உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுவிக்கப்பட வேண்டும்
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்
கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தி உண்மையை வெளியிடுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நேற்று பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையை முன்வைத்து சபையின் உப தவிசாளாரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியுமான எஸ்.எம்.எம்.ஹனீபா உரையாற்றுகையில், அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொண்டு கைது செய்தமைக்கான காரணத்தை வெளியிட்டு முஸ்லிம் சமூகத்தின் அச்சத்தை தெளிவுபடுத்த வேண்டும். இக்கைது தொடர்பாக முஸ்லிம் சமூகம் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளது. அவர் எமது நாட்டின் இறைமைக்கும், அரசியலமைப்புக்கும் எப்போதும் மதிப்பளித்து செயற்பட்டவர். அவரது பேச்சுக்கள், செயற்பாடுகள், எழுத்துக்கள் என்பன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் இறைமைக்கு எதிராகவோ, அரசியல் யாப்புக்கு முரணாகவோ நாட்டினது அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிப்பதாகவோ அமைந்ததில்லை.
நமது நாட்டில் வாழ்கின்ற இனங்கள், மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு மத்தியில் நல்லுறவினையும், இணக்கப்பாட்டினையும் ஏற்படுத்துவதற்காக கடுமையாக உழைத்தவர். நமது நாட்டிலே வாழ்கின்ற மக்கள் அனைவரும் இலங்கையர் என்பதை மக்கள் மனதில் பதிப்பதற்கு அர்ப்பணிப்பான செயற்பாடுகளை மேற்கொண்ட இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், முறைப்பாடுகளும் அவர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்வைக்கப்பட்டதாக முஸ்லிம் சமூகம் கருதுகிறது.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியாகவும் நியாயமான முறையிலும் செயற்பட்டு குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார் என்று முழு முஸ்லிம் சமூகமும் நம்புகிறது. அத்துடன் அவர்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.
இப்பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான தமீம் ஆப்தீன், ஏ.எஸ்.எம்.உவைஸ் ஆகியோரும் உரையாற்றினனர். இதனையடுத்து சபையினால் ஏகமனதாக பிரேரணை அங்கீகரிக்கப்பட்டதுடன் இப்பிரேரணையின் பிரதிகளை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
ரீ.கே.றஹ்மத்துல்லா
vidivelli