நாடளாவிய ரீதியில் ஒரே காலப் பகுதியில் பல்வேறு தரப்பினர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஷ்கரிப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் என்பன பொது மக்களை மிகுந்த சிரமத்தில் ஆழ்த்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
நேற்றைய தினம் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் வைத்திய சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அரசாங்க வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளைத் தவிர ஏனைய சேவைகள் இடம்பெறவில்லை. இதனால் நோயாளிகள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோன்றுதான் இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊழியர்களும் நேற்று மூன்றாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் காரணமாக பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்புகளைச் சந்தித்தனர். அதிகரித்த கேள்வி காரணமாக தனியார் போக்குவரத்து துறையினர் பொது மக்களிடமிருந்து வழமையை விட கூடுதல் கட்டணத்தை அறவிட்டதாகவும் தகவல்கள் வந்தன.
இதற்கப்பால் பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கடந்த 9 நாட்களாக வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக சகல தேசிய பல்கலைக்கழகங்களும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் இலட்சக் கணக்கான மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்க நிர்வாக சேவை அதிகாரிகளும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை இத்தினங்களிலேயே முன்னெடுத்தனர்.
இவற்றுக்கு மேலாக கொழும்பில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. வேலையில்லாப் பட்டதாரிகள் வழமைபோன்று கொழும்பின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்றைய தினம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கொழும்பில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தினால் நகர மண்டப பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கவீனமுற்ற படைவீரர்கள் நேற்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தினால் காலி முகத்திடல் சுற்றுவட்டாரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கவீனமுற்ற படையினரின் ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தைச் சென்றடைவதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருவதே இவ்வாறான பணிப்பகிஷ்கரிப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் அதிகரிப்பதற்கு காரணமாகும். தமது பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே இவை இடம்பெறுகின்றன.
வைத்தியர்கள், போக்குவரத்துச் சபை ஊழியர்கள், நிர்வாக சேவை அதிகாரிகள், பல்கலைக்கழக ஊழியர்கள் என சகலரும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் என்பது உண்மையே. இருப்பினும் அது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு பொது மக்களை பாதிக்கும் வகையிலான போராட்டங்களையே தொடர்ந்தும் கைக்கொள்வது ஆரோக்கியமானதல்ல.
இலங்கையைப் பொறுத்தவரை நினைத்த நினைத்த நேரங்களில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான போராட்டங்கள் அப்பாவிப் பொது மக்களையே பாதிக்கின்றன. பொது மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பில்லாத வகையிலான போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் மேற்படி சங்கங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
பல்கலைக்கழகங்களில் அடிக்கடி விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் மாணவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கின்றன. எனினும் இதனைத் தடுத்து நிறுத்தி இறுக்கமான விதிகளை கடைப்பிடிக்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இவற்றுக்கு நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டியதும் காலத்தின் தேவையாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அதற்கான ஆரம்பப் புள்ளியாக அமையுமா அல்லது சிக்கல்களை மேலும் தீவிரமாக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
vidivelli