சில தினங்களுக்கு முன்னர் கண்டி தெல்தோட்ட நகரில் இடம்பெற்ற இரு தரப்பினர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் கண்டி நீதிமன்ற நீதிவான் எதிர்வரும் 26 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந் மோதல் சம்பவத்தினால் கடந்த இரண்டொரு தினங்கள் தெல்தோட்டை நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. ஒருவரது காணியில் மற்றுமொரு காணி உரிமையாளர் குப்பைகளை கொட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து இரு தரப்பினர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஒரு காணிச் சொந்தக்காரரான வர்த்தகர் 59 வயது நபர் ஒருவரை மண்வெட்டியால் தாக்கிக் காயப்படுத்தியதாகவும் இந்த சம்பவங்களின் காரணமாக மேலும் இருவர் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் காயமடைந்த மூவரில் இருவர் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மற்றுமொரு 20 வயது இளைஞர் காயமடைந்த நிலையில் கலஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கலஹா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.எம்.எஸ். கோணார தலைமையிலான பொலிஸார் ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்து கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்த போது நீதிவான் ஐவரையும் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த மோதல் சம்பவங்களையடுத்து ஏற்பட்ட பதற்றநிலை நீங்கி தற்போது அமைதி ஏற்பட்டுள்ளது.
செங்கடகல – ஹேவாஹெட்ட நிருபர்
vidivelli