இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 07.09.2019 அன்று இடம்பெற்ற மஜ்லிஸ் அஷ்ஷூரா கலந்துரையாடல் நிகழ்ச்சியில் “அல்குர்ஆன் வன்முறையை தூண்டுகிறதா?” எனும் தலைப்பில் அண்மையில் வெளியிட்ட நூல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நூலாசிரியர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர் அளித்த பதில்களில் தொகுப்பு வருமாறு:
நேர்காணலும் தொகுப்பும்: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல்
Q நீங்கள் இந்த புத்தகத்தை எழுதுவதற்குப் பின்புலமாக அமைந்த காரணிகள் யாவை?
பிரதானமாக மூன்று காரணிகள் உள்ளன.
1. ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களை நடத்தியவர்கள், தமது செயலை நியாயப்படுத்துவதற்கு அல்குர்ஆனையே ஆதாரமாகக் காட்டினார்கள்.
2. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இஸ்லாம் பற்றிய தெளிவு இல்லாதவர்கள், இத்தகைய பிரசாரங்களால் குழம்பிப்போயிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தெளிவை வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
3. இந்த நிகழ்வுக்குப் பின்னர் முஸ்லிம் அல்லாதவர்கள் மிகத் தவறான புரிதலின் காரணமாக இஸ்லாத்தை விமர்சித்தார்கள். ஆயுதப் போராட்டம் தொடர்பாக குர்ஆனில் வந்திருக்கின்ற வசனங்களை எடுத்துக் காட்டி, குர்ஆன் ஆயுதப் போராட்டத்தை தூண்டுகிறது என்று அவர்கள் கூற ஆரம்பித்தார்கள். எனவே, அவர்களுக்கும் தெளிவு தேவைப்படுகிறது. இவர்களது இந்த சந்தேகத்தை நீக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த மூன்று காரணிகளும் தான் இந்த நூலை எழுதுவதற்கு தூண்டுதலாக அமைந்தன.
Qஇந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் தொடர்பாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
இந்தப் புத்தகம் 5 தலைப்புகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. அவற்றைச் சுருக்கமாக விளக்கலாம் என நினைக்கிறேன்.
1. அல்குர்ஆனை ஆய்வு செய்யும் சரியான முறை:
அல்குர்ஆனை நாம் ஆய்வு செய்வதற்கு எத்தகைய ஆய்வு முறை அல்லது வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி ஆரம்பத்தில் அங்கு ஆராயப்படுகின்றது. அல்குர்ஆன் உலகிலுள்ள நூல்களைப் போன்ற ஒரு நூலல்ல. அது விடயதானங்களைக் கையாளும் விதம் வித்தியாசமானது. ஸூராக்களுக்கு இடப்பட்டுள்ள தலைப்புக்களை வைத்து உள்ளடக்கத்தை அறிய முடியாது. உதாரணமாக, பகரா (மாடு) என்று ஸூராவுக்கு தலைப்பிடப்பட்டிருந்தாலும், அங்கு ஒரு சம்பவம் மாத்திரமே மாடு பற்றியதாக அமைந்திருக்கிறது.
எனவே, ஒரு குறிப்பிட்ட தலைப்பு பற்றிய அல்லது விடயதானம் பற்றிய அல்குர்ஆனின் நிலைப்பாட்டை, சிந்தனையை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாக இருந்தால், உதாரணமாக யுத்தம் பற்றிய அல்குர்ஆனின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டுமாக இருந்தால், ஓர் ஆயத்தை அல்லது ஒரு ஸூராவை மாத்திரம் வைத்து புரிந்துகொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட தலைப்பு பற்றிய தெளிவைப் பெற பல ஸூராக்களை வாசித்து விட்டே முடிவுக்கு வரவேண்டும். யுத்தம் பற்றி படிக்க யுத்தம் சம்பந்தமாக வந்திருக்கின்ற எல்லா வசனங்களையும் திரட்டிப் படித்துப் பார்த்துத் தான் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு தற்காலத்தில் ‘தப்ஸீர் மவ்ழுஈ’ என்று நவீன கால அறிஞர்கள் கூறுவார்கள்.
2. அல்குர்ஆன் இறங்கிய சூழமைவு:
அல்குர்ஆன் எல்லாக் காலத்துக்குமுரியது என்பது உண்மைதான். இருந்தாலும், அல்குர்ஆனின் சில வசனங்கள் சூழலைப் பொறுத்து இறங்கியிருக்கின்றன. சூழமைவுகளுக்கேற்ப, மனிதர்களுக்கு ஏற்ப குர்ஆனிய வசனங்கள் இறங்கின. உதாரணமாக மதீனாவில் வாழ்ந்த யூதர்கள், மக்காவில் வாழ்ந்த நிராகரிப்பாளர்களான குறைஷிகள் ஆகியோரது நிலைப்பாடுகளைக் கவனத்திற்கொண்டு வசனங்கள் இறக்கப்பட்டன. எனவே, இறங்கிய சூழலையும் மனிதர்களையும் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
இந்த இரண்டு முறைகளையும் கவனிக்காமல் குர்ஆனை விளங்க முயற்சிப்பது தவறுகளை ஏற்படுத்தும். இது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உண்மையாக இருக்கிறது. அல்குர்ஆனின் ஒருசில வசனங்களை மாத்திரம் வாசித்துவிட்டு, முடிவுகளுக்கு வருவது பலர் விடுகின்ற தவறாகும்.
3. போர் பற்றிய குர்ஆனியப் பார்வை:
நூலின் அடுத்த தலைப்பு போர் சம்பந்தமான குர்ஆனுடைய பார்வை பற்றியதாகும். போர் பற்றிய அல்குர்ஆனின் சிந்தனையைப் புரிந்துகொள்வதற்கு முன்னர் வேறு சில விவகாரங்களில் குர்ஆன் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியமாகும். அந்த விவகாரங்கள் பற்றிய அல்குர்ஆனின் கண்ணோட்டத்தின் பின்னணியில் தான் யுத்தம் பற்றிய அதன் சரியான நிலைப்பாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
உதாரணமாக, மனிதனைப் பற்றியும், மனித சுதந்திரம் பற்றியும் குர்ஆன் என்ன சொல்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மனிதனுக்கு செயல் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது என்று குர்ஆன் கூறியிருந்தால் கண்டிப்பாக யுத்தம் பற்றிய கோட்பாடு அதனுடைய வெளிச்சத்தில்தான் அமைய வேண்டும். குர்ஆன் தனது கருத்துக்களை பகுத்தறிவு ரீதியாக பேசியிருப்பதால் ஆயுதத்தைக் காட்டி பேசியிருக்கும் எனக் கூறமுடியாது. நீ ஏற்றுக்கொள்ளாவிட்டால் உன்னை கொலை செய்வேன் என்று குர்ஆன் பேசவில்லை. அப்படிப் பேசியிருந்தால் பகுத்தறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் அது கருத்துக்களை முன்வைத்திருக்க முடியாது. எனவே, தர்க்க ரீதியாக இதனை புரிந்துகொள்ள வேண்டும். யுத்தம் சம்பந்தமாக ஆரம்பத்தில் இறக்கப்பட்ட ஆயத்துக்களை மாத்திரம் நாம் ஆய்வுசெய்து பார்த்தால் கூட, தற்காப்பு யுத்தத்தைத்தான் அல்குர்ஆன் குறிப்பிட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
4. பிழையாக புரியப்பட்ட வசனங்களுக்கான சரியான விளக்கம்:
அடுத்ததாக, பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட வசனங்கள் என்ற தலைப்பில், 23 வசனங்கள் எடுக்கப்பட்டு, அவை இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன. பலர் சரியாக விளங்கிக் கொள்ளத் தவறிய அல்லது மயக்கம் ஏற்பட்டுள்ள வசனங்கள், பொதுமைப்படுத்தப்பட முடியாதவை என்பதை அங்கு விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு வசனத்தையும் எடுத்து அந்த அந்த வசனம் இறங்கிய சூழலைத் தொடர்புபடுத்தி விளக்கம் தரப்பட்டுள்ளது. இஸ்லாம் தற்காப்பு யுத்தத்தைத்தான் அனுமதிக்கிறது என்பதும் சமாதான சகவாழ்வை அடைவதுதான் குர்ஆனுடைய நோக்கம் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. யுத்தம் சம்பந்தமான வசனங்களில் கூட சமாதானம் பற்றிப் பேசப்பட்டுள்ளது.
5. அல்குர்ஆனில் ஏன் போராட்ட வசனங்கள்:
நூலின் அடுத்த பகுதியில் குர்ஆனில் ஏன் போராட்டம் சம்பந்தப்பட்ட வசனங்கள் வந்திருக்கின்றன என்ற கேள்விக்கான பதில் உள்ளது. இறை பாதையில் நீங்கள் மரணித்தால் உங்களுக்கு சுவர்க்கம் கிடைக்கும்; உங்களுக்கு நன்மை இருக்கிறது என்றெல்லாம் சொல்லக்கூடிய வசனங்கள் ஏன் வந்திருக்கின்றன என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கான நியாயங்களை கடைசி அத்தியாயத்தில் விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
அரபு சமூகத்தினர் இஸ்லாம் வருவதற்கு முன்னர் யுத்தப் பிரியர்களாக இருந்தார்கள். இரத்தம் ஓட்டுவது அவர்களுடைய வாழ்வில் சாதாரணமான ஒன்றாக இருந்தது. கொள்ளையடிப்பது, அடிமைகளாக பிடித்துக்கொள்வது, செல்வங்களை அபகரிப்பது, கோத்திரப் பெருமையைக் காப்பாற்றுவது போன்ற காரணங்களுக்காகத்தான் போராடினார்கள். மாறாக ஒரு சிந்தனைக்காகப் போராடியதைக் காண முடியாது.
எனவே, நீங்கள் ஒரு கொள்கைக்காக போராட வேண்டுமென்ற கருத்தை அல்குர்ஆன் அங்கு வலியுறுத்தியது. உங்களுடைய போராட்டம், நோக்கம் இப்படித்தான் அமைய வேண்டும் என்பதை அதிகமாகச் சொல்ல வேண்டியேற்பட்டது. முஸ்லிம்கள் போராடிய சந்தர்ப்பங்களில் சிறுபான்மையினராகத்தான் இருந்தார்கள். சொற்ப தொகையினர் இருந்தார்கள். யுத்தத்திற்கு போவதற்கு அவர்களுக்கு ஒரு தயக்கம் இருந்தது. எனவே, சின்னத் தொகையாக இருந்தாலும் நீங்கள் போராடுங்கள் என்று தூண்டுகின்ற வசனங்கள் அங்கு இடம்பெற வேண்டிய தேவை ஏற்பட்டது.
இந்த நூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அல்லது சிந்தனைகள் நவீனகால அறிஞர்களால் முன்வைக்கப்பட்டன என்று நினைத்து விடக்கூடாது. இமாம் சுப்யான் அத்தௌரி அவர்கள் யுத்தங்கள் தற்காப்புக்காகத்தான் அனுமதிக்கப்படுகின்றன என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். இமாம் இப்னுல் முபாரக் அவர்கள் யுத்தம் ஸஹாபாக்கள் மீது தான் கடமையாக்கப்பட்டிருந்தது; பின்னால் வந்தவர்கள் மீது கடமையானதல்ல என்று கூறியிருக்கிறார்கள்.
Qஇலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள் தீவிரவாத, கடும்போக்கு சிந்தனைகள் உருவாகுவதற்கு ஏதுவான எத்தகைய காரணிகள் இருக்கின்றன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
சொற்கள், மொழிபெயர்ப்புக்களை வைத்து முடிவுக்கு வருதல் 21.04.2019 இல் நடந்த இந்த மிலேச்சத்தனமான நிகழ்வு அதிர்ச்சியைத் தந்தது. இப்படியான ஒரு நிலை முஸ்லிம் சமூகத்தில் இருக்கிறதா என்பதை அறிந்தபோதுஆச்சரியமாகத் தான் இருந்தது. குர்ஆனை விளங்குவதற்கும், ஸுன்னாவை விளங்குவதற்கும் பிரத்தியேகமான முறைமைகள் இருக்கின்றன. சொல்லை மையப்படுத்தி, ஆயத்தை மையப்படுத்தி விளங்க முயற்சிப்பது தவறுகள் இடம்பெறுவதற்கான காரணமாக அமைந்து விடுகின்றது. சிலர் இஸ்லாமியர்களாக வாழ வேண்டும் என்ற உணர்வு இருக்கின்றபோது, குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புகளை எடுத்து வாசிக்கிறார்கள். மொழிபெயர்ப்புகளை வைத்து மட்டும் முடிவுகளுக்கு இவர்கள் வருகிறார்கள். தாமாகப் புரிந்துகொள்ள முடியுமென்று நினைத்து வாசிக்க ஆரம்பித்தவுடன் பல பிழையான முடிவுகளுக்கு அவர்கள் வருகிறார்கள். உரிய முறைமையைப் பின்பற்றும்போது இந்தப் பிழைகளைத் தவிர்க்கலாம்.
இமாம் ஷாபிஈ அவர்கள் இஸ்லாமிய சட்டத்துறை எவ்வாறு பார்க்கப்பட வேண்டும் என்பதற்காக ‘அர்ரிஸாலா’ என்ற தனது புத்தகத்தை எழுதினார்கள். அது சட்ட ஆய்வுக்கான முறைமை (Methodology)யைக் கூறுகிறது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இஸ்லாத்தை பின்பற்ற வேண்டுமென்ற உணர்வு இருக்கும் பொழுது, சிலர் சொற்களை மையப்படுத்தி விளங்க முயற்சித்தால், மொழிபெயர்ப்புகளில் தங்கியிருந்தால் அத்தகையவர்கள் பிழையான முடிவுகளுக்கு வருவார்கள்.
வெளிநாட்டுத் தாக்கம்:
போகோ ஹராம், அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற குழுக்கள் பல்வேறுபட்ட அரசியல், பொருளாதார, சூழல் பாதிப்புகளால் உருவாகியிருக்கின்றன. அவர்கள் தமது போக்கை நியாயப்படுத்த குர்ஆனை ஆதாரமாகக் கொள்கிறார்கள். எமது நாட்டைப் பொறுத்தவரையில் அப்படியான தேவை கிடையாது. அத்தகைய ஒரு சூழலும் இல்லை. இஸ்லாத்தை பின்பற்ற வேண்டுமென்ற தீவிர உணர்வு கொண்ட முஸ்லிம்கள் சொல்லை மையப்படுத்தி விளங்க முற்பட்டபோது, அந்த ஆயுதக் குழுக்களுடைய சிந்தனைத் தாக்கமும் இவர்களில் ஏற்பட்டது. முகநூல் மற்றும் இணையத்தளங்கள் அல்லது உரைகள் வாயிலாக இவர்களுக்கு அவர்களோடும், அவர்களது சிந்தனைகளோடும் தொடர்பு ஏற்பட்டது. இந்தப் பின்னணியில்தான் அவர்கள் இந்த சிந்தனைக்குப் போகத் துவங்கினார்கள்.
‘குப்ர்’ பற்றி சிந்தனை:
‘குப்ர்’ பற்றிய சிந்தனைக் கட்டமைப்பு சீர்படுத்தப்பட வேண்டும். அதாவது, முஸ்லிம் அல்லாதவர்களைப் பற்றிய முஸ்லிம்களின் சிந்தனை கட்டமைப்பு, அதாவது முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்லிம்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது மிக முக்கியமான விடயமாகும். முஸ்லிமல்லாதவர்களை எப்படிப் பார்க்க வேண்டுமென்ற விடயத்தில் பலருக்கு நல்ல புரிதல் கிடையாது.
எனவே, இந்த தீவிரவாத பிரிவினர் ஏதாவது முஸ்லிம் அல்லாதவர்களை பற்றி கூறிவிட்டால், அவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்கின்ற நிலையில்தான் பொதுமக்கள் இருக்கிறார்கள்.
உதாரணமாக, ‘காஃபிர்கள்’ என்ற குர்ஆனிய வார்த்தையை ‘நிராகரிப்பவர்கள்’ என்று மொழிபெயர்க்கிறார்கள். யுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கின்ற பொழுது காஃபிர் என்ற சொற்பிரயோகம் இருக்கிறது. ஸூரா பகராவில் வருகின்ற வசனம் இதற்கு நல்ல உதாரணம். அதாவது,
“நிச்சயமாக காஃபிர்களை நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான். இன்னும் அவர்களின் பார்வைமீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.”
இந்த வசனத்தில், வந்துள்ள ‘கஃபரூ’ என்ற சொல்லை ‘நிராகரிப்பாளர்கள்’ என்று பொதுமைப்படுத்தி மொழிபெயர்த்தால், இஸ்லாத்துக்கு வெளியே இருக்கும் எவரும் இஸ்லாத்திற்குள் வரமாட்டார்கள்; வருவதற்கான வாய்ப்பே கிடையாது. காரணம் அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களில் முத்திரையை போட்டு விட்டான் என்ற முடிவுக்கு வரவேண்டி வரும்.
நிராகரிப்பாளர்கள் என்று அந்த வசனத்தை மொழிபெயர்த்தது பெரிய தவறாகும். யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட வசனங்களை இப்படி மொழிபெயர்ப்பது பிழையாகும். ஆங்கில மொழிபெயர்ப்புக்களிலும் இந்த தவறு விடப்பட்டிருக்கிறது. அபுல் கலாம் ஆசாத், முஹம்மது அஸத் போன்ற சில மொழிபெயர்ப்பாளர்கள் மாத்திரம் மிக நுணுக்கமாக இத்தகைய சொற்களை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
இந்த வசனங்களை ஓதிக்காட்டி யாராவது ஒருவர் உபன்னியாசம் செய்தால் அவருக்குப் பின்னால் மக்கள் போவார்கள். அவர் இறுக்கமான சிந்தனை கொண்டவராக இருந்தால் நிலை மோசமாகிவிடும். எட்டு, பத்து வருடங்களாக இத்தகைய சிந்தனைப்போக்கு முஸ்லிம் சமூகத்துக்குள் இருந்துதான், கடைசியில் ஆயுதப் போராட்டத்துக்குள் சிலரைத் தள்ளி இருக்கிறது என்று சொல்ல முடியும். தனியாக ஒரு காரணத்தை வைத்து மட்டும் நாங்கள் பார்க்க முடியாது.
Qஇந்த நாட்டில் சமாதான சகவாழ்வை கட்டியெழுப்ப என்ன முயற்சிகளில் நாம் இறங்க வேண்டும்?
பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும்:
இந்த வினாவுக்கு விளக்கமாக பதில் முன்வைக்கப்பட வேண்டும். ஆனால், சுருக்கமாக சொல்கிறேன். சமூகங்களுக்கு மத்தியில் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். மத ரீதியான பிரிவுகளும் இன ரீதியான பிரிவுகளும் இந்த நாட்டில் இருக்கின்றன.
இந்த ஒவ்வொரு சாரார் பற்றியும் ஏனையோர் புரிந்திருக்க வேண்டும். இந்தப் புரிந்துணர்வு ஏற்பட்டு விட்டால் இந்த சர்ச்சைகளை நாங்கள் தவிர்க்க முடியும். ‘ நீங்கள் பரஸ்பரம் புரிந்து கொள்வதற்காகவே இனங்களாகவும் கோத்திரங்களாகவும் உங்களை நாங்கள் அமைத்தோம்’ என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
மத்ரஸாக்கள், பள்ளிவாசல்கள் என்றால் என்ன என்ற தெளிவு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இல்லை. இவை போன்ற சந்தேகங்களும் கேள்விகளும் அவர்களுக்கு மத்தியில் இருக்கின்றன. அந்த சந்தேகங்களை நாங்கள் நீக்கவேண்டும். கௌதம புத்தர் எத்தகைய கருத்துக்களைக் கூறியிருக்கிறார் என்பதை நாங்களும் பெற்றிருக்க வேண்டும். இவை தெளிவு பெறுவதற்கு வழிவகுக்கும்.
கூட்டு வேலைத்திட்டம்:
அடுத்ததாக கூட்டு வேலைத்திட்டத்திற்கு நாம் வருவது நல்லது. இங்கு நாம் ஒன்று சேர்ந்து வேலை செய்யலாம் எனப்படும் விவகாரங்களைக் கண்டறிந்து, அவற்றில் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும். முஸ்லிம் சமூகம் மூடுண்ட நிலையில் இருந்து வெளியே வரவேண்டும். மத்ரஸா, ஸக்காத் என இப்படியாக பல நிறுவனங்கள் எமக்கு மத்தியில் இருக்கின்றன. அவை மூடுண்ட நிலையில்தான் இருக்கின்றன. மைய நீரோட்டத்தில் கலப்பதற்கான வேலைத் திட்டங்கள் வேண்டும். தற்போது அனைத்தும் எமது சமூகத்தையும் மதத்தையும் மையப்படுத்தியதாகவே இருக்கின்றன.
உதாரணமாக வறுமை ஒழிப்புத்திட்டம். பொதுவாக இந்த நாட்டுக்கான வேலைத்திட்டமாக அது விரிவாக்கப்படவில்லை. நமது வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் வெளிப்படையானதாக மாற்றப்பட வேண்டும். அதற்கு ஒரு நிறுவனம் இல்லை. எனவே, முஸ்லிம் சமூகம் தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கான பல்வேறு வாய்ப்புகள் இருந்தும்கூட, நாம் அவர்களோடு இருப்பது குறைவாக இருக்கிறது. எனவே, மூடிய நிலையில் இருந்து வெளிவந்து மைய நீரோட்டத்தில் கலப்பதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும். சகவாழ்வு புரிந்துணர்வு என்பவற்றைக் கொண்டு செல்வதற்கு இத்தகைய நடவடிக்கைகள் எமக்கு உந்து சக்திகளாக அமையலாம்.
vidivelli