ஹஜ் கடமைக்காக ஹஜ் விண்ணப்பதாரிகள் எட்டுப்பேரிடம் உரிய கட்டணங்களை அறவிட்டுக்கொண்டு அவர்களுக்கான ஹஜ் பயண ஏற்பாடுகளைச் செய்யாது இறுதி நேரத்தில் ஏமாற்றிய ஹஜ் முகவர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை உரிய கட்டணங்களை திருப்பிச் செலுத்தினார்.
முகவர் நிலையத்தினால் ஏமாற்றப்பட்டு இறுதி நேரத்தில் ஹஜ் யாத்திரையைத் தவறவிட்ட 8 ஹஜ் விண்ணப்பதாரிகள் இருவர் காத்தான்குடியையும் ஏனைய அறுவரும் கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
நேற்று முன்தினம் மாலை எட்டு ஹஜ் விண்ணப்பதாரிகள் ஹஜ் முகவருக்கு செலுத்தியிருந்த கட்டணம் 52 இலட்சம் ரூபாவும் குறிப்பிட்ட முகவரினால் திருப்பிக் கையளிக்கப்பட்டது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட ஹஜ் முகவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அரச ஹஜ் குழு தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பிட்ட 8 ஹஜ் யாத்திரிகர்களும் ஹஜ் யாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த நிலையில் இறுதி நேரத்தில் ஹஜ் முகவரினால் ஏமாற்றப்பட்டவர்களாவர்.
குறிப்பிட்ட எட்டு ஹஜ் விண்ணப்பதாரிகளுக்கும் அடுத்த வருட ஹஜ் கடமையின் போது முன்னுரிமை அளிக்கப்படும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் தெரிவித்தார்.
vidivelli