ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து அவ்வாறான தாக்குதல்களை எதிர்காலத்தில் தவிர்க்கும் வகையில் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமொன்றினை இயற்றிக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையில் நீதியமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் பெரும் நகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளடங்கிய அமைச்சரவைக் குழு முன்வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தப் புதிய சட்டமூலம் வரைபு செய்யப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புபட்ட பயங்கரவாதக் குழுவொன்று கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதலையடுத்து அவ்வாறான தாக்குதல்களைத் தவிர்க்கும் வகையில் இந்தியா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை உதாரணமாகக் கொண்டு இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையர்கள் நாட்டுக்கு வெளியில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் அமையவுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் இலங்கைக்கு வெளியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்பட்டில்லை.
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பயங்கரவாத செயற்பாடுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத சட்டமொன்றுக்கான சட்டமூலம் சில மாதங்களுக்கு முன்பு பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டிருந்தாலும் சில தரப்புகள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட மையினால், அது இதுவரை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
vidivelli