ஹஜ் முகவர் நிலையங்களுக்கு எதிராக இதுவரை 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மேலும் முறைப்பாடுகள் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் தெரிவித்தார்.
ஹஜ் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கென அரச ஹஜ் குழு நாளை (இன்று) ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையில் மூவரடங்கிய குழுவொன்றினை நியமிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் விசாரணையின் பின்பு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு ஹஜ் குழு தீர்மானித்துள்ளது.
இவ்வருடம் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட ஹஜ்ஜாஜிகள் தாம் பயணம் மேற்கொண்ட ஹஜ் முகவர் நிலையங்களுக்கு எதிராக தமக்கு வழங்கப்பட்ட சேவைகள் மற்றும் அறவிடப்பட்ட கட்டணங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய விரும்பினால் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் ஆலோசனைகளையும் தெரிவிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli