொலைகளைத் தடுப்பது ஒரு பாரிய சவாலாக உள்ள போதிலும் அதைத்தடுப்பதற்கு பங்களிப்பது ஊடகங்களின் பாரிய பொறுப்பாகும். இன்று ஒரு சில ஊடகங்கள் தற்கொலை தொடர்பாக அறிக்கையிடும்போது பல தவறுகளை விடுகின்றன.
பல நாடுகளில் தற்கொலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கே ஊடகங்கள் பங்காற்றி வருகின்றன என்று கூறினால் அது மிகையான ஒன்றல்ல. இந்த நிலைமையை மாற்றியமைக்க ஊடகவியலாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் உரிய முறையில் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயக்கடனாகும்.
தற்கொலைகளை அறிக்கையிடும்போது தற்கொலை செய்து கொண்டமுறை, அதற்கு பயன்டுத்தப்பட்ட உபகரணங்கள் என்பவற்றை எழுதுவது கூடாது. நஞ்சருந்தி உயிரிழந்திருக்கும் பட்சத்தில் பயன்படுத்தப்பட்ட நஞ்சு அல்லது நச்சு வாயு போன்றவற்றின் பெயர்களை சுட்டுவது கூடாது. அவ்வாறு குறித்த பெயர்களை பதிவிடுவதால் ஏற்கனவே தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்களுக்கு தற்கொலை செய்ய ஒரு வாய்ப்பாக அமைந்து விடும்.
மனிதனின் வாழ்க்கை ஒரே சீராக சென்றால், அது அவனுக்கு சுவாரஷ்யமான வாழ்க்கையாக இருக்காது என்பதற்காகத்தான் எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் இறைவன் ஏற்படுத்தியுள்ளான். ஏமாற்றமாய் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நம் வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும் உறுதியான அஸ்திவாரங்கள். ஆனால் இதனை அறிந்து கொள்ளாத மனிதனோ தன் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக நடக்கும்போது தன்னையே மாய்த்துக் கொள்கிறான். சிறிது நேரத்தில் எடுக்கும் பிழையான முடிவால் இவ்வுலகிலும் மறுமை வாழ்க்கையிலும் அவதியுறுவதை எண்ணி உயிர் ஊசலாடும் போது வருந்துகிறான்.
எம்.ஏ.எம்.அஹ்ஸன்
vidivelli