சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு சவூதி அரேபியாவின் எஸ்.எப்.டீ.நிதியம் முன்வந்துள்ளது. 187.5 சவூதி ரியால் (50 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதியை வழங்க மேற்படி நிதியம் உடன்பட்டுள்ளது.
நேற்று நிதியமைச்சில் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை சார்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்கவும் மேற்படி பணிக்காக நிதி வழங்க முன்வந்துள்ள சவூதியின் எஸ்.எப்.டீ.நிறுவனம் சார்பாக அதன் பிரதித் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான காலித் சுலைமான் அல் குதைரியும் கைச்சாத்திட்டனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் ஒன்றை அமைப்பதற்காக இலங்கை அரசாங்கத்தால் தற்போது அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இதனை நடத்துவதற்குத் தேவையான நிதி 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வைத்திய பீடத்தில் முதல் நுழைவுக்கான மாணவர் குழுவினரும் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அரசு முன்னெடுத்து வரும் ‘2025 நோக்கு’ செயற்திட்டத்திற்கு இணையாக கல்வி, திறன், விருத்தி, சுகாதாரம் பேணல் போன்ற சமூக நலத் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதும் அவற்றை மேலும் விருத்தி செய்வதும் அரசின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதான கூறுகளாகக் கணிக்கப்படுகின்றன. சுகாதாரம் போஷணை மற்றும் உள்நாட்டு வைத்தியத்துறை அமைச்சு மேற்கொண்ட ஆய்வறிக்கைக்கமைய இலங்கை மக்கள் தொகையில் 100,000 பேருக்கு 77 வைத்திய அதிகாரிகள் என்ற விகிதத்திலே தான் டாக்டர்கள் காணப்படுகிறார்கள்.
இந்த அடிப்படையில் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இவ்விகிதாசாரத்தை விட பல மடங்கு அதிகமான டாக்டர்கள் கடமையில் உள்ளார்கள்.
1981 ஆம் ஆண்டு சவூதியின் நிதியத்தின் ஊடாக இலங்கையின் நீர் விநியோகத் திட்டத்திற்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கடனுதவியாக வழங்கப்பட்டது. இதுவே இலங்கை–சவூதி அரசாங்கங்களுக்கிடையேயான முதலாவது நிதி கையளிப்பு நடவடிக்கையாகும்.
2018 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் வீதி அபிவிருத்தி, சுகாதாரம்,நீர்ப்பாசனம், சமூக அபிவிருத்தி, உயர் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குமாக சவூதி அரேபியா இலங்கைக்கு 386 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏ.எல்.எம்.சத்தார்
vidivelli