ஜனாதிபதி வசமிருந்த அதிகாரங்கள் அனைத்தும் 19 ஆவது சீர்திருத்தம் மூலமாக நீக்கப்பட்ட போதிலும் அந்த அனைத்து விதமான அதிகாரங்களும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கு வழங்கப்பட்டிருப்பதானது ஜனாதிபதி சார்ந்த அரசியலமைப்பு நீக்கப்பட்டு பிதமர் சார்ந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதாகக் குறிப்பிடலாம். ஆனால் இந்த யாப்பின் ஊடாக கிடைக்கும் பொறுப்புக்களை சுமப்பதற்குப் போதுமான பலமில்லாத நிலையிலேயே இன்றைய பாராளுமன்றம் காணப்படுகின்றது. இந்த விடயம் குறித்து வாக்காளர்களான பொதுமக்கள் மாத்திரமன்றி பாராளுமன்றம் கூட அறிந்திராமல் இருப்பது உண்மையில் ஒரு துரதிஷ்டவசமான விடயமாகும்
சட்டவாக்கம், அரச நிதி முகாமை, அரச கருமங்கள் தொடர்பிலான கண்கானிப்பு என்பன பாராளுமன்றத்துக்குரிய பிரதான பொறுப்புக்களாக குறிப்பிடலாம். ஆனாலும் சட்டவாக்கம் எனும் பொறுப்பினை நிறைவேற்றுவதற்கான இயலுமையை முழுமையாகப் போக்கிக் கொண்டதும் சட்டவாக்கம் தொடர்பில் வங்குரோத்து நிலையை அடைந்திருக்கும் நிலையிலுள்ள ஒன்றாகவே தற்போதைய பாராளுமன்றம் காணப்படுகின்றது. இலங்கையில் இவ்வளவு காலமும் நடைமுறையிலிருந்து வந்த உள்ளூராட்சி முறைமையை மாற்றிப் புதியதொரு சட்டத்தினை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக ஒட்டுமொத்த உள்ளூராட்சி முறையும் நகைப்புக்குரிய விடயமாக மாறிய நிலையில் உள்ளது. அதுமாத்திரமன்றி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சம்பளத் தொகையானது இதுவரைகாலமும் வழங்கப்பட்ட தொகையினைவிட இருமடங்குகளாக அதிகரித்து நாட்டுக்குப் பாரியதொரு செலவினையும் உருவாக்குவதாக அமைந்தது. மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பழைய சட்டங்களை நீக்கி புதிய சட்டதிட்டங்களை உருவாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளின் பிரதிபலனாக பழைய சட்டமும் செயலிழந்து புதிய சட்டமும் உருவாக்கப்படாத நிலையில் மாகாண சபைத் தேர்தலையே நடத்தமுடியாத நிலைக்கு உருவாக்கிவிட்டனர். 19ஆவது சீர்திருத்தத்தின் சட்டவாக்கம் ஊடாக பாராளுமன்றம் மேற்கொண்டிருக்கும் முட்டாள்தனமான செயற்பாடுகளுக்கு சிறந்த உதாரணங்களாக மேற்படி விடயங்களைக் குறிப்பிட முடியும்.
நிதி முகாமை மற்றும் பரிசோதனை
பொது நிதியைக் கையாள்தல் எனும் விடயத்தில் இன்றைய பாராளுமன்றமானது வெற்றியடையவில்லை என்பதாகவே குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை தற்போது பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையின் வாயிலில் இருந்துகொண்டிருக்கின்றது. வெளிநாட்டுக் கடன்கள் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட எந்தவிதமான அபிவிருத்தித் திட்டங்கள் மூலமாகவும, பெற்றுக்கொண்ட கடன்களை திரும்பச் செலுத்துவதற்குப் போதுமான வருமானங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கை தற்போது பொருளாதார ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் அரசு தேவையற்ற விடயங்களுக்காக ஊதாரித்தனமாகவே செலவிட்டு வருகின்றது. இதுவரையில் பூரணப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் அரசியல் யாப்பிற்காக மாத்திரம் 136,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருப்பதாக கலாநிதி ஜீ.எல்.பீரிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். தேர்தல் அண்மிக்கும் நிலையில் கம்பெரலிய எனும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக பாரியளவிலான நிதி செலவிடப்படுகின்றது. அது மாத்திரமன்றி வசதியான மதஸ்தலங்களுக்கு கோடிக்கணக்கான நிதி உதவிகள் வழங்கப்படுவதையும் காணமுடிகின்றது.
அரச கருமங்களை கண்காணித்தல் என்பதில் கூட பாராளுமன்றம் வெற்றிகண்டதாகத் தெரியவில்லை. அரச நிறுவனங்கள் வினைத்திறனற்று ஊழல் நிறைந்ததாகக் காணப்படுகின்றன. இந்த நிலையிலிருந்து அரச நிறுவனங்களை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இலங்கையின் குப்பைப் பிரச்சினையை இதற்கான சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம். குப்பை மேடு சரிந்து வீழந்ததில் பல உயிர்ச்சேதங்களையும் பொருட் சேதங்களையும் சந்தித்த பின்னரும்கூட இலங்கையின் குப்பைப் பிரச்சினையானது தீர்க்கமுடியாத பிரச்சினைகயாகவே இன்றளவிலும் காணப்படுகின்றது. மறுபுறும் நாட்டின் வரி வருமானம் சேகரிக்கும் அரச நிறுவனங்கள் ஊழல் நிறைந்ததாக காணப்படுகின்றன. அரசுக்கு வரவேண்டிய வரி வருமானங்களில் 25 வீதமேனும் அரசுக்கு கிடைப்பதில்லை. இதுகுறித்து அரசாங்கமும் அறியாமலில்லை. இந்த தவறை சீர்செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது தொடராக ஏற்படும் வரவு செலவுக் குறையினை நிரப்பிக் கொள்வதற்காக பொதுமக்களின் நுகர்வுப் பொருட்கள்மீது அளவுகடந்து வரி அறவிடும் நடைமுறையினை அரசாங்கம் பின்பற்றி வருகின்றது. அரசாங்கத்தின் வினைத்திறன் இன்மையின் ஊடாக ஏற்படும் பாதகங்கள் பொதுமக்களின் முதுகுகள் மீதே சுமத்தப்படுகின்றன. சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சியுடன் இணைத்துக்கொள்ளும் முறையொன்று நீதிமன்றத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பை மீறிய அந்த தவறை சரிசெய்வதை விடுத்து அந்தப் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்கள் கூட இதுவரையில் மேற்கொள்ளப்டவில்லை.
சரிவடைவின் ஆரம்பம்
அரச தொழில்களுக்காக ஆளும் கட்சியின் தொகுதிகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுகள் அவசியம் என்ற நிலை 1960/-64 ஆண்டுகளில் சிறிமாவோ பண்டாரனாயக்க ஆட்சிக் காலத்தில் ஆரம்பமானது. அமைச்சுக்களின் செயலாளர்கள் எனும் உயர் பதவிகள் முதல் குப்பை அள்ளும் தொழிலாளர் வரையான அனைத்துப் பதவிகளுக்கும் மற்றும் காணி, ஏற்றுமதி போன்ற அனைத்துவிதமான அனுமதிப் பத்திரங்களுக்கும் அரசில்வாதிகளின் சிபார்சுகள் இருப்பது அவசியம் என்ற நடைமுறை இந்தக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சிக்குவந்த ஐக்கிய தேசியக் கட்சிகூட இந்த மோசமான நடைமுறையில்; மாற்றங்களை ஏற்படுத்தாது அதனை அப்படியே பின்பற்றியும் வந்தது.
1970 ஆம் ஆண்டாகும்போது அரச தொழில் பெற்றுக் கொள்வதற்காக மாத்திரமன்றி கிடைத்த தொழில்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் அரசியல்வாதிகளின் சிபாரிசு அவசியம் என்ற நிலை உருவானது. ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்களை அரசியல் காரணங்களுக்காக இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் இந்தக் காலப்பகுதியில் பரவலாக இடம்பெற்றன. அரச காணி கட்டுப்பாட்டுச் சட்டத்திற்கமைய வெளிநாட்டு ஏஜென்சிகளின் கீழிருந்த காணிகள் அனைத்தையும் கூட்டணி அரசு சுவீகரித்து அவற்றை அரச காணிகளாக மாற்றியபோது, ஆளும் கட்சியின் பிரதேச அரசியல்வாதிகளே அந்தந்தப் பிரதேசங்களில் அமைந்திருந்த அவ்வாறான காணிகளின் உத்தியோகப்பற்றற்ற நிர்வாகிகளாகினர். அரசியல்வாதிகளின் ஆசிர்வாதம் இல்லாமல் எதையுமே செய்யமுடியாத அநாதரவான நிலைக்கு பொதுமக்கள் ஆளாகும் நிலை இந்த கொடுமையான முறை மூலமாக உருவாகியிருந்தது. இந்த இக்கட்டான நிலையாது ஆட்சிக்கு வரத்தக்க இரண்டு பிரதான கட்சிகளின் ஒன்றைத் தெரிவு செய்தாலே ஒழிய நிம்மதியாக வாழமுடியாது என்ற நிலைக்கு மக்களை தள்ளிவிட்டது. இந்த முறையானது அரசியல்வாதியின் மக்களை நோக்கிய செயற்பாடுகளில் கூட மாற்றங்கள் ஏற்படக் காரணமாக அமைந்தது.
சரிவடைவு தீவிரமடைதல்
1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி முறை ஆரம்பமானது முதல் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியில் ஏற்பட்ட சரிவு தீவிரமடைய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு இருந்த அரசுரிமை நீக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் விருப்பத்திற்கேற்ப ஆட்டம் போடும் முட்டாள்களாக ஆக்கப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியடைவதற்கு மேற்படி நிலைமைகள் காரணமாக அமைந்ததால் அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக வெளித் தேற்றத்தில் மாத்திரம் கம்பீரமானதும் சொகுசானதுமான வசதிகளுடன் கூடிய புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டு அரச சொத்துக்களை கொள்ளையடிக்கும் அதிகாரங்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன.
ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் ஆளும் கட்சி வசமிருந்த அன்றைய பாராளுமன்றத்தின் ஆயுட் காலத்தினை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தமானது பாராளுமன்றம் அழுகிப் போவதற்கான செயன்முறையில் முக்கியமானதொரு கட்டமாகக் குறிப்பிடலாம். அந்த சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் திகதியிடப்படாத பதவிவிலகல் கடிதமொன்றை ஜனாதிபதி கோரியிருந்தது இந்த பாதகமான செயற்பாட்டின் மற்றுமொரு அங்கமாக குறிப்பிடலாம். அதன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது முட்டாள் தனத்தினை வெளிக்காட்டியவர்களாக திகதியிடப்படாத விலகல் கடிதங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தனர். ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த இத்தகைய செயற்பாடுகள் மூலமாக பாராளுமன்றத்திற்குரிய சட்டபூர்வமான நிலை சிதைவடைந்து அழுகல் நிலை தீவிரமடையத்துவங்கியது.
பாராளுமன்றத்தின் சுயநலம்
பாராளுமன்றத்தின் அரசுரிமை நீக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிந்தனையில் கூட மாற்றங்கள் ஏற்படத்துவங்கின. மக்கள் பிரதிநிதிகளாக அவர்கள் மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகள் குறித்து கவனம் செலுத்தாது நாடு குறித்தும் கவனம் செலுத்தாது தனது அபிலாசைகளை மாத்திரமே கருத்திற்கொண்டு முறைகேடாகப் பொருளீட்டிக் கொள்ளுமளவு பேராசை பிடித்தவர்களாக மாறிவிட்டனர். இவர்களது இத்தகைய ஈடுபாடுகளை ஜனாதிபதிகள்கூட ஆதரித்து ஊக்குவிக்கவும் செய்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது போக்குவரத்துகளுக்காக பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு ஒப்பான கொடுப்பனவு வழங்கும் முறையே உலக நாடுகளில் காணப்படுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களின் போக்குவரத்துத் தேவைகளுக்காக தீர்வையற்ற வாகனமும் அந்த வாகனங்களுக்கான எரிபொருள் செலவுகளும் வழங்கும் நடவடிக்கை எந்த உலக நாடுகளிலும் காணக்கிடைப்பதில்லை. தீர்வையற்ற வாகனங்களை விற்பனை செய்வது அல்லது அதன் உரிமையை வேறு ஒருவருக்கு வழங்குவது சுங்க சட்டங்களுக்கு அமைய குற்றமாகக் கருதப்படல் வேண்டும். இந்த சட்டமானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படாதவாறு ஆரம்ப காலங்களில் ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் தீர்வையற்ற வாகனங்களை விற்பனை செய்து பாரியளவிலான இலாபம் உழைக்க முடியுமான நிலைமைகளை ஏற்படுத்தியும் கொடுத்தனர். தற்போதைய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது காரியாலயங்களை நடாத்திச் செல்வதற்காக மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு கூட வழங்கப்படுகின்றது. அந்த பணத்தின் ஊடாக காரியாலயம் ஒன்றை நடாத்துவது அவர்களுக்கு கட்டாயமானதல்ல. காரியாலயங்கள் நடாத்தாத பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் விரும்புமிடத்து நடத்தாத காரியாலயத்திற்காக ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும். அரச நிதி தொடர்பாக இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் விதிவிலக்கானதா?
அமைச்சர்களது அலுவல்களை நிறைவேற்றுவதற்காக அரச அலுவலர் குழாமொன்று வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்காக பிரத்தியே அலுவலர்களை அரச செலவிலேயேக வைத்திருக்கும் உரிமையும் வழங்கப்பட்டிருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் வரப்பிரசாதங்கள் அடங்கிய தொழிலொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக வழங்கப்பட்ட முறைகேடான செயற்பாடாக இதனை அடையாளப்படுத்தலாம். அமைச்சர்களின் பிரத்தியேக அலுவலக உத்தியோகத்தர்களுக்காக ஒரு வருட சம்பளம் மற்றும் அவர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவுகள் என்பன ஒரு பில்லியன் ரூபா என்ற அளவில் அமையலாம். அமைச்சர்களுக்காக அரச அலுவலர் குழாமொன்று வழங்கப்பட்ட நிலையில் பிரத்தியேக காரியாலயங்களுக்காக அரச நிதியிலிருந்து பாரிய நிதியினை செலவிடுவது எந்த வகையில் நியாயமானதாக அமைய முடியும்?
உத்தியோகபூர்வ இல்லங்களில் வசிக்கும் அமைச்சர்கள் குறித்த உத்தியோ கபூர்வ இல்லங்களில் இருக்கும் அனைவரினதும் மதுபானச் செலவுகள், உணவுக்கான செலவுகள், உபசாரச் செலவுகள் என்பவற்றையும் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நடைமுறையொன்றை அமைத்துக்கொண்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றன. அது எந்த அளவில் உண்மையானது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. இருந்தபோதிலும் இதன் உண்மைநிலை குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். இந்த விடயம் உண்மையாயின் இது ஒரு மோசமான நடைமுறையாகவே கருதப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர்களும் குற்றவாளியும்
புரட்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்த காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக பாதுகாப்புப் படையினரை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. குறித்த பணியில் ஈடுபடும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஆயுதங்களும் அவற்றை இயக்குவதற்கான பயற்சியும் வழங்கப்பட்டிருந்தன. உண்மையிலேயே ஜே.வி.பியின் இரண்டாவது கலவரக் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் இருந்தது என்ற போதிலும் தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டமையானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒருவித முரட்டுத் தோற்றம் உருவாகக் காரணமாக அமைந்தது.
தனது பிரதேசத்திலிருந்த பிரபல்யமான குற்றவாளிகளே பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பாதுபாப்புப் படைக்காக நியமிக்கப்பட்டார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புப் படையில் அங்கம் வகிக்கும் அந்த பிரபல்யமான குற்றவாளிகளுக்கே நவீனரக ஆயுதங்களும் அவற்றை இயக்குவதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டன. இதன் விளைவாக குற்றவாளிகளின் தங்குமிடங்களாகவும் இன்னும் சில குற்றவாளிகளின் சித்திரவதைக் கூடங்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மாறத்துவங்கின. பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினைக் காரணம் காட்டி மக்கள் கொல்லப்பட்டதுடன் தனது எதிரிகளை மாத்திரமன்றி அரசியல் ரீதியான எதிரிகளையும் தீர்த்துக்கட்டுவதற்காக இதனை ஒரு சந்தர்ப்பமாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திக்கொண்டனர். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கொலை நடவடிக்கைகளில் நேரடியாகவே தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டனர். சிலபோது அவர்களால் அல்லது அவர்களது கைகளாலேயே மக்கள் கொல்லப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அவர்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையின் வசமே இருந்தமையினால் பாதுகாப்புப் படையில் அங்கம் வகிக்கும் குற்றவாளிகள் புரிகின்ற குற்றச்செயல்கள் தொடர்பில் நிபந்தனைகளே இல்லாத அடிப்படையில் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது. இந்த அன்யோன்ய தொடர்பு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே பரஸ்பரம் புரிந்துணர்வு என்பவற்றுடன் கூடிய உறவேற்பட்டது.
இரண்டாவது புரட்சியின் பின்னரான காலப்பகுதியில் எல்.ரி.ரி.ஈ. கலவரம் இருந்து வந்தமையினால் இந்தப் பாதுகாப்பு நடைமுறையானது தொடராக செயற்படுத்தப்பட்டது. இந்நிலை கூட பாராளுமன்ற உறுப்பினர்களின் தன்மைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது. பாராளுமன்ற உறுப்பினர்கள், குற்றவாளிகள் என்போரை வெவ்வேறாக அடையாளம் காண முடியாத அளவிற்கு அவர்களது நடையுடை பாவனை என்பவற்றில்கூட ஒரேவிதமான தோற்றம் ஏற்படத்துவங்கியது. மொத்தத்தில் ஒரேவிதமாக உண்டு, உடை அணிகின்ற இருவராக மாறிவிட்டனர்.
குற்றவாளிகளுடனான பாராளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய உறவு சில பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தையில்கூட மாற்றங்களை ஏற்படுத்தியது. குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் போதைப்பொருள் வியாபாரிகளிடம் கப்பம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் என உருவாவதற்கு இது காரணமாக அமைந்தது.
நாட்டுக்கு அவசியாமன மாற்றம்
பாரதுரமான குற்றங்கள் புரியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனை தடுக்கின்ற விடயங்கள் ஏராளமாகக் காணப்படுவதுடன், அவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் முடிவுக்கு வராமல் இழுபடுகின்ற நிலையும் காணப்படுகின்றது. அந்த அடிப்படையில் பாராளுமனற உறுப்பினர்களில் சிறைப்படுத்தப்பட்ட ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக துமிந்த சில்வாவை மாத்திரமே குறிப்பிடமுடிகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் 29 உறுப்பினர்களுக்கு எதிராக விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழங்குகளின் எண்ணிக்கை 50 இலும் அதிகமாகவே இருப்பதாகத் தெரிகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் தமது பெயரில் அல்லது வேறு ஒருவரின் பெயரில் அரசுடன் வியாபாரத்திலீடுபட்டு வருகின்றனர். அரச காணிகளை வைத்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவிலே இருக்கத்தான் செய்கின்றனர். நேரடியாக அல்லது வேறுவிதமாக மதுபானத் தயாரிப்பு நிலையங்களை நடாத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகளவில் இருக்கின்றனர். இது தொடர்பில் பாராளுமன்றத்தினுள்ளும் சிறியளவில் பேசப்படுவதாக அறியக் கிடைக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபாரத்தில் ஈடுபடுவதானது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட வேண்டியதும், பாராளுமன்றத்தில் உறுப்பினராக அமர்ந்திருந்த காலப்பகுதி கணக்கிடப்பட்டு அந்த நாட்களின் எண்ணிக்கைக்கேற்ப தண்டப்பணம் அறவிடப்படக்கூடியதும், குறிதத் காலமொன்றிற்காக குடியுரிமை பறிக்கப்பட வேண்டியதுமான மிகவும் பாரதூரமானதொரு குற்றமாக கருதப்பட வேண்டும். இந்தக் குற்றங்கள் மறைமுகமாகவன்றி வெள்ளிப்படையாகவே செய்யப்பட்டு வந்த போதிலும் பாராளுமன்றம் இதுகுறித்து பாராமுகமாகவே இருக்கும் வகையிலானதொரு நடைமுறையைப் பின்பற்றி வருகின்றதேயன்றி, ஒருபோதும் இதுகுறித்து கவனம் செலுத்தி இந்த நிலையை சரிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
அரசாங்கத்தினால் நிர்வகிக்கின்ற பிரதான நிறுவனமாகிய பாராளுமன்றத் திலேயே உச்ச அளவில் ஊழல் இடம் பெறுவதாயின் அடுத்த நிறுவனங்களில் நிலவுகின்ற ஊழல்களை எவ்வாறுதான் கட்டுப்படுத்த முடியுமாக இருக்கும்?அரசாங்கத்துடன் வியாபாரம் செய்த குற்றத்திற்காக காலி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அல்பர்ட் சில்வாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீதிமன்றத்தினால் பறிக்கப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட எல்பர்ட் சில்வாலை கம்புறுபிடிய தொகுதிக்கு சிட் உறுப்பினராக நியமித்தார். இந்த சம்பவம் நடந்து 20 வருடங்களின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தனது மாமனார் செய்த அதே செயலை செய்யலானார். நீதிமன்றத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட ராஜித சேனாரத்னவை தேசியப் பட்டியலூடாக பாராளுமன்ற உறுப்பினராக்கினார். அரசாங்கத்துடன் வியாபாரங்களை மேற்கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசியல் தலைவர்கள் பாதுகாக்கின்றனர் என்பதல்லவா இதன் ஊடாக தெளிவாகின்றது?
நாட்டின் பிரதான அரசியல் நிறுவன முறையாக கருதப்பட முடியுமான பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற முறைமைகள் என்பன கடுமையாக பழுதடைந்திருக்கும் நிலையில் இந்தப் பாதகமான நிலையை நெறிப்படுத்துவதற்காக பாராளுமன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் அதனுடன் பாராளுமன்றத்தின் இந்த விவகாரத்தை பாரதூரமான நிலையாக கருதி செயற்படுவதற்காக நீதிமன்றம்கூட முன்வராவிட்டால் இந்த மோசமான நிலையை சீர்செய்வதற்கான முறைதான் என்னவாக இருக்கும்?
அரசியல்வாதிகள் மாத்திரமன்றி நாட்டு மக்கள்கூட அவசியமான மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது தேர்தல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் துரதிஷ்டமான நிலையை எமது நாடு எதிர்கொண்டிருக்கின்றது. குப்பை மேடுகளுக்கு மத்தியில் வாழும் மனிதன் அந்த குப்பைகளிலிருந்து வரும் துர்நாற்றத்தினைத் தாங்கிக் கொள்வதற்காக தன்னை பழக்கப்படுத்திக் கொண்டு வாழ்வது போன்று நாட்டில் உருவாகியிருக்கும் அரசில் மாசடைவுகளைப் பொறுத்துக்கொண்டு வாழ்வதற்கு நாட்டின் பொதுமக்கள் பழகிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. நாட்டுக்குத் தற்போது தேவைப்படுவது சிறியதொரு அரசியல் மாற்றமல்ல, மாறாக சாக்கடையாக மாறியிருக்கும் அரசியல் முறையில் ஒரு மாற்றத்தையே நாடு இன்று வேண்டிநிற்கின்றது. அது தானாக வந்து சேர்ந்துவிடப்போவதில்லை மக்களாலேயே அது வெற்றிகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
விக்டர் ஐவன்
தமிழில்: ராஃபி சரிப்தீன்
vidivelli