அது ஒருவார நாளின் மாலை வேளை. கொழும்பு நகர்ப்புறத்தின் ராஜகிரியவில் அமைந்துள்ள சத்தர்மராஜிக விகாரை அது. விகாரை என்பதன் விளக்கம் குருமார்கள் வசிக்கும் விடுதி என்பதாகும். என்றாலும் இந்தக் கட்டடம் பொதுபல சேனாவின் காரியாலயமாக உபயோகப்படுத்தப்பட்டது. அவ் அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் இங்கேயே தங்கியிருந்தார்.
அந்த வளாகத்தின் முற்றத்தில் இளைஞர்கள் குழுவொன்று கதிரைகளையும், மேசைகளையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்து. அவர்கள் சமையலுக்கான செயல்விளக்கத்தை நடாத்துவதற்கான ஏற்பாடுகளில் இருந்தார்கள்.
‘இவர்கள் கிராமப்புற சிங்கள இளைஞர்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்கு எவருமில்லை. நாங்கள் இவர்களுக்கு உதவி செய்கிறோம். அவர்களது வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும் எங்களால் இயன்ற உதவிகளைச் செய்கிறோம்’ என பொதுபல சேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே தெரிவித்தார்.
‘சிங்கள வர்த்தகர்களுக்கு உதவி செய்வதற்காகவே நான் ஞானசார தேரருடன் ஒன்றிணைந்தேன். ஆனால் அதன் பின்னர் பொதுபல சேனா ஹலால் விவகாரம் உட்பட பல்வேறுபட்ட விடயங்களில் கவனத்தைச் செலுத்தியது.
சிங்கள வர்த்தகர்கள் உற்பத்திப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக எம்மிடம் முறையிட்டார்கள். அவர்கள் ஹலால் சான்றிதழ் பெற்றுக் கொள்ளா விட்டால் அவர்களது உற்பத்திப் பொருட்கள் உணவுச் சந்தையில் நிராகரிக்கப்படும். நாங்கள் சம்பிரதாய முஸ்லிம்களிடம் இது பற்றி வினவினோம்.
‘இந்த ஹலால் சான்றிதழ் தேவையற்றது. எது ஹலாலானது, எது ஹலாலற்றது என்பதை பகுத்தறிய எம்மால் முடியும். தேவையற்ற சிக்கல்களை நாம் எதிர்கொள்ள விரும்பவில்லை’ என்றார்கள்.
‘தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்’ என்று கூறி அவர் தொடர்ந்தார். ‘பிரச்சினைகளை உருவாக்குவதற்கு நாம் பொதுபல சேனா அமைப்பை உருவாக்கவில்லை. சிங்கள மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே ஆரம்பித்தோம். சிங்களவர்கள் உலகளாவிய ரீதியில் சிறுபான்மையினர். நாங்கள் இப்போது வஹாப்வாத அடிப்படைவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்காகவே போராடுகிறோம்’ என்றார்.
Q நீங்கள் பௌத்த குருவாக எவ்வாறு உருவானீர்கள்?
நான் 1975 ஆம் ஆண்டு காலியைச் சேர்ந்த கலகொடாத்த என்ற குக் கிராமத்தில் பிறந்தேன். 6 ஆம் தரம் வரை கிராமத்துப் பாடசாலையிலே பயின்றேன். அதன் பிறகு மதகுருவாக மாறவேண்டும் என்று தீர்மானித்து பயிற்சிகள் பெற்றேன். பயிற்சிகளின் பின்பு இளம் மதகுருவாக 1989 ஆம் ஆண்டு எமது ஊரிலுள்ள வனவாச சங்க ஆலயத்தில் இணைந்து மேலும் பயிற்சிகள் பெற்றேன்.
மேலும் பாளி மற்றும் சன்ஸ்கிறித மொழிகளைப் பயின்றேன்.
1996 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்து களனி பல்கலைக்கழகத்தில் எனது கல்வியைத் தொடர்ந்தேன்.
1999 ஆம் ஆண்டில் பௌத்த மதகுருமார்களுக்கான கல்வி நிலையத்தில் சேர்ந்து பௌத்த மதகுருமார்களுக்கு கல்வி போதித்தேன்.
Q ஏன் நீங்கள் கற்பித்தலை நிறுத்திக் கொண்டீர்கள்?
நான் என்னை எனது நாட்டுக்காக அர்ப்பணம் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தேன். இந்தக்காலத்தில் தமிழ் விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான இயக்கங்களுடன் இணைந்திருந்தேன். இந்தக் கால கட்டத்தில்தான் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழ் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வொன்றினை வழங்குவதற்குத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரால் இந்தத் திட்டத்தினை முன்னெடுக்க முடியாமற் போனது. பௌத்த குருமார்களின் எதிர்ப்பே இதற்குக் காரணமாகும்.
2000 ஆம் ஆண்டு சிஹல உறுமய என்றோர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. நான் அக்கட்சியின் மதகுரு பிரதிநிதியாக இணைந்தேன். கோட்டே பகுதிக்கே பிரதிநிதியாகச் சேர்ந்தேன்.
சிஹல உறுமய கட்சிக்குள் பிரச்சினைகள் உருவானதால் கட்சியின் மதகுருமார் சிலர் ஒன்றிணைந்து ஜாதிக சங்க சம்மேளனம் (JSS) என்றோர் அமைப்பை உருவாக்கினார்கள். இதுவொரு பலம் வாய்ந்த தேசிய இயக்கமாக மாற்றம் கண்டது. இதன் உதவிச் செயலாளராக நான் பதவி வகித்தேன்.
2004 இல் ஜாதிக சங்க சம்மேளனத்தின் பிரதான உறுப்பினர்கள் ஜாதிக ஹெல உறுமய (JHU) என்றோர் அரசியல் கட்சியை உருவாக்கினார்கள். அதன் பின்பு நான் சில குருமார்களை இணைத்துக்கொண்டு பொதுபலசேனா அமைப்பினை உருவாக்கினேன். இப்போது ஜாதிக சங்க சம்மேளனம் ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினர் ரதன தேரரினால் கையாளப்படுகிறது. இதனுடன் நான் தொடர்புபடவில்லை.
Qஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் பொதுபல சேனா அமைப்புக்குமிடையில் அடிப்படை வேறுபாடுகள் உள்ளனவா?
ஜாதிக ஹெல உறுமய (JHU) தற்போது ஓர் அரசியல் கட்சியாக செயற்படுகிறது. ஆனால் பொதுபல சேனா ஒரு அரசியற் கட்சியல்ல. பொதுபல சேனாவை ஒரு தேசிய இயக்கம் எனக் கூறலாம்.
Q நீங்கள் சிறுவராக இருந்த காலத்தில் பௌத்தரல்லாத நண்பர்கள் அல்லது பௌத்தரல்லாத ஆசிரியர்கள் உங்களுக்கு இருந்தார்களா?
இல்லை. அதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. நான் முழுமையான ஒரு பெளத்த கிராமத்திலே பிறந்து வளர்ந்தேன். கிராமத்தில் பள்ளிவாசல்கள் இருக்கவில்லை. சூழ முஸ்லிம்கள் எவரும் இருக்கவில்லை. அங்கே ஒரு கத்தோலிக்க ஆலயம் அமைந்திருந்தது. அதனால் அக்காலத்தில் எனக்கு பெளத்தரல்லாத நண்பர்கள் இருக்கவில்லை.
Qபுத்தரின் போதனைகளில் எது உங்களுக்கு மிகவும் முக்கியமானது?
புத்தரின் போதனைகள் அனைத்தும் மக்களை நல்வழிப்படுத்தும் வாழ்க்கைக்கான போதனைகளாகும்.
ஏப்ரல் 21 ஆம் திகதி தங்கள் வணக்க ஸ்தலங்களில் ஒரு சாரார் தங்களது கடவுளை வணங்கிக் கொண்டிருந்தார்கள். வேறு ஒரு பிரிவினர் அவர்களைக் கொலை செய்தார்கள். இறைவனின் பெயராலே இந்தக் கொலைகள் நடந்தேறின. அவர்கள் இறைவனைச் சாந்தப்படுத்துவதற்காகவே கொலை செய்தார்கள். ஒன்பது தற்கொலைக் குண்டுதாரிகள் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டை முன்னெடுத்தனர். இந்தக் கொலைகள் இறைவனால் அனுமதிக்கப்பட்டது என நம்பிக்கை கொண்டே இந்தப் பயங்கரவாதச் செயலை முன்னெடுத்தனர்.
மத பயங்கரவாதத்துக்கு இன்று தீர்வு காணுவதென்றால் பௌத்தமே ஒரே தீர்வாகும். பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காணுவதற்கு நாம் விரும்புகிறோம். பயங்கரவாத செயற்பாடுகளின் மூலமல்ல. நாங்கள் பயங்கரவாதிகளல்லர்.
Qபௌத்தம், இலங்கையில் இஸ்லாம் போன்ற மதங்களினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று கூறினீர்கள்?
பௌத்தர்கள் புத்தரின் போதனைகளைப் பின்பற்றாத சந்தர்ப்பங்களில் மாத்திரமே பௌத்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக ஒரு கருத்து நிலவுகிறது. இரக்கம், பரிவு, சுயகட்டுப்பாடு போன்ற புத்தரின் போதனைகள் மீறப்படும் போதே பௌத்தம் அச்சுறுத்தலுக்குள்ளாகிறது?
பௌத்த கோட்பாடுகளும் மற்றும் பௌத்த கலாசாரமும் இரு வேறுபட்டவைகளாகும்.
Q பௌத்த கோட்பாடுகள், பௌத்த கலாசாரம் இவை இரண்டிலும் எது மிகவும் முக்கியமானது?
இரண்டுமே முக்கியமானது. பௌத்த கோட்பாடுகளை எவராலும் அழிக்க முடியாது. என்பது உலகளாவிய உண்மையாகும் என்றாலும் பௌத்த கோட்பாடுகள் செழித்தோங்குவதற்கும், வளர்ச்சி பெறுவதற்கும் பௌத்த கலாசாரம் அவசியமாகும்.
40 தலைமுறைகள் அல்லது அதற்கும் முன்பு பௌத்தர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் நாடுகளில் வாழ்ந்தார்கள். ஆப்கானிஸ்தானில் பௌத்த சந்ததிகளின் மூதாதையர்கள் இஸ்லாமியர்களானதும் முன்னோர்களால் அமைக்கப்பட்ட புத்தர் சிலைகள் அழிக்கப்பட்டன. இந்நாடுகளில் பௌத்த குருமார்கள் பௌத்த கோட்பாடுகளையும், பௌத்த கலாசாரத்தையும் நிலைநிறுத்தியிருந்தனர். ஆனால் இந்நாடுகளில் இஸ்லாமிய ஆட்சியேற்பட்டதும் பௌத்த கலாசாரம் அழிவுக்குள்ளானது. பௌத்த கோட்பாடுகளும் அழிவுற்றன.
இந்தியாவை நோக்கினால் இந்தியா புத்தரின் இடமாகும். அங்கும் பௌத்தம் அழிவுக்குள்ளானது. பௌத்தத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் பௌத்த கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் பௌத்தம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பெளத்த கோட்பாடுகளும், கலாசாரமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
எனவே இலங்கை பௌத்த நாடு என்ற வகையில் எம்மால் பல செயற்பாடுகளை முன்னெடுக்க முடிகிறது. புத்தர் சிலைகளை நிறுவுகிறோம். பௌத்த ஆலயங்களை அமைக்கிறோம். பௌத்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறோம். இதன் மூலம் பௌத்த கலாசாரத்தை வாழவைக்க முடிகிறது.
Qநீங்கள் இஸ்லாம் பற்றிய பயத்தை (இஸ்லாமோபியா) உருவாக்குவதாக சிலர் குற்றம் சுமத்துகிறார்கள். உண்மையில் அவ்வாறான அச்சுறுத்தல் இருக்கின்றதா?
தயவு செய்து நீங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும். நான் இலங்கை சம்பிரதாய முஸ்லிம்களைப் பற்றிப் பேசவில்லை. அவர்கள் இலங்கைக்கு வர்த்தக நோக்கத்துடன் வருகை தந்ததிலிருந்து சமாதானத்துடனே வாழ்கிறார்கள். அவர்கள் சிங்களப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். அப்பெண்கள் இஸ்லாத்தை தழுவிக்கொண்டார்கள். இந்நாட்டின் பௌத்த சம்பிரதாயங்கள், பாரம்பரியங்கள் என்பவற்றை மதித்து கௌரவித்து அவர்கள் தங்களது சமயத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். சம்பிரதாய முஸ்லிம்கள் வஹாபி, ஸலபி, தப்லீக், தேவ்பந்து, இஃவான் மற்றும் தவ்ஹீத் அமைப்புகளின் கொடூரமான நிகழ்ச்சி நிரல்களை கையாள்வதில்லை.
கடந்த 40 வருடங்களாக இந்த அமைப்புகள் பலமாக வளர்ச்சியடைந்துள்ளன. இந்த அமைப்புகளுக்கு சவூதி அரேபியா நிதி உதவி வழங்குகிறது. இந்த அமைப்புகள் இலங்கையில் இஸ்லாமிய கோட்பாடுகளை மாற்றியமைத்துள்ளன.
இவர்களால் சூபி முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் சூபிக்கள் அவமதிக்கப்படுகிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள்.
Q பொதுபல சேனாவின் வெறுப்புணர்வு பேச்சுகளால் சினமூட்டப்பட்ட முஸ்லிம்கள் சஹ்ரான் ஹாசிம் போன்ற அடிப்படைவாத குழுக்களுடன் இணைந்தனர் எனவும் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு இது சாதகமாக அமைந்தது என்றும் குற்றம் சுமத்தப்படுகிறது. அத்தோடு 2014 ஆம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற வன்செயல்களுக்கு நீங்களே காரணம் என குற்றம் சுமத்தப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் காரணமாக சஹ்ரான் தானாகவே இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறதே?
ஞானசார தேரர் சிரித்துக்கொண்டே பதிலளிக்கிறார். இப்போது இவ்வாறு கூறப்படுகிறதா? அப்படியென்றால் ஐ.எஸ்.பயங்கரவாதத்துக்கு இப்போது நாங்களா காரணம்?
Q அளுத்கமவில் வன்செயல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு நீங்கள் ஆற்றிய உரையில் நீங்கள் பயன்படுத்திய வசனங்கள் தொடர்பில் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?
போய் வன்செயல்களை ஆரம்பியுங்கள் என்று நான் கூறவில்லை. எனது உரையின் பின்பு நாங்கள் அமைதியாக கலைந்து சென்றோம். அப்போது அளுத்கமையில் சில முஸ்லிம் இளைஞர்களால் குருமார்கள் மீதும் பௌத்தர்கள் மீதும் கல் எறியப்பட்டது. இதனால் சிங்கள மக்கள் சினமடைந்தார்கள்.
எங்களது குருமார்களில் ஒருவரின் வாகனம் சில முஸ்லிம்களால் அளுத்கமயில் தாக்கப்பட்டது. எனது உரை இந்தச் சம்பவத்தின் பின்பே இடம்பெற்றது.
Q2014 சம்பவத்துக்கு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளே காரணம் என பொதுபலசேனா குறிப்பிட்டுக் கூறியது, இவ்வருட ஆரம்பத்தில் நாட்டின் சில பகுதிகளில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையை பெரும்பாலான எழுத்தாளர்களும், ஏனையவர்களும் அறிவார்கள். இது தொடர்பில் எழுதினால் பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதால் அவர்கள் தயக்கம் காட்டினார்கள். எழுதவில்லை?
ஊடகங்கள் நாங்கள் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி எங்களை எப்போதும் துரத்திக் கொண்டிருக்கின்றன. நாங்கள் 2014 இல் குரல் எழுப்பினோம். ஏனென்றால் எங்களுக்கு எதிராக என்ன நடக்கிறது என நாம் தெரிந்து வைத்திருந்தோம். முஸ்லிம் தீவிரவாதிகளால் எங்கள் குருமார் நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். இலங்கை முஸ்லிம் தீவிரவாதிகளில் சிலர் சிரியாவில் ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக 2014 இல் எமக்கு தகவல்கள் கிடைத்தன. நாம் இதனைக் கூறியபோது மறுக்கப்பட்டது. அன்று நாம் கூறியவைகள் அனைத்தும் இன்று நடந்தேறியுள்ளன. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். நாங்கள் இனவாதிகள் என்று குற்றம் சுமத்தப்படுகிறது.
சில முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் உலக முஸ்லிம் தீவிரவாதிகளுடன் தொடர்புபட்டுள்ளார்கள் எனும் தகவல்கள் எம்மிடமுள்ளன. அவ்வாறான தீவிரவாதிகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எம்மிடமுள்ளன.
முஸ்லிம் இளைஞர்கள் போலி கடவுச்சீட்டுகள் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியுள்ளார்கள். அதற்கான தகவல்கள் எம்மிடமுள்ளன. கிறிஸ்தவ பெயர்களிலே அவர்கள் நாடு திரும்பியுள்ளார்கள். அத்தோடு இலங்கையிலிருந்து அவர்கள் சவூதி அரேபியாவுக்கு முஸ்லிம் பெயர்களிலே சென்றிருக்கிறார்கள்.
தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாஅத் 2014 இல் நடாத்திய மாநாடு குறிப்பாக ஏப்ரல் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் தொடர்பான குறிப்பொன்று என்னிடமுள்ளது. அந்தக் குறிப்பினை நானே தயாரித்தேன். ஏன் இந்த தீவிரவாதி அப்போது கைது செய்யப்படவில்லை. சஹ்ரான் வெளிப்படையாக வஹாபிஸத்தைப் பரப்பினார். மற்றும் ஐ.எஸ். கொள்கைகளைப் பரப்பினார். சூபிகளின் அடக்கஸ்தலங்களை அழித்தார். முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்வதற்கு ஆயுதமேந்துமாறு முஸ்லிம்களை வேண்டினார்.
Q நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தீர்களா?
நாங்கள் 2014 இல் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கு அறிவித்தோம். முறைப்பாடுகள் செய்தோம்.
Q முஸ்லிம் சமூகத்தின் உயர்மட்ட அமைப்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையை நீங்கள் கடுமையாக எதிர்க்கிறீர்கள்? அவர்கள் வஹாபிஸ கோட்பாடுகளை கடைப்பிடிப்பதாக குற்றம் சுமத்துகிறீர்கள்?
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 90 வீதத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் வஹாபிஸ கொள்கையைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் நபிகள் நாயகத்தின் பிறந்த தின நினைவு குறித்து எந்தவோர் செய்திகளையும் (Message) வெளியிடுவதில்லை. வஹாப்வாதிகள், சலபிகள் மற்றும் இஸ்லாத்தின் தீவிரவாத கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. நினைவு கூருவதில்லை. ஆனால் இலங்கையிலுள்ள சம்பிரதாய முஸ்லிம்கள் நபிகளாரின் பிறந்த தினத்தை கொண்டாடுவார்கள். நான் இங்கு ஒரு சிறு உதாரணத்தையே குறிப்பிட்டேன். நூற்றுக்கணக்கான உதாரணங்களை என்னால் முன்வைக்க முடியும். சூபி முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களது பத்வாக்களையும் இங்கு குறிப்பிடலாம்.
Q கடந்த ஜூலை மாதம் 7 ஆம் திகதி பௌத்த மாநாடு கண்டியில் இடம்பெற்றது? அங்கு நீங்கள் உங்களது இலக்கு ‘சிங்கள பாராளுமன்றம்’ என்று தெரிவித்தீர்கள். இது நடைமுறைச் சாத்தியமாகுமா? இலங்கையர்கள் இதற்கு ஆதரவு வழங்குவார்களா?
அரசியல் கட்டமைப்பில் சிங்களவர்கள் அல்லாதவர்கள் இருக்கக் கூடாது என்று நான் தெரிவிக்கவில்லை. பாராளுமன்றம் நாட்டின் உண்மையான நிலைமையினை மறைப்பதாகவும், சிங்களவர்களின் உரிமைகளை நலிவடையச் செய்வதாகவும் இருக்கக் கூடாது என்றே தெரிவித்தேன். எமது நாட்டின் தேசிய கல்வி முறைமை இனவாதத்தை பரப்புவதாக இருக்கக்கூடாது. அந்த வகையில் கல்வித் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். இன்று இன ரீதியிலான பாடசாலைகளே இயங்கி வருகின்றன. இதுவே பிரச்சினையாகும்.
Q நீங்கள் வெளிநாட்டு உதவிகள் பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறதே?
(சிரிக்கிறார்) வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையரிடமிருந்தே எமக்கு நிதியுதவிகள் கிடைத்து வருகின்றன. வெளிநாட்டு உதவிகள் ஒரு சதமேனும் கிடைப்பதில்லை.
Q ஏப்ரல் குண்டுத் தாக்குதல்களின் பின் முஸ்லிம் சமூகத்தின் மீது பகைமை உணர்வு அதிகரித்துள்ளது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் கடுமையாக முஸ்லிம் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது?
வஹாப்வாதிகளின் பயங்கரவாதம் காரணமாக உருவாகியுள்ள இந்நிலைமை கவலைக்குரியதாகும். சாதாரண மக்கள் தற்போது அனைத்து முஸ்லிம்களையும் சந்தேகிக்கின்றனர்.
நன்றி: The Week.
vidivelli