அமெரிக்காவில் 2014 தொடக்கம் தற்போதுவரை 10,015 முஸ்லிம்களுக்கு எதிரான பக்கசார்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க – இஸ்லாமிய உறவுகளுக்கான சபை தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்த அமெரிக்காவிலுள்ள மிகப்பெரும் சிவில் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் அமைப்பான அமெரிக்க – இஸ்லாமிய உறவுகளுக்கான சபை, இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்த போக்கினை காட்டியுள்ள அதேவேளை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் இணைந்ததையடுத்து இச்சம்பவங்களில் துரித அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தது மட்டுமல்லாது வன்முறையின் போக்கிலும் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை உள்ளடங்கலாக முஸ்லிம்களுக்கு எதிராக மொத்தமாக 1,164 வெறுப்புணர்வுக் குற்றங்கள் பதிவாகியுள்ளதோடு சமஷ்டி அரசாங்க முகவரகங்களில் 2,783 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
2016 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் 2,213 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 65 வீத அதிகரிப்பாகும்.
2017 ஆம் ஆண்டு அதிகூடுதலான பக்கசார்பு சம்வங்கள் இடம்பெற்றிருந்தன. சம்பவங்களின் எண்ணிக்கை 2,599 ஆகும்.ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்று முதல் 10 நாட்களுக்குள் வெளியிட்ட முஸ்லிம் தடை நிறை வேற்றுக் கட்டளை இச் சம்பவங்களுக்கு பக்கபலமாக அமைந்திருந்தது. இவ்வாண்டின் முதல் அரைப் பகுதியில் 759 முஸ்லிம்களுக்கு எதிரான பக்கசார்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
vidivelli