ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல் ஆகியவற்றில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய குண்டுதாரிகளினுடைய தலைப் பகுதிகளை உறவினர்கள் பொறுப்பேற்க மறுத்துள்ளனர். கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய மொஹமட் இப்ராஹீம் மொஹமட் இன்சாப் அஹமட் ஆகியோரின் உறவினர்களே அவர்களுடைய தலை மற்றும் உடற்பாகங்களை பொறுப்பேற்க மறுத்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு, அவ்விரு குண்டுதாரிகளினதும் மரண பரிசோதனை சாட்சிகளை முன்னிறுத்தி நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
அதனையடுத்து, குறித்த தலைகள் மற்றும் உடற்பாகங்களை திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்ட கோட்டை நீதிவான் ரங்க திசாநாயக்க, அவற்றைப் பொறுப்பேற்று பொரளை பொதுமயானத்தில் புதைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டார். அத்துடன் தற்கொலை குண்டுதாரிகளின் தலை மற்றும் உடற்பாகங்களை புதைக்கும் நடவடிக்கை தொடர்பான அறிக்கையொன்றை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொரளை பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கும் நீதிவான் உத்தரவிட்டார்.
கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடாத்திய மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் குறித்த விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், அவரது தலைப்பகுதி சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பதால் அதனை அரச செலவில் புதைக்க சி.ஐ.டி.யின் விசேட விசாரணை அறை இலக்கம் 4 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கீர்த்திசிங்க நேற்று நீதிவானை கோரியிருந்தார்.
அத்துடன் சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில், தற்கொலைதாரியான மொஹமட் இப்ராஹீம் மொஹமட் இன்சாப் அஹமடின் தலை மற்றும் உடற்பாகங்களை ஏற்க அவரது குடும்பத்தார் மறுப்பு வெளியிட்டுள்ளனர்.
தற்கொலைதாரியின் தந்தை மற்றும் மாமா ஆகியோரின் சாட்சியங்களை குறித்த சம்பவத்தை விசாரிக்கும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்திர விமலசிறி நீதிவான் முன்னிலையில் நெறிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த இரு தற்கொலைதாரிகளினதும் தலை மற்றும் உடற்பாகங்களை பொரளை பொது மயானத்தில் புதைக்க நீதிவான் இரு வேறு கட்டளைகளை திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளருக்குப் பிறப்பித்துள்ளார்.
எம்.எப்.எம்.பஸீர்
vidivelli