நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் நோக்கத்தை பிரதானமாகக்கொண்டு செயற்படுபவர்களுடனும் 19ஆம் திருத்தத்தை உறுதிப்படுத்துபவர்களுடனும் இணை ந்தே என்னால் ஜனாதிபதி வேட்பாளராக வரமுடியும். அத்துடன் இதற்கு ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக முன்வருமாறு தெரிவிக்கப்படும் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல முக்கிய காரணங்களை முன்வைத்து இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக இருக்குமாறு கடந்த சில வாரங்களாக மகாநாயக்க தேரர்கள் மற்றும் வேறு மதத்தலைவர்கள், பல்வேறு சிவில் அமைப்புகளின் பிரதானிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்வேறு துறைகளில் இருக்கும் புத்திஜீவிகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் என்னை வந்து சந்தித்தனர்.
இன்னும் சிலர் தனிப்பட்ட ரீதியில் வந்து சந்தித்ததுடன் மற்றும் சிலர் தொலைபேசியில் தொடர்புகொண்டும் செய்தியாளர் சந்திப்புக்களை நடத்தியும் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இவர்கள் அனைவரும் முன்வைத்திருந்த பொதுவான விடயம் என்னவென்றால், நாட்டுக்குள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினையைத் தீர்த்து ஒழுக்கமுள்ள ஆட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு நம்பிக்கையான தலைமைத்துவம் நாட்டுக்குத் தேவையாகும். அதற்காக இந்த வேண்டுகோளை முன்வைப்பதாகவே அவர்கள் அனைவரும் தெரிவித்திருந்தனர்.
என்மீது இவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் எனது நன்றியை ஆரம்பமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்றாலும் ஜனாதிபதி வேட்பாளராக முன்வருமாறு தெரிவித்து கிடைக்கப்பெற்றிருக்கும் எந்தக் கோரிக்கையானாலும் 1995ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் தொடர்ந்து இருக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு செயற்படும் அரசியல் சக்திகளுடன் இணைந்தும்,
அதேபோன்று 17ஆம் திருத்தம் ஊடாக முன்வைக்கப்பட்டிருக்கும் 19ஆம் திருத்தம் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் ஜனநாயக மறுசீரமைப்புக்காக தொடர்ந்து செயற்படுபவர்களுடன் இணைந்துமே செயற்படுவேன்,
இது முன்னேற்றகரமான ஜனநாயகத்துடன் பொருளாதாரம் மற்றும் தார்மிகம் மிக்க, உறுதியான, பாதுகாப்பான நாடொன்றை நோக்காகக் கொண்டு குறிப்பிட்ட காலத்துக்காக மேற்கொள்ளப்படும் அர்ப்பணிப்பாகும். மாறாக, ஜனாதிபதி வேட்பாளர் பதவியை எதிர்பார்த்து மேற்கொள்ளப்படும் தலையீடல்ல. என்றாலும் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதானமாகக் கொண்ட பிரிவினர் பிரதிநிதித்துவப்படுத்தி இவ்வாறு முன்வந்தால்௸, அது கட்சியின் யாப்புக்கமைய அனைத்து பிரிவினரின் ஆசிர்வாதத்துடன் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
ஆர்,யசி, எம்.ஆர்.எம்.வஸீம்
vidivelli