தேசிய பரா மெய்வல்லுநர் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்ற அனீக் அஹமட்
தேசிய பரா ஒலிம்பிக் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வருடத்துக்கான தேசிய பரா மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த செப்டெம்பர் மாதம் 5 ஆம், 6 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றன.
இலங்கையிலுள்ள ஊனமுற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீரர்களுக்காக நடத்தப்படுகின்ற ஒரேயொரு போட்டித் தொடராக விளங்குகின்ற தேசிய பரா மெய்வல்லுநர் தொடரில் இம்முறை 45 கழகங்களைச் சேர்ந்த சுமார் 800 மாற்றுத் திறனாளி வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பார்வை குறைபாடுடையவர்கள், உடல் ரீதியாக குறைபாடுடையவர்கள் மற்றும் சிந்தனை குறைபாடுடையவர்கள் என மூன்று வகையான வீரர்களுக்காக 190 இற்கும் மேற்பட்ட சுவட்டு, மைதான நிகழ்ச்சிகள் இதில் நடைபெற்றன. அத்துடன், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி வீரர்களும் இம்முறை போட்டிகளில் பங்குபற்றினர்.
இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்று 100 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், நீளம் பாய்தல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.எம். அஹமட் அனீக்.
சிறு வயதிலேயே பெற்றோரையும் இழந்து, பாடசாலைக் காலத்தில் புற்று நோய்க்கு முகங்கொடுத்து கால் ஒன்றையும் இழந்து வாழ்வில் சவால்களை எதிர்கொண்ட இவர், இன்று தேசியமட்ட போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளதன் மூலம் அனைவரையும் பிரமிக்கச் செய்துள்ளார்.
அவரது வாழ்க்கைப் பயணம் தொடர்பில் விடிவெள்ளிக்கு வழங்கிய செவ்வியை இங்கு தருகிறோம்.
நேர்காணல்: பழுலுல்லாஹ் பர்ஹான் (காத்தான்குடி மேலதிக நிருபர்)
Qஉங்களைப் பற்றி சுருக்கமான அறிமுகத்தை தாருங்கள்?
நான் 2001 இல் காத்தான்குடியில் பிறந்தேன். 4 ஆம் ஆண்டில் கல்வியை தொடர்ந்து கொண்டிருக்கையில் எனது தாய் காலமானார். தாய் மரணித்து மூன்று மாதங்கள் நானும், தம்பியும் தந்தையின் பராமரிப்பில் வளர்ந் தோம். அதன் பின்னர் தந்தை மறு திருமணம் செய்தார். பின்னர் சில ஆண்டுகளில் தந்தையும் மரணித்து விட்டார். தற்போது தாயின் சகோதர சகோதரிகள்தான் எங்களை பராமரித்து வருகிறார்கள்.
தரம் 7 வரை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்ற நான் பின்னர் திஹாரிய சர்வதேச பாடசாலையில் ஆங்கில மொழியில் கல்வியை தொடர்ந்தேன். தற்போது வரகாபொல தாருல் ஹஸனாத் அகடமியில் உயர் கல்வியைத் தொடர்ந்து வருவதுடன் விளையாட்டுத் துறையிலும் ஈடுபாடுகாட்டி வருகிறேன்.
Q புற்றுநோய் எவ்வாறு ஏற்பட்டது?அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தீர்கள்?
2017 ஆம் ஆண்டு திஹாரிய சர்வதேச பாடசாலை விளையாட்டு மைதானத்தில் உதைபந்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது எனது நண்பர் ஒருவர் எதேச்சையாக அடித்த பந்து எனது காலில் பட்டு வீங்கி நடக்க முடியாமல் போனது. ஒரு மாத காலம் ஆயுர்வேத வைத்தியம் செய்தும் பலனளிக்காததால் வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்தபோதுதான் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் உள்ளதாக வைத்தியர் சொன்னார்.
தந்தையின் உதவியோடு இது தொடர்பான வைத்திய பரிசோதனை மேற்கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் எனது தந்தை திடீரென மரணித்து விட்டார்.
இதன் பின்னர் 2017 இறுதியில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் எலும்பு முறிவு வைத்திய நிபுணரின் ஆலோசனைக்கிணங்க இரத்தப் பரிசோதனை மற்றும் உயிர்த்திசுப் பரிசோதனை (BIOPSY TEST) செய்தபோதுதான் TIBIA OSTEOSCARCOMA என்ற புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது 13 தொடக்கம் 19 வயதிற்குற்பட்ட இளம் வயதினரில் ஆயிரத்தில் ஒருவருக்கு வருகின்ற நோயாகும்.
புற்று நோய் என்று கண்டுபிடிக்கப்பட்ட மூன்று வாரங்களிலேயே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.இக்பாலின் ஆலோசனைகளுக்கமைய சிகிச்சைகள் ஆரம்பமாகின. இந்த சிகிச்சைகளின் பெறுபேறு ஒன்றில் முற்றாக குணமடையலாம் அல்லது உயிரிழக்கலாம் என்றிருந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைகளை தொடர அனுமதி வழங்கினர்.
எனினும், சிகிச்சைகளுக்கு முன்னர் புற்று நோய் உடல் முழுவதும் பரவியுள்ளதா அல்லது காலில் மாத்திரம் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டி வந்தது. இதற்கமைய கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் மருத்துவ அறிக்கையில் முழங்காலுக்கு கீழ் மாத்திரம் பரவி இருப்பதாக கண்டறியப்பட்டது.
இதன் பிற்பாடு புற்று நோயை அழிப்பதற்கான முதலாம், இரண்டாம், மூன்றாம் கட்ட கீமோதெரபி சிகிச்சைகள் நடந்தன. இக் காலப்பகுதியில் இரண்டாம் கட்ட சிகிச்சையின்போது முழங்காலுடன் இடது காலைக் கழற்ற வேண்டி ஏற்பட்டது. மீண்டும் மூன்றாம் கட்ட கீமோதெரபி சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டு 2018 ஆகஸ்ட் மாதத்துடன் அல்லாஹ்வின் உதவியாலும் வைத்தியர்களின் சிறந்த சிகிச்சைகளாலும் எனக்கு ஏற்பட்ட புற்று நோய் முற்றாக அழிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Qசெயற்கை காலுடனான அனுபவம் பற்றி?
எனது சிகிச்சையின் இறுதிக் கட்டத்தின் போது 2018 ஆகஸ்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் எனக்கு செயற்கை கால் ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது. அதனை ஒரு மாதம் பாவித்தேன்.
அதன் பின்னர் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவுக்கு கொழும்பில் புதிய செயற்கை கால் ஒன்றை கொள்வனவு செய்து அதனையே இன்று வரை பயன்படுத்தி வருகிறேன்.
இந்த செயற்கைக் கால் மூலம் துவிச்சக்கர வண்டி,மோட்டார் சைக்கிள் என்பவற்றை செலுத்த முடியும். அத்தோடு ஐந்து நேர தொழுகைகளை நிறைவேற்ற முடியும், நடக்க முடியும், ஓட முடியும், பாய முடியும்.
Qசிகிச்சையின் பின்னர் கல்வியைத் தொடர்கின்றீர்களா?
சிகிச்சைகளை முடித்த பின்னர் மீண்டும் திஹாரிய சர்வதேச பாடசாலையில் இணைந்து 40 நாட்களிலேயே கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 2018 டிசம்பரில் ஆங்கில மொழி மூலம் தோற்றினேன். இதற்கமைய 8 பாடங்களில் சிறந்த சித்திகளைப் பெற்றுக் கொண்டேன்.
பின்னர் உயர் கல்விக்காக 2019 ஜனவரியில் வரகாபொல தாருல் ஹஸனாத் அகடமியில் சேர்ந்து ஆங்கில மொழி மூலத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்று வருவதோடு அதே அகடமியில் AAT கற்கை நெறியையும் தொடர்ந்து வருகின்றேன்.
Qவிளையாட்டின் மீதான உங்கள் ஆர்வம் பற்றிச் சொல்லுங்கள். கால் ஒன்று இல்லாத நிலையிலும் எப்படி உங்களால் விளையாட முடிகிறது?
பாடசாலை காலத்திலிருந்து கிரிக்கெட், உதைபந்து, ஓட்டம் போன்ற விளையாட்டுக்கள் உட்பட ஏனைய விளையாட்டுக்களிலும் பங்கேற்று வெற்றி பெறுவதால் எனக்கு அதில் நல்ல ஈடுபாடிருந்தது. நான் கல்வி கற்ற பாடசாலைகள் மூலம் பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும் பங்குபற்றி பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன்.
பின்னர் பாரிய நோய் ஒன்றுக்கு முகங்கொடுத்து, அதனால் கால் ஒன்றை இழந்தாலும் கூட விளையாட்டின் மீதான எனது ஆர்வம் குன்றிவிடவில்லை.
இந்நிலையில்தான் அண்மையில் கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற தேசிய பரா மெய்வல்லுநர் போட்டியில் (NPAC -National Para Athletics Championships-2019) 100 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், நீளம் பாய்தல் போன்ற மூன்று போட்டிகளில் முதலிடம் பெற்று மூன்று தங்கப் பதக்கங்களை வென்றேன்.
கால் ஒன்று இல்லையே என்று நான் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. மனதில் திடவுறுதியோடு சவால்களை வெல்வதற்கான தைரியத்தை அல்லாஹ் எனக்குத் தந்துள்ளான்.
நான் தற்போது ரோபோட் இராணுவத்தின் விஷேட பயிற்சிப் பிரிவில் இணைந்து பயிற்சி பெற்று வருவதோடு ஊனமுற்றோருக்கான (REHAB LANKA SPORTS CLUB) றிஹப் லங்கா விளையாட்டுக் கழகத்திலும் அங்கத்தவராக செயற்பட்டு வருகின்றேன்.
Q தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ள நீங்கள் அடுத்த கட்டமாக சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுவதற்கு BLADE FOOT எனப்படும் உயர் ரக செயற்கை கால் ஒன்று கொள்வனவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தீர்கள். அது பற்றி?
பிளேட் பூட் (BLADE FOOT) செயற்கை கால் இல்லாவிட்டால் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டது. குறித்த செயற்கைக் கால் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு சுமார் 13 இலட்சம் தொடக்கம் 15 இலட்சம் ரூபா செலவாகும். அந்தளவுக்கு என்னிடம் வசதி கிடையாது.
குறித்த செயற்கைக் கால் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு வசதி படைத்தவர்கள் அல்லது அரசாங்கம் உதவி செய்தால் நான் தொடர்ந்தும் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடி வெற்றிகளைப் பெற வாய்ப்பாக அமையும்.
Qபுற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
மனதை எந்த சந்தர்ப்பத்திலும் தளரவிடாது சிகிச்சைகளைத் தொடருங்கள். அதிகமதிகம் இறைவனைப் பிரார்த்தியுங்கள்.
vidivelli