விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 09
முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி விகிதம்
“இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று உள்ளதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய்” என மஹிந்தவின் பக்தர்களில் ஒருவரான உதய கம்மன்பில சமீபத்திய பத்திரிகைச் செவ்வியொன்றில் கூறியிருந்தார். முஸ்லிம் சனத்தொகை வளர்ச்சி வீதம் குறித்து இதேபோன்ற ஒரு வாக்கியமுண்டு. முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி சிங்களவர்களைச் சிறுபான்மையாக்கிவிடும் என்ற கம்மன்பிலவின் வார்த்தை அப்பட்டமான பொய்யாகும்.
1990 களின் காலப்பகுதியில் ITN தொலைக்காட்சியில் ஒரு வாராந்த கலந்துரை யாடலின் மூலம் தனது பிரசாரப் பணியைத் தொடங்கியவர் கங்கொடவில சோமதேரர். தொலைக்காட்சி எனும் ஊடகத்தை வெற்றிகரமாகக் கையாண்ட முதலாவது இலங்கை பௌத்த பிக்கு சோமதேரர் தான் என பேராசிரியர் ஜயதேவ உயங்கொட குறிப்பிடுகின்றார். அதில் 2025ஆம் ஆண்டில் சிங்கள பௌத்தர்கள் குடித்தொகை ரீதியில் சிறுபான்மையினராகி விடுவார்கள் என்று ஆச்சரியம் தரும் அரசியல் கோட்பாடு ஒன்றையும் சோமதேரர் முன்வைத்து வந்தார். முஸ்லிம் சமூகத்தை குறிப்பாக விமர்சித்தார். இவ்விடயத்தில் அவர் பகுத்தறிவின்மையின் எல்லைகளையும் தாண்டிச்சென்றார். சிங்கள பௌத்தர்கள் குடும்பக்கட்டுப்பாட்டைப் பேணுகையில் முஸ்லிம்கள் தாராளமாகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டிருக் கிறார்கள் என்பதே அவரது அடிப்படை வாதமாகும்.
இந்தியாவில் தீவிர இந்துத்துவ கருத்து நிலையாளர்களும் இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக இதையொத்த குடித்தொகைவாதம் ஒன்றையே முன்வைக்கின்றனர். இந்தியாவில் இந்துத்துவ கருத்துநிலை எத்தகைய பகுத்தறிவுக்குப் புறம்பான சட்டகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதோ அத்தகைய சட்டகத்தையே சிங்களத்துவ கருத்து நிலையும் அடித்தளமாகக் கொண்டுள்ளது. சோமதேரர் ரஷ்யாவிலிருந்து இலங்கை திரும்பிய பின்னர் பத்துப் பிள்ளைகளுக்கு மேல் பெற்ற சிங்கள பௌத்த பெண்களைப் பாராட்டும் பொது வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்ய அவர் திட்டமிட்டிருந்ததாக அவரது மரணத்தின் பின்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த நிகழ்வு, தீவிர சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் தலைநகரான காலியில் நடைபெற இருந்தது. எனினும் ரஷ்யா சென்ற சோமதேரர் உயிருடன் திரும்பவில்லை. 2003 இல் அவர் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணித்துப்போனார். சோம தேரர் 2002 இல் அதாவது மரணத்திற்கு முன்னைய ஆண்டில் அவர் நிறுவிய ஒரு சிறிய அரசியல் கட்சியின் தலைவராகவும் அவர் விளங்கினார். அடுத்து வந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள –பௌத்த அரசியல் நலன்களைக் காப்பதற்காகவும் நாட்டின் தார்மிக மீட்டெழுச்சிக்காகவும் தான் போட்டியிடப்போவதாகவும் அவர் பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனினும் அவரது கனவு கைகூடவில்லை.
பின்னர் தோன்றிய ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இணைந்த அரசியல் பிக்குகள் முஸ்லிம் சனத்தொகை குறித்த ஒரு அரசியல் கோட்பாட்டை வளர்த்தெடுத்தனர். அவர்களுள் கொலன்னாவை ஸ்ரீ சுமங்கள தேரர், உடுவே தம்மாலோக தேரர், எல்லாவல மேதானந்த தேரர், ஓமல்பே சோபித தேரர் மற்றும் அதுரலிய ரத்ன தேரர் போன்றோர் முக்கியமானவர்கள்.
2012 இல் தம்புள்ள இன முரண்பாட்டை அடுத்து உருவான பொதுபல சேனா முஸ்லிம் குடித்தொகை அதிகரிப்பு தொடர்பாக புரளியைக் கிளப்பியது. ஞானசாரர் இது குறித்த பீதியை சிங்கள – பௌத்தர்கள் மத்தியில் மிகக் கவனமாகப் பரப்பி வருகிறார். 4/21 க்குப்பின்னர் இனத் தேசியவாதியான கம்மன்பில சனத்தொகை வளர்ச்சி விகிதம் எதிர்காலத்தில் சிங்களவர்களைச் சிறுபான்மையாக்கிவிடும் என்று சோமதேரரின் பழைய பல்லவியைப் பாடி அமைச்சர் ஹக்கீமிடமிருந்து போதிய எதிர்வினையை எதிர்கொண்டார்.
சுதந்திரத்திற்கு முன்னரும் இனத்தேசிய வாதிகளும் அரசியல் உள்நோக்கம் கொண்ட மதகுருக்களும் சிங்கள சமூகத்தைப் பீதிமயமாக்கி முஸ்லிம் குடித்தொகை வாதத்தைக் கையில் எடுத்துள்ளனர். அநகாரிக தர்மபால, ஸ்டீல் ஒல்கொட், ஹிக்கடுவே சுமங்கல தேரர் என்போர் இதில் முக்கியமானவர்கள். முஸ்லிமோ போபியா (Muslimo Phopiya) வை சந்தைப்படுத்தும் மூலோபாயங்களில் ஒன்றாகவே முஸ்லிம் சனத்தொகை குறித்த இந்தப் பொய்க்கலந்துரையாடல் கட்டமைக்கப்படுகின்றது. அரபு மயமாக்கல், மத்ரஸாக் கல்வி, இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்ற கதையாடல்களைப் போன்று அறிவார்ந்த ரீதியில் பதிலளிக்க வேண்டிய ஒரு புனைவே முஸ்லிம் குடித்தொகை வாதம் ஆகும். சுமாராக, மியன்மாரிலும் இந்தக் கதையாடல் அங்குள்ள மதகுருக்களால் உருவாக்கப்பட்டமை கவனிப்புக்குரியது.
2011இல் அதிகாரபூர்வ தொகை மதிப்பீட்டின்படி இலங்கையில் சுமார் 2 மில்லியன் முஸ்லிம்கள் (1,967,277) வாழ்கின்றனர். இத்தொகை 2040 இல் 4 மில்லியனாகவும் 2070 இல் 8 மில்லியனாகவும் 2100 இல் 16 மில்லியனாகவும் அதிகரிக்கும் என இனத்தேசியவாதிகள் இன்று பிரசாரம் செய்து வருகின்றனர். பெரும்பான்மைச் சிங்கள பௌத்தர்களிடையே முஸ்லிம் சனத்தொகை அதிகரிப்பு பற்றிய ஓர் அறிவுபூர்வமற்ற பீதியை (Demogrophobia) இது உருவாக்கி வருகின்றது. இந்தப் புனைவுக்குப் பின்னால் ஒரு குரூரமான அரசியல் ஒளிந்திருக்கிறது. முஸ்லிம்களின் சனத்தொகை இரட்டிப்பாவதற்கு இன்னும் 30 ஆண்டுகளே போதுமானது எனவும் சிங்களவர்கள் சனத்தொகை இரட்டிப்பாவதற்கு 140 ஆண்டுகள் தேவை எனவும் இனவாதிகள் பிரசாரம் செய்கின்றனர்.
இலங்கை முஸ்லிம்கள் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏதுவான சில போலிக் காரணங்களையும் இத்தகைய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோர் முன்வைத்து வருகின்றனர். வெளிநாட்டு முஸ்லிம்கள் இலங்கையில் குடியேறி வருவதாக ஒரு புதிய குற்றச்சாட்டும் முன்னிறுத்தப்படுகின்றது. கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலும் இந்திய முஸ்லிம்கள், மாலைதீவினர் மற்றும் பாகிஸ்தானியர்கள் 20,000 பேர் புதிதாகக் குடியேறியுள்ளதாக இனவாதிகள் கூறுகின்றனர். இதேவேளை கடந்த சில ஆண்டுகளில் 57,000 சிங்கள பௌத்தர்கள் முறையற்ற விதத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது. சிங்கள யுவதிகளை முஸ்லிம் இளைஞர்கள் மணம் முடிப்பதன் மூலமே இத்தகைய சட்டவிரோத மத மாற்றங்கள் இடம்பெறுகின்றன என்பது இவர்களின் அடிப்படை வாதமாகும்.
இன்னொரு புறம் மத்திய கிழக்கிற்கு பணியாற்றச் செல்லும் சிங்கள பௌத்தர்கள் திட்டமிட்ட அடிப்படையில் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்படுவதாகவும் இனவாதிகள் அங்கலாய்க்கின்றனர். இக்குற்றச்சாட்டு ஒவ்வொன்றுக்கும் அறிவார்ந்த பதிலடி புள்ளி விபர அடிப்படையில் முன்வைக்கப்படவேண்டும்.
1911 முதல் 2001 வரையான காலப்பகுதியில் இலங்கையில் அதிகாரபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட தொகை மதிப்பீட்டுத் தரவுகள் பின்வரும் அட்டவணையில் (அட்டவணை 01) தரப்படுகின்றது. இத்தரவுகளை மிக மேலோட்டமாக அவதானிக்கும்போதே இனவாதிகளின் குடித்தொகை வாதத்திலுள்ள புனைவுகளையும் பொய்மைகளையும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
மேற்போந்த தரவுகளின்படி இலங்கையில் எந்தவொரு இனத்தவரது சனத்தொகை வளர்ச்சி வீதமும் (Population Growth rate) சமச்சீரானதாக இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதேவேளை கடந்த 100 ஆண்டுகளில் அண்ணளவான ஒரு நெருக்கம் சனத்தொகை வளர்ச்சி வீதத்தில் உள்ளதையும் அவதானிக்கலாம். இந்த அட்டவணையை நோக்கும்போது இந்தியத் தமிழர்கள் மாத்திரம் 1970களில் 4.3 வீத சனத்தொகை வளர்ச்சி வீதத்தைப் பதிவு செய்துள்ளமை தெளிவாகும். சிங்களவர்கள், முஸ்லிம்கள், இலங்கைத் தமிழர்கள் வளர்ச்சி வீதம் 2.5 வீதத்தைத் தாண்டவில்லை என்பது தெட்டத் தெளிவானது. சிங்களவர்களின் வளர்ச்சி வீதத்தை ஏனைய இனங்களின் சனத்தொகை வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இது புலனாகும்.
இதேவேளை இந்நாட்டின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் சிங்கள சமூகத்தின் சனத்தொகை விகிதாசாரம் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளதை தெளிவாக அவதானிக்கலாம். அவ்விகிதாசாரத்தை ஏனைய எந்த இனத்தாலும் தோற்கடிக்க முடியாதளவு அவர்களின் விகிதாசாரம் உயர்ந்துள்ளதையும் இலகுவில் புரிந்து கொள்ளலாம். (கீழே உள்ள அட்டவணையைப் பார்க்க (அட்டவணை 02).
இந்த அட்டவணையின்படி சிங்களவர்களின் சனத்தொகை விகிதாசாரம் உயர்ந்து கொண்டே சென்றுள்ளதை அவதானிக்கலாம். இன்று நாட்டின் சனத்தொகையில் 75 சதவீதமானோர் சிங்களவர்களே. 1921ஆம் ஆண்டு 66 சதவீதமாக இருந்த சிங்கள பௌத்தர்கள் 2011இல் 75 வீதமாக அதிகரித்துள்ளனர். 80 ஆண்டுகால இடைவெளியில் 9 வீதத்தால் சிங்களவர்கள் அதிகரித்துள்ளனர். அதேவேளை 1920களில் 34 வீதமாக இருந்த சிறுபான்மை மக்கள் 80 ஆண்டுகளுக்குப் பின்னர் 25 வீதமாகக் குறைந்துள்ளனர். அதாவது 8 தசாப்த கால இடைவெளியில் சிறுபான்மையினர் 09 வீதத்தால் குறைந்துள்ளனர். 2011ஆம் ஆண்டின் அதிகாரபூர்வ தொகைமதிப்பீட்டின்படி முஸ்லிம்கள் சனத்தொகை வளர்ச்சி வீதம் 1.7ஆக உள்ளது. சிங்களவர்களின் வளர்ச்சி வீதம் 0.9 ஆக உள்ளது.
இவ்வட்டவணையின்படி முஸ்லிம் சனத்தொகை வளர்ச்சி வீதம் சிங்களவர்களையும் தமிழர்களையும் விட சற்று அதிகமாக உள்ளதை அவதானிக்கலாம். வரலாற்று ரீதியில் முஸ்லிம் சனத்தொகை வளர்ச்சி வீதத்தை நோக்கினால் எல்லா ஆண்டுகளிலும் அது சமச்சீரானதாகவும் ஒரு படித்தானதாகவும் இல்லை என்பதை அவதானிக்கலாம். இந்தப் பொது உண்மை எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும். 1951இல் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 2.5 வீதமாக இருந்தது. அதே ஆண்டில் சிங்களவர்களின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 2.5 ஆக இருந்தது. தமிழர்கள் 2.4வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.
எவ்வாறாயினும் ஒவ்வொரு பத்தாண்டிலும் ஏனைய இனங்களோடு ஒப்பிடும்போது முஸ்லிம் சனத்தொகை கூடுதல் வளர்ச்சி வேகத்தைக் கொண்டுள்ளமை ஒரு பொதுவான அவதானமாகும். ஏனைய இரு இனங்களையும் விட முஸ்லிம் சனத்தொகை சற்று அதிகரித்துச் சென்றுள்ளது. அதிலும் சமகாலத்தை விட கடந்த தசாப்தங்களில் முஸ்லிம்களின் வளர்ச்சிவேகம் கூடுதலாக இருந்துள்ளது. ஆனால் இது சிங்களவர்களின் சனத்தொகையை மிகைக்கும் அளவுக்கு உயர்ந்து செல்லவில்லை. அதாவது, சிங்களவர்களின் சனத்தொகையை விட முஸ்லிம்களின் சனத்தொகை எண்ணிக்கையில் அதிகரிக்கவில்லை. வளர்ச்சி விகிதாசாரத்திலேயே அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. அதன்மூலம் பெரும்பான்மைச் சிங்களவர்கள் சிறுபான்மையாக மாறுவார்கள் என்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
அதேபோன்று சிங்கள இனத்தவர்கள் அழிந்து போய்விடவும் இல்லை. அப்படியானால் இன்று ஒப்பீட்டு ரீதியில் கடந்த காலத்தை விடவும் குறைந்த வளர்ச்சி வேகத்தைப் பேணிவரும் சிங்கள இனத்தவர்கள் ஏன் அழிந்து போகும் இனம் என பிரசாரம் செய்யப்படுகின்றது? ஓர் அச்சம் கட்டமைக்கப்படுகின்றது? இனத் தேசியவாதிகளை நோக்கிய இந்த கேள்வி தவிர்க்கவியலாதது என்கிறார் ஷானக வத்தேகம எனும் ஆய்வாளர். ஏனெனில் சிங்களவர்கள் ஏனைய இனங்களுக்கு ஒப்பாகவும் சமாந்தரமாகவும் வளர்ச்சி கண்டு வருகின்றனர் என்பதை நாம் தெளிவாக நிரூபிக்க முடியும் என்பதுதான் அவரது வாதம்.
1917ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீடுகளை வருடங்களின் அடிப்படையில் நோக்கி, சிங்கள சனத்தொகையை ஒரு குவியலாக்கி ஏனைய அனைத்து இனங்களினதும் சனத்தொகையை மற்றொரு குவியலாக்க முற்பட்டால் இந்த உண்மையை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதன் மூலம் சிங்களவர்கள் ஏனைய இனங்களுக்கு சமாந்தரமாக வளர்ச்சியடைந்து வருகின்றனர் என்பதை எளிதில் நிரூபிக்கலாம். (அட்டவணை – 03 ஐப் பார்க்க)
கடந்த 30 ஆண்டு கால இடைவெளியில் முஸ்லிம்களது சனத்தொகை 822, 920 ஆல் அதிகரித்துள்ளது. அதே காலப்பகுதியில் சிங்களவர்களின் சனத்தொகை முஸ்லிம் சனத்தொகையுடன் ஒப்பிட்டால் 8 மடங்கால் அதிகரித்துள்ளதை அவதானிக்கலாம்.
கிட்டத்தட்ட 4200000ஆல் அதிகரித்துள்ள சிங்கள சமூகத்தை வெறும் 800,000 ஆல் அதிகரித்துள்ள முஸ்லிம் சனத்தொகை தோற்கடித்து பெரும்பான்மையைச் சிறுபான்மையாக்கி விடும் என வாதிப்பது அறிவுபூர்வமானதா?
vidivelli